பெண்களுக்கு பாராட்டு அவர்களின் அறிவிற்கு கிடைப்பதை விட வெளி தோற்றத்துக்கே பெரும்பாலும் கிடைக்கின்றன. ஒரு பெண்ணை "தைரியமானவள்" என்பதை விட "அழகானவள்" என்று வர்ணிப்பது மிகவும் பொதுவானது. பல பாராட்டுக்கள், பெண்களை ஊக்குவிப்பதாக இருந்தாலும், இறுதியில் அவர்களை இழிவுபடுத்துகிறது. இந்த 7 பாலியல் கருத்துகளைப் பாராட்டுக்களாகக் கருதுவதை நிறுத்துங்கள்.
1. பரவால்ல அழகாவும் இருக்க, அறிவாவும் இருக்க:
இது உங்களை மகிழ்ச்சி படுத்தலாம். ஆனால், இது உண்மையான பாராட்டு இல்லை. காலம் காலமாக பெண்கள் ஒன்று அழகாக இருப்பார்கள் அல்லது அறிவாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இவை இரண்டும் ஒரு பெண்ணிற்கு இருந்தால் அதனை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
அழகான பெண்கள் அறிவாக இருக்க மாட்டார்கள் என்றும், அறிவாக இருக்கும் பெண்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என்றும் இந்த சமூக கருத்தை இது உறுதிப்படுத்துகிறது. இதுவும் ஒரு விதமான பாலின பாகுபாடு ஆகும். ஏனெனில், இதை பெரும்பாலும் ஆண்களை பார்த்து யாரும் சொல்லுவதில்லை, பெண்களை பாராட்ட நினைக்கும் பொழுது தான் இதை பயன்படுத்துகிறார்கள்.
2. மூக்கும், முழியுமா நல்லா இருக்க, கொஞ்சம் வெயிட் குறைச்சா இன்னும் நல்லா இருப்ப:
சொந்தக்காரர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும் இதை ஒரு பாராட்டாக நினைத்து கூறுகின்றனர். ஆனால் இதில் உடல் பருமனாக இருக்கும் பெண்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என்ற நியாயமற்ற கருத்தும் அடங்கியுள்ளது. பெண்களை எடையை குறைக்க சொல்வதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பது இந்த சமூகம் அழகு என்று சில உடல் வடிவங்களை அமைத்துள்ளது தான். ஒல்லியாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற எதிர்மறையான கருத்தை பதிவிடுகிறது இந்த பாராட்டு.
3. பொண்ணா இருந்துட்டு நல்லா வண்டி/ கார் ஓட்டுற:
இந்திய சாலைகளில் பெரும்பாலும் ஏதேனும் ஒரு விபத்து அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் பெண் தான் வண்டியை ஒட்டி இருப்பதாக கருதுகின்றனர். அது மட்டும் இன்றி "பொண்ணா ஒழுங்கா வீட்ல இருக்காத விட்டுட்டு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை" என்று பலர் கூறி நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
கடந்த பல ஆண்டுகளை திரும்பிப் பார்த்தால் ஆண்களை வெளியே சுதந்திரமாக செல்ல விட்டு, பெண்களை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார்கள். அதனால் பெண்களை விட ஆண்களுக்கு இது பழக்கமான ஒன்று. ஆனால், அதற்காக இன்னும் பெண்களுக்கு அந்த திறமை இல்லை என்று அர்த்தம் கிடையாது. எனவே, "பொண்ணா இருந்துட்டு நல்லா வண்டி ஓட்டுற" என்பது ஒரு பாராட்டு அல்ல மற்ற பெண்களையும், அவர்களின் பாலினத்தையும் தாழ்த்தி பார்ப்பது போல் இருக்கிறது.
4. குண்டா இருந்தாலும் நல்லா பிளேக்சிபிள்ளா (flexible) இருக்கியே:
ஒல்லியாக இருப்பவர்கள் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர்கள் தான் எந்த ஒரு தடையும் இன்றி குனிந்து, எழுந்து, ஓடி, ஆடி உற்சாகமாக இருப்பார்கள் என்றும் இந்த சமூகம் கருதுகிறது. எனவே, உடல் பருமனாக இருப்பவர்கள் இதையெல்லாம் செய்தால் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். உடல் பருமனுக்கும் பிளேக்சிபிலிட்டிக்கும் பெரும்பாலும் எந்த தொடர்பும் கிடையாது.
