"பெண்கள் வீட்டை கையாளட்டும், ஆண்கள் பணத்தை கையாளட்டும்" இதுதான் சமமான பொறுப்புகளுடன் குடும்பத்தை கவனித்துக் கொள்வது என இந்த சமூகம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இது சமமான பொறுப்பா? வீட்டு வேலையும், வெளி வேலையும்(9-5 job) சமமாகுமா? வெளி வேலைக்கு சம்பளம் வழங்கப்படுவது போல வீட்டு வேலைக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா? வெளி வேலைக்கு விடுமுறை கிடைப்பது போல வீட்டு வேலைக்கு விடுமுறை கிடைக்கிறதா? வெளி வேலைக்கு கிடைக்கும் மரியாதை வீட்டு வேலைக்கு கிடைக்கிறதா?
வீட்டு வேலை ஒரு முடியாத புதிர்:
நம் சமூகம் பெண்கள் ஆண்களை விட வீட்டையும், குடும்பத்தையும் சிறப்பாக கையாளும் திறன் கொண்டவர்கள் என போற்றுகிறது. அப்பொழுது ஏன் வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு மரியாதை வழங்கப்படுவதில்லை. சமூகம் ஏன் பெண்களை அவ்வாறு போற்றுகிறது என ஆழமாக பார்க்கும் போது அது பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைப்பதற்கான ஒரு வழி என நாம் அறிய முடியும்.
வீட்டு வேலை முடிவற்ற பிரம்மை போன்றது. ஒரு முறை அதை செய்ய தொடங்கி விட்டால் அதிலிருந்து வெளியே வர முடியாது. அது நேர வரம்பு இல்லாத உழைப்பு, அதற்கு 24×7 நேரமும் முயற்சியும், கவனமும் தேவைப்படுகிறது. அது மட்டும் இன்றி வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சமைத்துக் கொடுப்பது முதல் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் பார்த்துக் கொள்ளும் வரை மிகப்பெரிய ஒரு பொறுப்பை கையாளுகிறார்கள்.
பெண்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஊதியம் இல்லாத வீட்டு வேலை என்ற எண்ணம், உழைப்பு பற்றிய கருத்து பாலினம் சார்ந்தது என்பதை குறிக்கிறது அல்லவா? எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு அதற்கு பலனாக என்ன கிடைக்கிறது? அவர்கள் ஆசையையும், கனவுகளையும் கைவிட்டு வீட்டையும், குடும்பத்தையும் சுற்றி அவர்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். குழந்தைகளை பெற்றெடுப்பதிலும், வயதானவர்களை கவனித்துக் கொள்வதிலும் மட்டுமே அவர்களின் கவனத்தை செலவிட வேண்டுமா?
"கணவன் பணம் சம்பாதிப்பதை பார்த்துக் கொள்கிறான், நீ வீட்டு வேலையை பார்த்துக் கொள்" என்று கூறும் சமூகம் மனிதர்களை பணத்தின் அடிப்படையில் தான் மதிப்பிடுகிறது. அதனால் பணம் சம்பாதிக்கும் ஆண்களை உயர்ந்தவர்களாகவும், பணம் சம்பாதிக்காமல் வீட்டில் வேலை செய்யும் பெண்களை தாழ்ந்தவர்களாகவும் கருதுகிறது. மேலும் பல சமயத்தில் பெண்களின் சுயமரியாதையை அவர்கள் இழக்க நேரிடுகிறது.
வெளி வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைமை இன்னும் மோசமாகிறது:
பணிபுரியும் பெண்கள் அவர்களின் நேரத்தை வேலையில் செலவிடுவது மட்டுமின்றி வீட்டிலும் தங்கள் கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப செலவுக்காக பாதியை செலுத்த வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு துணையாக இருக்கும் ஆண்கள் வீட்டு வேலையில் பங்கு கொள்ள வேண்டும் அல்லவா?
பெண்கள் ஒரு நாளைக்கு 352 நிமிடங்கள் வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்கள், ஆண்கள் 51.8 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள். 2020ஆம் ஆண்டின் மற்றொரு அறிக்கையில், பெண்கள் தங்கள் வேலை நேரத்தில் 84 சதவீதத்தை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்கள், அதே நேரத்தில் ஆண்கள் 80 சதவீதத்தை ஊதியம் உள்ள வேலைக்குச் செலவிடுகிறார்கள். இந்த பிரிவு எப்படி சமமாகும்?
சமமான உழைப்பு பிரிவு:
இந்த சமூகம் வீட்டை கையாளும் பெண்களுக்கும், பணத்தை கையாளும் ஆண்களுக்கும் இடையில் உழைப்பின் பிரிவு சமமாக தான் இருக்கிறது என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். வீட்டை கையாள்வது சமைப்பது மற்றும் சுத்தம் செய்வது மட்டுமல்ல அது வரவு செலவு திட்டத்தை நிர்வாகிப்பது, குடும்பத்தினரை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது மற்றும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாகும்.
உழைப்பைப் பற்றிய ஆழமான சமத்துவமின்மையை நீங்கள் இன்னும் பார்க்க முடியாவிட்டால், உங்கள் மனநிலையை நீங்கள் கேள்வி கேட்க வேண்டிய நேரம் இதுவாகும். மரியாதை மற்றும் பணத்தின் அடிப்படையில் வீட்டு வேலைகளை, ஊதியம் பெறும் வேலையைப் போலவே மதிப்பிடும்போது மட்டுமே வீட்டில் சமமான உழைப்புப் பிரிவினை அடைய முடியும். ஒரு குடும்பம் பணத்தால் மட்டும் வாழ முடியாது என்பதால் ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்களிக்க வேண்டும். அதற்கு உணவு, சுகாதாரம் மற்றும் திட்டமிடல் தேவை. இதெல்லாம் ஒரு பெண்ணின் கடமை என்றால், ஆண்களை குடும்பத்தின் தலைவராக்குவது எது?