ஒரு பெண் அதிக பணம் உடைய ஆண் மீது காதல் கொண்டால், திருமணம் செய்து கொண்டால் இந்த சமூகம் அவர்களை என்ன சொல்லும்? எப்படி விவாதிக்கும்? அவள், அவன் பணத்தின் மீது காதல் கொண்டு உள்ளாள். பணத்திற்காக தான் திருமணம் செய்து இருப்பாள். அவள் மட்டுமல்ல அனைத்து பெண்களும் அப்படித்தான் என்று இச்சமுகம் அனைத்து பெண்களையும் இழிவு படுத்தி இருக்கும்.
எல்லா பெண்களும் பணத்திற்காக அலைவதில்லை, பணத்திற்காக காதலிப்பதும் இல்லை. உதாரணத்திற்காக முன்னாள் செய்தி வாசிப்பாளரும், பிக் பாஸ் 5யில் பங்கேற்ற அனிதா சம்பத் அவர்களின் காதல் கதையை எடுத்துக் கொள்ளலாம். மிகவும் கஷ்டப்படும் நிலைமையில் இருந்து அவரும் அவர் கணவரும் நிறைய போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நல்ல நிலைமையில் இருக்கின்றனர். ஒரு நேர்காணலில் கூட "ரொம்ப செட்டில் ஆன ஒரு பையன கல்யாணம் பண்ணனும்னு பழைய காதல விட்டுட்டு போய் கல்யாணம் பண்ணா கிடைக்கிற சந்தோஷம் என்ன மிஞ்சு போனா பணம், அதுதான, ஆனா கைல பத்து பைசா இல்லனா கூட நாங்க கை கோர்த்துட்டு ரோட்ல ஜாலியா நடந்து போவோம்" என்று கூறியிருப்பார்.
அவரைப் போல் இந்த சமூகத்தில் இன்னும் பல பெண்கள் இருக்கின்றனர். ஆனாலும், எல்லா பெண்களும் ஆண்களின் பணத்திற்கு பின்னால் செல்வதில்லை என்பதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெண்கள் சம உரிமை, மரியாதை, அவர்களை நன்கு புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணையை தான் தேடுகின்றனர். ஒரு ஆணும், பெண்ணும் அளவுக்கு அதிகமாக காதல் கொள்ளும்பொழுது பணம் ஒரு பெரிய விஷயமாக இருக்காது.
பெண்களை பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களால் மட்டுமே மகிழ்விக்க முடியும் என்று இந்த சமூகம் அவர்களை சித்தரித்துள்ளது. சில சமயம் ஆண்கள் செய்யும் தவறை மறைப்பதற்காக பெண்களை இந்த மாதிரியான கூற்றுக்களை வைத்து இழிவு படுத்துகின்றனர்.
பெண்கள் பணத்திற்கு பின்னால் அலைபவர்கள் என்று இழிவுபடுத்தும் சமூகம், ஆண்கள், பெண்களை கவர்ச்சிப் பொருட்களாக பார்ப்பதற்கு எந்த விதமான எதிர் கருத்துகளையும் தருவதில்லை. ஒரு பெண் பணத்திற்காக ஒரு ஆண் மீது காதல் கொள்கிறாள் என்றால் அந்த ஆண் ஏன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
சில பெண்கள் ஆண்களிடமிருந்து பணம் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஏனென்றால், இந்த சமூகம் திருமணம் ஆன ஒரு பெண்ணை வேலைக்கு அனுப்பாமல் அடுப்படியில் முடக்கி வைக்க நினைக்கிறது. இந்த காலத்தில் பெண்கள் சுதந்திரமாக சம்பாதிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஒரு ஆண் ஒரு பெண் தன்னிடம் பணத்தை எதிர்பார்க்கக் கூடாது என்றால் அந்தப் பெண்ணை அடிமைப்படுத்தாமல் சம வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
குடும்பம் மட்டுமே உலகம் என்று அவளை கட்டுப்படுத்தி வைக்காமல் சுதந்திரமாக அவளை முடிவு எடுக்க விட வேண்டும். அவளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை தடையில்லாமல் வழங்க வேண்டும். அவள் சுயமரியாதையோடு பணம் சம்பாதிக்க எந்த ஒரு தடையும் இல்லை எனில் அவள் ஏன் இன்னொருவருடைய பணத்திற்கு ஆசைப்பட போகிறாள். பெண்கள் பிறர் பணத்திற்கு ஆசைப்படாமல் வேலைக்கு செல்ல தயாராக உள்ளனர், ஆண்கள் அவர்களை அடிமை படுத்தாமல் வாழ விட தயாராக உள்ளார்களா?