நம் வாழ்வில் சில எளிமையான விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தையும், குழப்பத்தையும் தவிர்த்து மன அமைதியை பெற முடியும். இதற்கு நீங்கள் பெரிய அளவில் செலவுகள் செய்ய தேவை இல்லை, நீங்கள் உங்கள் மன ஆரோக்கியத்தை காக்க நினைத்தால் போதும். இந்த ஐந்து எளிய விஷயங்கள் மன அமைதியை பெற உதவும்.
1. ஜர்னலிங் (டைரி எழுதுவது):
ஒரு மனிதனின் மனதில் எண்ணற்ற சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும். இந்த எதிர்மறையான சிந்தனைகளை தடுக்க மற்றும் மன ஒழுங்கின்மையை சமாளிக்க சிறந்த வழி ஜர்னலிங். ஏனென்றால், இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை மற்றும் நாம் அதிகமாக மற்றவர்களிடம் பேசுவதும் இல்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு காகிதமும், பேனாவும் சிறந்த நண்பனாக இருக்க முடியும். உங்கள் மனதில் இருப்பதை எழுதுவது மூலம் உங்களுக்கு பாரம் குறைந்தது போல இருக்கும்.
உங்கள் மனதை பாதிக்கும் விஷயங்களை எழுதுவது மூலம் மன அமைதியை பெற முடியும். அதுமட்டுமின்றி இது மிகவும் எளிமையான வழியாகும். மனதில் இருக்கும் சிந்தனைகளை நாம் எழுதுவது மூலம் மனம் இலகுவாகும்.
2. தியானம்:
நம் மனம் கட்டுப்பாடு இன்றி அலைபாயும்போது சிந்தனைகள் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. சிறையில் அடைபட்டது போல் இருக்கும் மனநிலையில் இருந்து விடுபடும் ஆற்றலை தியானம் மூலம் பெற முடியும்.
தியானம் செய்ய தினமும் 10 அல்லது 20 நிமிடங்கள் மட்டுமே உங்களுக்கு தேவைப்படும். அன்றாட வாழ்வில் தினமும் இந்த நேரத்தை உங்கள் தனிப்பட்ட நேரமாக ஒதுக்குங்கள். ஆழ்ந்து சுவாசிப்பதிலும், நல்ல உறுதி மொழிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இது உங்களை நிதானமாக்கும். உங்கள் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தும். நீங்கள் வழிகாட்டப்பட்ட தியானத்தை பின்பற்றலாம் அல்லது உங்கள் சுவாசத்தில் மட்டும் கவனம் செலுத்தலாம்.
3. யோகா:
மனம் மட்டும் உடல் ஆரோக்கியம் வேறுபட்டவை அல்ல மாறாக அவை இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டவை. மனநல சிகிச்சையாளர்கள் மனதை ஒரு நிலையில் வைக்க சில உடல் செயல்பாடுகளை பரிந்துரைக்கின்றனர். உடல் அசைவுகள் மூலம் உங்கள் உடம்பில் மகிழ்ச்சியை தரக்கூடிய டோபமைன் ஹார்மோன் வெளியாகிறது. இது உங்களை சாந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைக்க உதவுகிறது.
உடல் செயல்பாடுகளில் ஈடுபட நினைக்கும் ஒருவருக்கு யோகா நல்ல முடிவாக இருக்கும். ஏனெனில், அது தொடங்குவதற்கு எளிதானது மட்டும் இன்றி யோகா செய்வதற்கு அதிக இடமும், பொருளும் தேவைப்படுவதில்லை. யோகா செய்வது மூலம் உடம்பில் இருக்கும் தசைகள் நீட்டப்பட்டதன் விளைவாக உடலுக்கு லேசான தன்மை கிடைக்கும். யோகா செய்யும் போது அதிக சுவாசம் தேவைப்படுவதால் அது மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை வழங்குகிறது. இதனால் மூளை அமைதியாகிறது.
4. கலை சிகிச்சை (ஓவியம்):
மன அமைதி பேணுவதற்கு மற்றொரு வழி கலைகளில் உங்களை ஈடுபடுத்துவது. எதற்காக நீங்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதேபோல் அழகான ஓவியங்களை உருவாக்க வேண்டும் என்பது இல்லை. வெறும் காகிதத்தில் வண்ணங்களை வைத்து விளையாடினால் மட்டுமே போதும். ஒவ்வொரு வண்ணத்தை பார்க்கும் போது நமது மனம் வித்தியாசமாக செயல்படும். மருத்துவர்களும் இதனை செய்வது மூலம் மனதை லேசாக முடியும் என கூறுகின்றனர்.
வண்ணங்களை பயன்படுத்துவது மூலம் உங்கள் மனநிலையை அது உற்சாகப்படுத்துகிறது. பெரியவர்களுக்காக நிரப்பப்பட வேண்டிய எண்ணற்ற வடிவமைப்புகளை கொண்ட புத்தகம் உள்ளது. இதற்கு அதிக முயற்சி தேவையில்லை. அதனை நிறங்களை வைத்து நிரப்புவதற்கு எந்த விதிமுறைகளும் கிடையாது. ஆனால், நீங்கள் அதை செய்து முடித்தவுடன் எதையோ சாதித்தது போல உணர்வீர்கள்.
5. செயல்களை தீர்மானிப்பது மற்றும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது:
மன அமைதிக்கு தேவையான மற்றொரு விஷயம் முன்கூட்டியே என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது. நாம் என்ன செய்ய வேண்டும் என முன்பே தீர்மானிப்பதன் மூலம் நாம் மன ரீதியாக அதற்கு தயாராகிறோம். இப்படி செய்வதன் மூலம் நாம் நேரத்தை வீணடிக்காமல், எதையும் மறக்காமல் செய்ய வேண்டிய வேலைகளை சரியான நேரத்திற்கு செய்து முடிப்போம்.
அதுமட்டுமின்றி வாழ்க்கை வெறிச்சோடி இருப்பதாக நீங்கள் நினைத்தால் தினமும் புதிதாக ஏதாவது ஒன்றை செய்யுங்கள். அது ஒரு மொழியை கற்றுக் கொள்வதாக இருக்கலாம் அல்லது ஒரு செடி நடலாம் அல்லது புதிதாக ஏதாவது சமைக்க கூட செய்யலாம். இப்படி தினமும் ஏதோ ஒன்றை புதிதாக கற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை சளிப்படையாமல் இருக்கும். இதன் மூலம் மன ஆரோக்கியமும், சமநிலையையும் உருவாக்க முடியும்.
இந்த ஐந்து விஷயங்களையும் நீங்கள் ஒரே நாளில் இருந்து செய்ய வேண்டும் என நினைப்பதும் தவறு. ஒன்றின் பின் ஒன்றாக கூட நீங்கள் இதை பழகிக் கொள்ளலாம். இது பழகுவதற்கு சிறிது நேரம் எடுத்தாலும் நீங்கள் மனம் தளராமல் உங்கள் மன அமைதியை காக்க தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.