இந்த சமூகத்தின் பார்வையில் பெண்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. வேலையோ, இன்பமோ, பணமோ எதுவாக இருந்தாலும் அதை கேட்பதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் இருப்பதை வைத்து மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும் பெண்களையே இந்த சமூகம் நல்ல பெண்களாக ஏற்றுக் கொள்கிறது. அதிகம் எதிர்பார்க்காத பெண்களை தான் “தியாகிகள்” என்றும் “இயல்பாக வாழ்கிறார்கள்” என்றும் போற்றுகிறது. அவர்களுக்கு “சிறந்த பெண்” என்ற பட்டத்தையும் இந்த சமூகம் வழங்குகிறது.
தங்கள் தேவைகளை வெளிப்படுத்தும் மற்ற பெண்களை அவர்களுடன் ஒப்பிட்டு, அவர்களின் தன்மையை குறைவாக மதிப்பிடுகின்றனர். ஆனால், இப்படி செய்வது சரியா? பெண்கள் எதை கொடுத்தாலும் சந்தோஷப்படும் பொம்மையாக செயல்பட வேண்டுமா? சமூகம் ஆண்களை எப்பொழுதாவது தங்கள் ஆசைகளை கட்டுப்படுத்தும் படி கூறுகிறதா?
உங்கள் தாய் தனக்காக இது வேண்டும் என்று எத்தனை முறை கேட்டு நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? அந்த கோரிக்கைகள் எத்தனை முறை நிறைவேற்றப்பட்டு நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? பெண்கள் அவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தேவைகளை வைத்து திருப்தி அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் பெண்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும், அவர்கள் விரும்பும் விஷயங்கள் வழங்கப்படுகிறதா என்றால், இல்லை. உதாரணத்திற்கு, பெண்களுக்கு அவர்களின் கணவரால் நிதி பாதுகாப்பு வழங்கப்படுகிறது, ஆனால் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க அனுமதி இல்லை மற்றும் பணம் ரீதியாக எந்த ஒரு சுதந்திர முடிவும் அவர்களால் எடுக்க முடியாது. பெண்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது, ஆனால் ஆணாதிக்கம் அது விரும்பும் போது அதற்கு இடைநிறுத்தம் செய்யலாம். அவர்களுக்கு பட்டமளிப்பார்கள் ஆனால் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லலாமா? வேண்டாமா? என்பதை ஆணாதிக்கம் தான் முடிவு எடுக்கிறது.
சிறுவயதில் இருந்தே அதிகம் எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லியே பெண் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். திருமணத்தில் கூட அதிகம் எதிர்பார்க்கக் கூடாது என்றும் எது கிடைக்கிறதோ அதை வைத்து வாழ கற்பிக்கப்படுகிறது. பெற்றோர்கள், மாமியார் மற்றும் கணவனிடம் இருந்து நிறைய அன்பும், ஆதரவும் எதிர்பார்க்க வேண்டாம் என கூறியும் தங்குவதற்கு வீடும், உண்ண உணவும், உடுத்த உடையும் வழங்கும் வரை வேறு எதுவும் பெண்ணின் வாழ்க்கைக்கு தேவை இல்லை என இந்த சமூகம் கருதுகிறது. மேலும் கணவன் அடித்தாலும் அல்லது அவர்கள் வன்கொடுமையில் அவதிப்பட்டாலும் அதை சமூகத்தில் சொல்லாமல் இருப்பதே குடும்பத்திற்கு கவுரவம் என நினைக்கிறார்கள்.
பெண்கள் அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படையான விஷயத்திற்காக நன்றியுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பாகுவது சரியா? பெண்கள் தங்கள் குணங்கள் மற்றும் திறமைகளில் அடிப்படையில் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ ஆசைப்படக் கூடாது என்று எதிர்பார்ப்பது நியாயமா?
பெண்கள் தங்களுக்கு தேவையானதை கேட்க தொடங்கி விட்டனர். மனிதர்களாக பாடுபடுவதும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதும் அவர்களின் உரிமை. பெண்கள் அதிகமாக கோரிக்கைகளை வைக்கின்றனர், அதிகமாக ஆசைப்படுகின்றனர் என்று எதுவும் இல்லை ஏனென்றால், நமது ஜனநாயக நாட்டில் குடிமக்கள் அவர்கள் விரும்புவதை சாதிக்க சுதந்திரம் உள்ளது. ஆகவே, பெண்களையும் நம் நாட்டின் சுதந்திர குடிமக்களாக கருதுவோம்.