இல்லத்தின் அரசிகள் என்பது பெயரில் மட்டும் தான், ஆனால் உண்மையில் அவர்களை அடிமையாகவே நடத்தப்படுகிறார்கள். “பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்” என்று கூறுவார்கள். ஆனால் எத்தனை பெண்கள் அவர்கள் பெண்ணாக பிறந்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏன் பெண்ணாக பிறந்தோம்? என்று ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது நினைத்திருப்பாள். ஆம்! அப்படித்தான் இந்த சமூகம் பெண்களை நடத்துகிறது.
ஒரு பெண் பிறந்த உடனே அவளின் திருமணத்திற்காக சேர்த்து வைக்க தொடங்குகின்றனர். சிறுவயதிலிருந்து வீட்டு வேலை செய்வது, எதிர்த்து பேசாமல் இருப்பது, வீட்டிற்கு வருபவரை உபசரிப்பது இது போன்ற பெண்களின் கடமை என சமூகம் கருதும் அனைத்தும் அவளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.
வீட்டு வேலை செய்வது சாதாரண ஒன்று அல்ல. அதற்காக செலவிடும் நேரமும், உடல் உழைப்பும் அதிகம். ஆனால் அதற்காக எத்தனை பெண்கள் இங்கு மதிக்கப்படுகிறார்கள். திருமணத்திற்கு பின் பெரும்பாலும் பெண் வேலைக்கு செல்லலாமா? வேண்டாமா? என கணவன் மற்றும் அவள் குடும்பத்தினர் முடிவேடுகின்றனர். பல தடைகளை கடந்து திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தை பிறந்தவுடன் முழுநேரம் வீட்டில் இருந்து குழந்தையையும், வீட்டையும் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து அம்மாக்களும், மனைவிகளும் “வீட்ல சும்மா தான இருக்க” என்று கூற்றை பலமுறை கேட்டிருப்பார்கள். ஆம், காலையில் எழுந்தவுடன் காலை உணவு, மதிய உணவு சமைத்து, துணிகளை அயன் செய்து, உணவு பரிமாறி, மதிய உணவை கட்டிக் கொடுத்து, சமைத்து பாத்திரத்தையும், உண்ட தட்டையும் கழுவி வைத்து, துணிகளை துவைத்து, மாலை தேநீர் போட்டு, இரவு உணவு தயார் செய்து, மீண்டும் சேர்ந்த அனைத்து பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு உறங்க செல்லும் பெண்களை இந்த சமூகம் “வீட்டில் சும்மா தான இருக்க” என்ற கூற்று மூலமே அங்கீகரிக்கிறது. இது எல்லாம் இல்லத்தரசிகள் செய்யும் அன்றாட வேலைகள்.
"அம்மா இல்லனா வீடு வீடாவே இல்ல" இது பாசத்தினால் சொல்வதை விட வீட்டில் நம் தேவைகளை பூர்த்தி செய்ய, நமக்காக வேலை செய்ய ஒரு பெண் இல்லையே என்றதனால் வெளிப்படும் சொற்கள்.
ஏன் இல்லத்தரசிகள் ஆண்களைப் போல மதிக்கப்படுவதில்லை என்பதற்கான காரணத்தை கேட்டால் அவர்கள் செய்யும் வேலை அவர்களின் பண தேவையை பூர்த்தி செய்வதில்லை. அவர்களின் சின்ன சின்ன தேவைக்கு கூட தன் கணவனை நாட வேண்டி உள்ளது. அது மட்டும் இன்றி வீட்டிலேயே இருக்கும் உனக்கு வெளி உலகம் பற்றி எதுவும் தெரியாது என்று கூறி பலமுறை அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.
“நீ நல்லா படி இல்லன்னா என்ன மாதிரி ஆகிடுவ” என்று அம்மாக்கள் பெண் பிள்ளைகளை எச்சரிப்பது உண்டு. வீட்டை கவனித்துக் கொள்வது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு நிறைய பொறுமை மற்றும் அமைப்பு திறன் என நிறைய தகுதி தேவை. சுதந்திரமாக வாழ்வது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, யாரையும் எதிர்பார்க்காமல் தனக்கான வேலையை தானே செய்து கொள்வதும் சுதந்திரமாக வாழ எண்ணம் கொண்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
உலக அழகி போட்டியில் இறுதி சுற்றில் “எந்த தொழிலுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட வேண்டும்?” என்று கேட்டபோது மானுஷி சில்லர் அவர்கள் “தாய்களுக்கு தான் இந்த உலகில் அதிக சம்பளம் வழங்க வேண்டும். இங்கு பணத்தை நான் சம்பளமாக கருதவில்லை அதற்கு பதிலாக பாசத்தையும், மரியாதையும் பணத்தை விட மிகப் பெரிய சம்பளமாக கருதுகிறேன். எனது வாழ்க்கையில் என் தாய் எனக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார். அது மட்டும் இன்றி பல தாய்மார்கள் அவர்கள் குழந்தைகளுக்காக நிறைய தியாகங்களை செய்கின்றனர். எனவே தாய் என்ற பதவிக்கு தான் இந்த உலகில் அதிக சம்பளம் அதாவது அன்பும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும்” என்று கூறியிருப்பார். இதற்காக 2017ஆம் ஆண்டு அவர் உலக அழகி போட்டியை வென்றார்.
வீட்டு வேலை செய்வது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு திறன். எனவே, ஆண், பெண் என இருவரும் இதை கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஆண்கள், பெண்கள் மேல் அதை திணிக்காமல் இருப்பார்கள். பெண்களும் தங்கள் பாலினத்தைப் பற்றி குறைவாக எண்ணாமல், அதை வெறுக்காமல் இருப்பார்கள். வீட்டில் வேலை செய்யும் அம்மாக்கள் மற்றும் மனைவியை மரியாதையுடன் நடத்துங்கள், அதுவே அவர்கள் குறைந்தபட்சமாக எதிர்பார்ப்பது.