பெண்கள் திருமணத்திற்கு பின்பு வேலைக்கு செல்வதை குறித்து நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஆண்களின் விருப்பம் என்னவாக இருக்கிறது? அவர்கள் வேலைக்கு செல்லும் பெண்ணை மனைவியாக எதிர்பார்க்கிறார்களா அல்லது வீட்டை பார்த்துக் கொள்ளும் பெண்ணை மனைவியாக எதிர்பார்க்கிறார்களா?
வேலைக்கு செல்லும் பெண்களைப் பற்றியும், வீட்டை பார்த்துக் கொள்ளும் பெண்களைப் பற்றியும் இந்த சமூகம் பல கருத்துக்களை சொல்லுகிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல மனைவியாக, மருமகளாக, தாயாக இருக்க மாட்டார்கள் என்று இந்த சமூகம் சொல்லுகிறது. அதேபோல் வீட்டில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் கணவனை சார்ந்து தான் இருக்கிறாய் என்றும் பணரீதியாக கணவருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருக்கிறாள் என்றும் இந்த சமூகம் கூறுகிறது. பல நேரங்களில் பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த சமூகமும், அவளின் புகுந்த வீடும் தான் முடிவு செய்கிறது.
மேட்ரிமோனி தளங்களின் மூலமாக ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் எத்தனை ஆண்கள் வேலைக்கு செல்லும் பெண்களை தங்கள் வாழ்க்கை துணையாக எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதில் பல ஆண்கள் வேலைக்கு செல்லாமல் இருக்கும் பெண்களையே தனது வாழ்க்கை துணையாக எதிர்பார்க்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
2023 சேகரிக்கப்பட்ட டேட்டாவை வைத்து பார்த்தால் ஆண்கள் இன்னும் தங்கள் மனைவி தான் சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது என வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த வேலை எல்லாம் ஒவ்வொரு மனிதரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய வேலையாகும். பல காலமாக ஆண்களுக்கு மனைவி என்ற பெயரில் இதனை செய்யும் ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் வேலைக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் அவர்கள் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு விஷயம் என்னவென்றால் பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்கள் தான் அவர்களின் மேல் திணிக்கப்பட்ட பொறுப்புகளான வீட்டிற்காக சம்பாதிப்பது, செலவுகளை பார்த்துக் கொள்வது தங்கள் மனைவிக்கு தேவையானவற்றை வாங்கித் தருவதையும் ஒரு பாரமாக நினைக்கின்றனர். முதலில், ஆண்கள் குடும்பத்திற்காக சம்பாதிப்பது அவர்களுடைய பொறுப்பு மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சமத்துவத்தை அடைய வேண்டும் எனில் ஆண்கள் வேலைக்கு செல்லும் பெண்களை தங்கள் மனைவியாக தேர்ந்தெடுத்தால் மட்டுமே அவர்களும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க முடியும்.
ஒரு உறவு என்பது சமமான பொறுப்புகளுடன் இருக்க வேண்டும். ஒரு பெண் வேலைக்கு சென்று கணவனின் சம்பாதிக்கும் பொறுப்பில் பங்கு எடுத்துக் கொண்டு செலவுகளை பார்த்துக் கொள்கிறாள் என்றால் கணவரும் பெண்களின் பொறுப்பு என்று கூறப்படும் வீட்டு வேலைகளில் பங்கு கொள்ள வேண்டும். ஒரு பெண் வெளியில் வேலை செய்து கொண்டு, வீட்டு வேலையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியான விஷயம் அல்ல. அது அந்த உறவில் எந்த மகிழ்ச்சியையும் அளிக்கப் போவதுமில்லை. ஆண்கள் எப்படி அவர்களின் வேலையையும், குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறார்களோ அதே போல் பெண்களும் இரண்டையும் பார்த்துக் கொள்வதற்கு ஆண்கள் சமமான பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்று பல குடும்ப சூழ்நிலைகளில் பெண்களும் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடிகிறது. அப்படி இருக்க பெண்கள் வீட்டையும், வேலையையும் பார்த்துக் கொள்வது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எல்லா மனிதர்களைப் போல பெண்களுக்கும் ஓய்வு என்பது வேண்டும். எனவே, பெண்கள் ஆண்களின் பொறுப்பு என்று கூறும் விஷயத்தில் அவர்களின் பாரத்தை குறைக்க தொடங்கி விட்டனர். அதனால், ஆண்களும் முன் வந்து அவர்களின் குடும்ப நலனுக்காக பெண்களின் பொறுப்பு என்று கூறப்படும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.
இன்னும் ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு பெண்கள் வேலையை விட்டு வீட்டை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது. இந்த சமூகத்தில் பெரும்பாலும் பணத்தை வைத்து தான் ஒருவரை மதிப்பிடுகிறார்கள். அப்படி இருக்க பெண்களை பணரீதியாக சுதந்திரம் இல்லாமல் இருக்கச் செய்வது நியாயமா? எனவே, பெண்களும், ஆண்களும் சமமான பொறுப்புகளை பிரித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது மகிழ்ச்சியான குடும்பத்திற்கான அடித்தளம் ஆகும்.