நேற்று மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டில் 60 பேர் காயமடைந்த நிலையில் தற்போது பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இனி இது போன்ற தவறுகள் குறைவாகவே நடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், "கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதில் 20 பேருக்கு பெரிய காயங்கள் ஏற்பட்டு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் 40 பேருக்கு சிறிய காயங்கள் பட்டு முதலுதவி செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்றும் கூறினார்.
மேலும் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு இருப்பதாகவும் கவனக்குறைவாக எதுவும் நிகழாது என்றும் உறுதி செய்தார்.
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன் மாவட்ட கலெக்டர் சேகர் பேசிய போது "எல்லா முன்னெச்சரிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காளையும், மாடுபிடி வீரர்களையும், மக்களையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2000 காவல் துறையினர் பாதுகாப்பிற்காக இருக்கிறார்கள்" என்றும் கூறினார்.
எதிர்பாராத விபத்துகள் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படி ஏதேனும் ஒன்று நடந்தாலும் அதனை உடனே நல்ல மருத்துவ உதவியுடன் பார்த்துக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு இந்த முறை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடக்கும் என்பதையும் கூறினார்.
அதுமட்டுமின்றி சனிக்கிழமை ஆந்திர பிரதேஷ் சித்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 12 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர் என்ற தகவலும் வெளியானது.
வரலாற்றில் ஜல்லிக்கட்டு:
ஜல்லிக்கட்டு பல ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு பாரம்பரிய நிகழ்ச்சி. இந்த விளையாட்டில் பல படுகாயமும் அடைந்துள்ளனர் மரணத்தையும் அடைந்துள்ளனர். இருப்பினும் எல்லா ஆண்டும் எந்த ஒரு தவறும் நடக்க கூடாது என்ற எண்ணத்தில் முடிந்தவரை பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு பல தடைகளை கடந்து தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 2023ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி 8 நடந்தது, அதில் இளைஞர்கள் மிக ஆர்வமாக கலந்து கொண்டனர். தற்போது பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது வருகிறது.
ஜல்லிக்கட்டு பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரைவது என்பதை நாம் சில கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகளை இனப்பெருக்கம் செய்வதற்காக தேர்ந்தெடுத்து, காளைகளை பாதுகாக்கும் பாரம்பரிய வழிமுறையாக ஜல்லிக்கட்டு இருக்கிறது.
முதல்முறையாக சென்னையில் ஜல்லிக்கட்டு:
இந்த பாரம்பரிய நிற்க விளையாட்டு இதுவரை கிராமங்களில் மட்டுமே நடந்து வந்தது. இந்த வருடம் மார்ச் ஐந்தாம் தேதி சென்னையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிப்போம் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களும், அதை சுற்றியுள்ள மக்களுமே ஜல்லிக்கட்டை நேரில் பார்த்துள்ளனர். நகரப்புறங்களில் வாழ்பவர்கள் பலர் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்ததில்லை. இந்த முறை சென்னையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதால், அவர்களும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கக்கூடும்.
பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு நடப்பது ஒரு பாரம்பரிய பழக்கமாக உள்ளது. அப்படி இருக்க மாட்டுப் பொங்கல் அன்று பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ந்து வருகிறது. மாடுபிடி வீரர்கள் அதில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள மக்கள் அதை உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர்.