கன்னியாகுமரியை சேர்ந்த வசந்தகுமாரி ஆசியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஆவார். பெண்கள் தற்பொழுது நிறைய துறைகளில் சாதித்து கொண்டு இருக்கின்றனர். அப்படி பேருந்து ஓட்டுவதில் வசந்தகுமாரி என்பவர் தான் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். இந்த காலத்திலேயே பெண்கள் எதை செய்தாலும் அதற்கு தடைகள் நிறைவே இருக்கிறது. அப்படி இருக்க 25 வருடங்களுக்கு முன்பே எல்லா பாகுபாட்டையும் எதிர்த்து வசந்தகுமாரி சாதனை படைத்துள்ளார்.
சிறு வயதிலேயே தாயை இழந்த இவர் தனது தந்தை வேறொரு பெண்ணை மணந்து கொண்ட பிறகு சொந்தக்காரர்கள் வீட்டில் தான் வளர்ந்து வந்தார். இவர் வளர்ந்தது கிராமம் என்பதால் பெரும்பாலும் பெண்கள் வெளி உலகை அறிந்திருக்கவில்லை. அவர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். ஆனால் வசந்தகுமாரி மற்ற பெண்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாகவே இருந்தார். வீட்டிலும் செல்ல பிள்ளையாக இருந்ததால் அனைவரும் இவருக்கு ஆதரவாக இருந்தனர்.
14 வயதிலேயே இவர் கார் ஓட்ட கற்றுக் கொண்டார். இவருக்கு அதில் உள்ள ஆர்வத்தை பார்த்து அவரின் அண்ணனே அவருக்கு கார் ஓட்டுவதற்காக பயிற்சி அளித்துள்ளார். பிறகு 19 வயதில் இவருக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆன பிறகு குடும்ப வருமையினால் வேலைக்கு செல்லலாம் என முடிவெடுத்தார். அப்பொழுதுதான் அரசாங்கமும் பெண்களுக்கு எல்லா வேலைகளிலும் 30 சதவீதம் ஒதுக்கீடு தர வேண்டும் என்று அறிவித்தது. இவருக்கு வண்டி ஓட்ட பிடிக்கும் என்பதால் அனைவரும் இவரை பேருந்து ஓட்டுனர் ஆவதற்காக விண்ணப்பிக்க சொன்னார்கள்.
இவரும் அதற்காக ஓட்டுநர் உரிமம் வாங்கிவிட்டு அந்த வேலைக்காக பதிவிட்டிருந்தார். பேருந்து ஓட்டுநராக தேர்வு பெற வேண்டும் என்றால் 160cm மேல் இருக்க வேண்டும். ஆனால் வசந்தகுமாரி 162cm இருந்தும் அவரை 159.8cm என்று கூறி நிராகரித்து உள்ளனர். ஒரு பெண் எப்படி இந்த வேலை செய்ய முடியும் என்று பல விதங்களில் அவரை நிராகரித்து உள்ளனர். ஆண்கள் மட்டுமே இதை செய்து கொண்டிருப்பதால் ஒரு பெண்ணால் இதை செய்ய முடியும் என்று யாரும் நம்பவில்லை.
பிறகு பல முயற்சிகளுக்குப் பிறகு இவருக்கு அன்றைய முதல்வரான ஜெயலலிதாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பார்த்து இவர் தனது டிரைவராக வேண்டும் என்று ஆசையை கூறி அதை மற்றவர்கள் நிராகரிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இவரை ஜெயலலிதா பார்த்துவிட்டு இவர் நல்ல உயரமாக தான் இருக்கிறார், பிறகு ஏன் இவரை நிராகரிக்கிறீர்கள் என்று கூறிவிட்டு நேராக நேர்முகத் தேர்வுக்கு இவரை அனுப்புங்கள் என்றும் அதனைப் பற்றிய தகவல்கள் தனக்கு உடனே வேண்டும் என்றும் ஆணையிட்டார்.
முதலமைச்சரின் ஆணைப்படி அனைத்தும் நடந்தது. பிறகு ஒரு பேருந்தை கொடுத்து இவரை ஓட்டி காட்ட சொன்னார்கள். அப்பொழுது இவர் பேருந்தை ஓட்ட ஆரம்பித்தபோது அனைத்து அதிகாரிகளும் ஓடி ஒளிந்து கொண்டனர். ஏனென்றால் ஒரு பெண் வண்டி ஓட்டும் போது எப்படியும் தடுமாறி அவர்கள் மேல் மோதி விடுவார் என்ற பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். ஆனால் இவர் பேருந்தை ஓட்டி முடித்ததும் அந்த அதிகாரிகள் அவர்களை மறந்து கைதட்ட தொடங்கினர். வெற்றிகரமாக பேருந்தை ஓட்டி தேர்ச்சி பெற்ற பிறகு 1993 மார்ச் 30ஆம் தேதி அவருக்கு பேருந்து ஓட்டுனராக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்தது.
ஆசியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்பதால் இவருக்கு அப்பார்ட்மெண்ட் ஆர்டர் கிடைத்த உடனேயே அனைவரும் இவரை பற்றி எழுதவும், பேட்டிகள் எடுக்கவும் தொடங்கினர். மகளிர் மட்டும் திரைப்படத்தில் கூட இவர் பேருந்து ஓட்டுநராக நடித்திருப்பார்.
இவர் பேருந்து ஓட்ட ஆரம்பித்த காலத்தில் மக்களிடமிருந்து இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பல பெண்கள் இவரை பாராட்டினார்கள். மேலும் இவர் பேருந்து ஓட்டும்போது பல பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து இவருக்கு கை அசைத்து அவர்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர். பலர் இவரை வியந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இன்றும் பலர் பெண்களுக்கு வண்டி ஓட்ட தெரியாது என்று கூறி கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் பாலினத்திற்கும் திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள தவறிகின்றனர். வசந்தகுமாரி வறுமையினால் வேலைக்கு வந்திருந்தாலும் தனக்கு படித்த வேலையை செய்துள்ளார். தன்னம்பிக்கையினால் பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இதற்காக இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.