ஆண்களை கவனித்துக் கொள்வதும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் ஒரு பெண்ணின் கடமை என பெண்களின் சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்படுகிறது. அவர்கள் நேரத்தையும், உழைப்பையும் ஆண்களின் தேவைகளை நிறைவேற்ற அர்ப்பணிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டும் தான் ஆண்கள் மதிப்பு உடையவர்களாக உணர்வார்கள் என்று இந்த சமூகம் கூறுகிறது.
அப்பொழுது பெண்களை யார் கவனித்துக் கொள்வது? பெண்களின் நலனில் அக்கறை செலுத்துவது யார்? பெண்கள் தானே. பிறகு ஆண்களால் ஏன் அதை செய்ய முடியவில்லை? ஏன் ஆண்கள் பெரும்பாலும் பெண்களை சார்ந்திருக்கின்றனர்?
இந்த சமூகத்தில் ஆண்கள் வளரும்போதே பெண்ணை சார்ந்து இருக்கும்படி வளருகின்றனர். சிறு வயதில் அம்மாவும், சகோதரிகளும் அவர்களைப் பார்த்துக் கொள்கின்றனர். அனைவரையும் அம்மா தான் பார்த்துக் கொள்கிறார், ஆனால் ஆண் பிள்ளைகள் என்றால் அதிக அக்கறை எடுத்து எந்த ஒரு வீட்டு வேலையும் விடாமல் வளர்க்கின்றார்கள். திருமணம் ஆன பிறகு அவர்களை கவனிக்கும் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைக்கிறார்கள். ஒரு மனிதனின் அன்றாட தேவைக்கான வேலைகளை அனைவரும் செய்ய தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், ஆண்களுக்கு வீட்டு வேலை பற்றி எதையும் கற்றுத்தராமல் அதை பெண்களுக்கான வேலை என்று ஒதுக்கி வைக்கின்றனர்.
அப்படி என்றால், ஆண்கள் எப்பொழுதும் வேலை பார்க்காமல் இருக்கிறார்களா என்று கேட்டால் அப்படியல்ல. ஆண்கள் தினமும் வேலைக்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால், பெண்கள் வேலை இல்லாமல் இருப்பதாக அர்த்தமில்லை. பெண்கள் வீட்டு வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த காலத்தில் ஆண்களைப் போல பெண்ணும் வேலைக்கு செல்கிறாள். அப்படி வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணிடம் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய சொல்ல முடியாது. இந்த வேலைகளில் ஆண்களும் பங்கு கொள்ள வேண்டும்.
இப்படி ஆணும், பெண்ணும் இருப்பதற்கு பெற்றோர்களின் வளர்ப்பு தான் காரணம். வீட்டில் பெண்கள் என்றால் இந்த வேலைகள் மட்டும் தான் செய்ய வேண்டும், ஆண்கள் என்றால் இந்த வேலைகள் செய்ய வேண்டும் என்று சிறுவயதில் இருந்து பாகுபாடுடன் வளர்ப்பதன் விளைவு தான் இது.
நம் சமூகத்தில் பெரும்பாலும் பெண்களை குறைவாகவே மதிப்பிடுகின்றனர். அதேபோல் பெண்களுக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள வேலையையும் ஏளனமான ஒன்றாக கருதுகின்றனர். உதாரணத்திற்கு, வீட்டு வாசலை பெருக்குவது இயல்பான ஒரு விஷயம் ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதை செய்வதில்லை. காரணம் இந்த சமூகம் ஆண்கள் அதை செய்தால் அவர்களை ஏளனமாக பேசுகிறது.
மற்றொரு உதாரணமாக, துணி துவைப்பதை எடுத்துக் கொள்ளலாம். பெண்கள் ஆண்களுடைய துணியை துவைத்து காய போட்டால் இயல்பான ஒன்றாக கருதும் சமூகம், ஆண்கள் பெண்களின் துணியைத் துவைத்தால் "பொண்டாட்டி துணியை துவைக்கிறான் பாரு" என்று கூறி நக்கலாக பேசும்.
இந்த மாதிரியான சமூக பேச்சுகளில் விழாமல் இருக்க வேண்டும் என்றும் அவர்களை நக்கலாக பார்க்க கூடாது என்றும் ஆண்கள் இந்த மாதிரியான வேலைகளை செய்ய மறுக்கின்றனர். தற்போது, பெண்களும் வேலைக்கு செல்ல தொடங்கி விட்டனர். ஆனால், ஆண்கள் சமூகத்தை ஒரு காரணமாக காட்டி வீட்டு வேலைகளை செய்யாமல் இருக்கின்றனர்.
பெண்கள் ஆண்களை சார்ந்து இருக்கிறார்கள் என்று கூறும் சமூகம் உண்மையில் ஆண்கள்தான் பெண்களை சார்ந்து இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.