அது ஏன் ஆச்சரியமாக இருக்கிறது என்றால் சிறு வயதில் இருந்து குண்டாக இருப்பவர்களை அவர்களின் எடையை வைத்து கலாய்த்து, நக்கல் அடித்து அவர்களின் நம்பிக்கையையும், தைரியத்தையும் உடைக்கிறார்கள். அதனால் அவர்களின் திறமையை வெளியே காட்டுவதில்லை. எப்போதாவது ஒரு சிலர் அந்த தடைகளை உடைத்து அவர்கள் திறமையை காட்டினால் அவர்களை பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது.
5. கருப்பா இருந்தாலும் கலையா இருக்க:
உடல் எடையை வைத்தும், அளவை வைத்தும் அழகிற்கு வரம்பு விதிக்கப்பட்டது போலவே நிறத்தை வைத்தும் அழகுக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. சிவப்பாக இருப்பவர்கள் தான் அழகாக இருப்பதாகவும், கருப்பாக இருப்பவர்கள் அழகாக இல்லை என்ற கருத்தும் சமூகத்தில் பரவலாக பரவியுள்ளது. அதனால் கருப்பாக இருப்பவர்கள் அழகாக இருப்பதை அவர்கள் உணர்ந்தாலும் அதனை முழுமையாக ஒற்றுக் கொண்டு "அழகா இருக்க" என்று சொல்லாமல் "கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இருக்க" என்று தான் கூறுகிறார்கள்.
6. நீ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல:
இதை உங்கள் காதலன் அல்லது ஆண் தோழர்கள் கூறி நீங்கள் கேட்டிருப்பீர்கள். இது ஒரு பாராட்டு அல்ல. பெண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று அவர்களின் எண்ணத்தை குறிக்கிறது. சில சமயம் ஆண்கள் அவர்களின் காதல் வலையில் உங்களை விழ வைப்பதற்காக கூட கூறலாம். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதை கூறுவது மூலம் நீங்கள் அவர்களுக்கு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுவதை விட, அவர்கள் எதிர்பார்ப்பின்படி அவர்களின் ஆணாதிக்க செயல்களை பொறுத்துக் கொள்ளும் ஒரு பெண்ணாக இருக்கிறீர்கள். ஏனென்றால், இதனை கூறும் ஆண்கள் கடந்த காலத்தில் சந்தித்த பெண்கள் அனைவரும் சமத்துவத்தை எதிர்பார்ப்பவர்கள் ஆக இருந்திருக்கலாம்.
7. உன்ன ஆம்பள பிள்ளை மாதிரி வளர்த்தோம்:
இது வீட்டில் உள்ள பாலின பாகுபாட்டை குறிக்கிறது. பெற்றோர்கள் இதனை ஒரு முன்னேற்றமாக பார்க்கிறார்கள். ஆனால் இதை பெரும்பாலும் நாம் ஏதாவது தவறு செய்தால் அல்லது அவர்கள் விதிக்கப்பட்ட விதைகளை மீறினால் தான் இதை பயன்படுத்துகிறார்கள். அதாவது அவர்கள் சிறுவயதில் இருந்து பெண் பிள்ளைகளை சுதந்திரமாக வளர்த்ததின் விளைவாக தான் இந்த தவறு நடந்திருக்க கூடும் என எண்ணி “உன்னை ஆம்பள புள்ள மாதிரி வளர்த்தோம்” என்று கூறுகின்றனர். இதைக் கூறும் பொழுது மறுபடியும் ஆண் பிள்ளைகளையும் உயர்த்தி போற்றி, பெண் பிள்ளைகள் அந்த சுதந்திரத்திற்கு தகுதியில்லாதவர்கள் போல் பேசுகிறார்கள்.
இந்த ஏழும் சிலர் இதைப்பற்றி தெரியாமல் இதை உண்மையான பாராட்டு என்று நினைத்து கூட கூறலாம். எனவே, நீங்கள் யாராவது இதை பயன்படுத்துவதை பார்த்தால் இனி இதை பயன்படுத்தாதீர்கள் என்றும் அதனின் பின்னுள்ள விளக்கத்தையும் அவர்களுக்கு கூறுங்கள். மேலும் உங்களுக்கு தெரிந்தவர்கள் இதை பாராட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க அவர்களுடன் இதை பகிருங்கள்.