Advertisment

சுதந்திரமான தீபாவளியும், சுற்றுச்சூழலின் அழிவும்

author-image
Devayani
New Update
Diwali

தீபங்கள் மற்றும் விளக்குகளால் மின்னும் வீடுகள், பட்டாசுகளுடன் உல்லாசமாக இருக்கும் குழந்தைகள், சுவையான உணவு மற்றும் இனிப்புகளின் நறுமணத்தில் நிரம்பி வழியும் வீடுகள், புதிய ஆடையில் பிரகாசித்த முகங்கள் இவ்வாறு தான் நம்மில் பலருக்கு தீபாவளி இருந்திருக்கும்.

Advertisment

தீபாவளி திருநாள் நம் வாழ்க்கையை ஒளிமயமாக அமைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நாம் தீபாவளியை கொண்டாடுகிறோம். தீபாவளி முடிந்து இன்னும் நம் உடம்பில் அந்த களைப்பு கூட மறைந்திருக்காது. நீங்கள் தீபாவளியை முழுமையாக கொண்டாடினீர்கள் என்பதற்கு இந்த களைப்பு தான் சான்று. ஆனால், தீபாவளி முடிந்தவுடன் மக்களாக நம் பொறுப்புகளை உணராமல் நாம் மற்ற வேலைகளை பார்க்க சென்று விடுகிறோம்.

தீபாவளிக்கு பிறகு சில விஷயங்களை பலரும் கவனிப்பதில்லை. அதில் ஒன்று பட்டாசுகளின் கழிவு. நம்மில் பலரும் பட்டாசு வெடிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடையும் என்று அறிவோம். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் தானே வெடிக்கிறோம் என்று நினைத்து பலரும், சிறு வயது நினைவுகளை திரும்பிப் பெறுவதற்காக சிலரும், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட பலரும் பட்டாசுகளை வெடிக்கின்றனர். அவர்களுள் பலர் அரசு விதிக்கப்பட்ட விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. ஆனால் இன்று நாம் பட்டாசு வெடிப்பதை பற்றி பார்க்க போவதில்லை. பட்டாசு வெடித்து முடித்தவுடன் மக்கள் பொறுப்பற்று அந்த குப்பைகளை திறந்தவெளியில் அப்படியே போட்டுவிட்டு அடுத்த வேலைக்கு செல்வதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.

தீபாவளிக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசு கழிவுகள் குவிந்துக்கிடப்பதை நாம் பார்க்கக்கூடும். கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் 138 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டனர். தீபாவளி முடிந்தவுடன் நாம் இது போன்ற பட்டாசு கழிவுகளை நம் வீட்டில் முன்பு பார்த்திருப்போம். ஆனால் நம்மில் எத்தனை பேர் அதற்கு பொறுப்பேற்று கொண்டோம்? சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வது நம் கடமை என எத்தனை பேர் கருதுகிறோம்? 

Advertisment

தீபாவளிக்குப் பிறகு ஏற்படும் இந்த கழிவுகளுக்கு யார் பொறுப்பு?

பட்டாசுக்கு தடை விதிப்பது இன்னும் விவாதத்திற்குரிய ஒன்றாக தான் இருக்கிறது. ஆனால் அதற்காக பட்டாசு கழிவுகளை தெருகளில் போடுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. தடைகள் இல்லாமல் சுதந்திரமாக தீபாவளியை கொண்டாட நினைக்கும் நாம், அதன் பின் விளைவுகளின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். முன்பு கூறியது போலவே பட்டாசு வெடிப்பது சரியா? தவறா? என நாம் விவாதிக்கவில்லை. அதற்கான விவாதங்கள் இங்கு நிறைய உள்ளது. நம் சமூகத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது நம் பொறுப்பு என நாம் ஏன் கருதுவதில்லை? என்பதுதான் கேள்வி. பட்டாசு கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கும், எதிர்காலத்திற்கும் பல மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என்பதை ஏன் புரிந்து கொள்ள தவறிகிறோம்? தடையில்லாமல் பட்டாசு வெடிக்க நினைக்கும் நாம் சுற்றுச்சூழலிலும், மக்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை ஏன் மறந்து விடுகிறோம்?

பட்டாசு வெடிக்க சுதந்திரத்தை தேடும் நாம், அதன் பின் விளைவுகளையும் சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். தீபாவளி அன்றும், அதற்கு பிறகும் குவிந்து கிடக்கும் கழிவுகளை சுத்தம் செய்து, அரசு முடிவு செய்யும் விதிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். 

நாம் உருவாக்கும் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணியை சுகாதார பணியாளர்களிடம் விட்டு விடுவது சுயநலமாகும். அவர்களின் கடமை தெருக்களை சுத்தமாக வைத்திருப்பது தான். ஆனால், அதற்காக நாம் சுயநலமாக செய்யும் பொறுப்பற்ற செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. எனவே, நாம் சுயநலமாக இருப்பதை விட்டுவிட்டு சுற்றுச்சூழலுக்கு நன்மை அளிக்குமாறு செயல்பட வேண்டும். அதுவே, நம் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பை அளிக்கும்.

இது தீபாவளிக்கு மட்டுமல்ல அனைத்து பண்டிகைகளுக்கும் பொருந்தும். நாம் கொண்டாடும் பண்டிகைகளில் எதுவாக இருந்தாலும் அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எனில் அதற்கு நாம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். பட்டாசு வெடிப்பது நம்மில் பலருக்கு மகிழ்ச்சியை தரும். ஆனால், அந்த மகிழ்ச்சியில் சுற்றுச்சூழலுக்கான நமது கடமைகளை நாம் மறக்கக்கூடாது. நாம் அவ்வாறு மறந்து விடுவதால் நாம் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அரசு தடை விதிப்பது நியாயம்தானே? ஏனென்றால், எதிர்காலம் என்று ஒன்று இல்லை என்றால் அடுத்த தீபாவளி அல்லது மற்ற பண்டிகைகளை எப்படி கொண்டாடுவீர்கள்.

தீபாவளி சுற்றுச்சூழல்
Advertisment