இந்த காலத்தில் சமையல் குறிப்பு வேண்டும் என்றால் YouTubeஇல் பல ஆயிரம் சேனல்கள் உள்ளது. ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு சமையல் குறிப்புகள் வேண்டும் என்றால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களின் மூலமாக தான் தெரிந்து கொள்ள முடியும். அப்படி புத்தகங்களின் மூலமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமும் மக்களுக்கு சமையல் குறிப்புகள் அளித்து வந்தார் மல்லிகா பத்ரிநாத். இவர் பல சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளார். மேலும், தமிழில் 30 சமையல் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
மல்லிகாவின் இந்த பயணம் எப்படி தொடங்கியது?
கூட்டு குடும்பத்தில் பிறந்த மல்லிகா திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் நன்றாக சமைக்க கற்றுக் கொண்டார். அப்பொழுது இவர் சமைக்கும் பொழுது நன்றாக இருக்கும் உணவின் செய்முறையை ஒரு நோட்டில் எழுதி வைப்பார். ஒரு நாள் இவர் கணவர் இதை புத்தகமாக வெளியிடலாம் என்று கூறினார். அதற்காக எந்த செய்முறை நன்றாக இருக்கிறது, எது வேண்டும், எது வேண்டாம் என அவரின் கணவர் அவரின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். யார் ஒருவர் நம்மை புகழ்ந்து கொண்டு மட்டும் இல்லாமல், நமது குறைகளை நம்மிடம் எடுத்துக் கூறுகிறார்களோ அவர்கள் தான் நமது உண்மையான நலன் விரும்பி என்று மல்லிகா கூறுகிறார்.
மல்லிகாவின் முதல் புத்தகம் ஆயிரம் காப்பிகள் போடப்பட்டது. இதை கடைகளில் கொடுக்காமலேயே மூன்று மாதத்தில் அனைத்தும் விற்பனையாகிவிட்டது. இதற்கு அவரின் தோழிகள் ஆதரவாக இருந்து, மல்லிகாவை ஊக்குவித்துள்ளனர். அவரின் தோழிகள் 10 புத்தகங்கள் போல் வாங்கி தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்.
இவரின் சமையல் குறிப்பு புத்தகங்களை படித்தவர்கள் நேர்மறையான விமர்சனங்களை அளித்துள்ளனர். எல்லோருக்கும் புரியும்படி சாதாரணமாக எழுதியுள்ளார் என்றும், பொருட்களின் அளவு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும், செய்யும் உணவுகள் நன்றாக இருக்கிறது என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இவரின் முதல் புத்தகத்தின் பெயர் ஆங்கிலத்தில் Vegetarian Gravies என்றும், தமிழில் மசாலா குருமா வகைகள் என்றும் பெயரிடப்பட்டது.
பிறகு தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றது மூலம் இவரின் புத்தகங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவர் ஆரம்பித்தபோது பணத்திற்காக இதை ஆரம்பிக்கவில்லை என்றாலும் மக்களுக்கு இது பயனுள்ளதாக இருந்ததால் இவரின் புத்தகங்கள் நன்கு விற்பனையானது.
அதன் பிறகு ஒரு இருபது ஆண்டுகளுக்கு தனியாக ஒரு பேக்டரி ஆரம்பித்து மசாலா பொடிகளை தயாரித்துள்ளார். அதற்கு மல்லிகா ஹோம் ப்ராடக்ட்ஸ் என்று பெயர் வைத்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து ரிட்டயர் ஆகி அதனை மூடிவிட்டனர்.
ஆரம்பத்திலிருந்து மல்லிகாவும், அவரின் கணவரும் எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொண்டு செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு படிக்க சொல்லும் மாணவர்கள் இவரின் புத்தகங்களை எடுத்துச் சென்று அதில் உள்ள குறிப்புகளை பயன்படுத்தி நல்ல கருத்துக்களை தந்துள்ளனர். பிறகு திருமண வீட்டில் சீர் தட்டில் கூட இவரின் புத்தகங்களை வைத்து கொடுக்க ஆரம்பித்தனர். நான்கு பேருக்கு உதவியாக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறுகிறார் மல்லிகா.
இவரின் புத்தகங்களை படித்ததற்கு பிறகு பெண்கள் ஊறுகாய் தொழில் தொடங்கியவர்களும் உள்ளனர். மேலும் சாலைகளில் கடை வைத்திருப்பவர்கள் இவரின் புத்தகங்களை படித்து விதவிதமாக செய்ய தொடங்கிய பின் நல்ல வருமானம் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளனர். திருமண வீடுகளில் சமையல் ஆர்டர் கொடுக்கும் போது இவரின் நிகழ்ச்சிகளை காண்பித்து இந்த உணவு வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இப்படி பல வீடுகளில், பல மக்களுக்கு இவரின் உணவு மற்றும் சமையல் குறிப்புகள் உதவியாக இருக்கிறது. இதற்காக இவர் நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இப்பொழுது சமையல் புத்தகங்கள் வாங்குவது குறைந்துவிட்டது. இணையத்திலேயே எல்லா குறிப்புகளும் கிடைக்கின்றது. இதுபோன்ற சமையல் குறிப்புகள் வேண்டும் என்றால் சமூக வலைதளங்களிலேயே பார்த்துக் கொள்கின்றனர். மல்லிகா 2 வருடங்களுக்கு முன்பு ஒரு YouTube சேனல் ஆரம்பித்துள்ளார். அதில் அவரே சமைப்பதை வீடியோ எடுத்து, எடிட் செய்து, பதிவிட்டு வருகிறார்.
ஒருவர் வெற்றியடைய வேண்டும் எனில் முதலில் பிடித்த விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதற்காக கடினமாக உழைத்து அதில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். உதவி வேண்டுமென்று நினைக்கும் போது தயங்காமல் அதைக் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மல்லிகா கூறுகிறார். மேலும் வெற்றி உடனடியாக கிடைக்காது, அது படிப்படியாக தான் நடக்கும் என்றும் பணத்திற்காக மட்டும் ஒரு விஷயத்தை செய்யக்கூடாது. நாம் எடுக்கும் முயற்சிகள் தான் முக்கியம் என்று மல்லிகா கூறுகிறார்.