பல விளையாட்டுகள் இருந்தாலும் இந்தியாவில் கிரிக்கெட் போன்ற ஒரு சில விளையாட்டுகள் தான் மக்கள் பெரிய அளவில் அறிந்து வைத்திருக்கின்றனர். பலருக்கு பாய்மரப்படகு ஓட்டுவது ஒரு விளையாட்டு என்பதே தெரிந்திருக்காது. அப்படி இருக்க எதார்த்தமாக ஒரு சம்மர் கேம்புக்கு சென்றது மூலம் அந்த விளையாட்டு அறிமுகமாகி அதில் ஆர்வம் அதிகரித்ததால் முறையாக பாய்மரப்படகு ஓட்டுவதை பயின்று தற்போது ஒலிம்பிக் வரை சென்று இருக்கிறார் நேத்ரா குமணன்.
சென்னையில் பிறந்த நேத்ரா குமணன் சிறுவயதிலிருந்தே கோடை கால விடுமுறைகளில் ஏதாவது கற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் நிறைய விஷயங்களை முயற்சித்து பார்த்தார் மற்றும் பரதநாட்டியத்தையும் கற்றுக் கொண்டு வந்தார். ஒருமுறை பாய்மரப்படகு சம்மர் கேம்புக்கு சென்றிருந்தார். இந்த விளையாட்டு அவருக்கு சுவாரசியமாக இருந்ததனால் அதன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த விளையாட்டு மற்ற விளையாட்டுகளை விடவும் வித்தியாசமாக இருந்ததாலும், அவருக்கு அது பிடித்திருந்தாலும் தொடர்ந்து அதை கற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.
அதை தொடர்ந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். நிறைய பயிற்சிகள் எடுத்த பிறகு 2009இல் பாய்மரப்படகு வீராங்கனை ஆனார். ஆனால் இந்த விளையாட்டில் மேலும் தேர்ச்சி பெற்று வளர்வதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பயிற்சிக்காக செல்ல வேண்டியிருந்தது. எதற்காக அவரின் தந்தை நிதி திரட்டி அவரை ஐரோப்பிய நாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்தார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு செல்வதால் பள்ளி படிப்பை இவரால் முடிக்க முடியவில்லை. ஆனால் திறந்தவெளி பள்ளி மூலம் கல்வி பயின்று வந்தார். வீட்டிலும் இவரது ஆர்வத்தையும், திறமையையும் பார்த்து பெற்றோர்கள் இவரை ஆதரித்தனர். மேலும் இந்த விளையாட்டில் நேத்ராவை மெருகேற்றிக் கொள்வதற்காக அவர்களால் முடிந்த அளவிற்கு ஆதரவை தந்தனர்.
கடுமையாக பயிற்சி பெற்ற பிறகு 2014இல் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று ஏழாவது இடத்தைப் பிடித்தார். 2018இல் ஜகர்தா ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று ஐந்தாவது இடத்தை பெற்றார். பிறகு 2020இல் ஹெம்பல் உலக கோப்பை போட்டியில் பங்கு பெற்று வெண்கல பதக்கம் வென்றார். ஆசியா ஒலிம்பிக் தகுதி சுற்று ஓமன் என்ற இடத்தில் நடைபெற்றது. இந்தியா சார்பில் அதில் கலந்து கொண்ட அவர் அதில் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் ஒலிம்பிக்கில் பங்கு பெற இவருக்கு நேரடி வாய்ப்பு கிடைத்தது.
Laser Radial என்ற பிரிவில் இவர் அதில் பங்கு பெற தேர்ச்சி பெற்றார். ஒலிம்பிக்கில் இந்த பிரிவில் பங்கு பெற்ற முதல் பெண்ணானார் நேத்ரா. இதுவரை ஒலிம்பிக்கில் இந்த பிரிவில் பங்கு பெற்ற ஆண்கள் யாரும் நேரடியாக தேர்ச்சி பெறவில்லை. நேத்ரா குமணன் முதல் பெண்ணாக இதில் பங்கு பெறுவது மட்டுமின்றி இந்தியாவில் இருந்து முதல் முறையாக நேரடி தேர்வு பெற்றவரும் ஆனார்.
இந்தியாவில் பலருக்கு பாய்மரப் படகு ஓட்டுவது போன்ற விளையாட்டுகள் இருப்பதே தெரிந்து இருக்கவில்லை. ஒரு சம்மர் கேம்பின் மூலம் அதைப் பற்றி தெரிந்து கொண்டு அதன் மீது உள்ள ஆர்வத்தினால் அதில் பயிற்சி பெற்று வந்தார். நேத்ரா இதனால் பரதநாட்டியம் பயில்வதையும் விட நேரிட்டது. ஆனால் இவர் பரதநாட்டியத்தில் கற்றுக்கொண்ட பல விஷயங்கள் இவருக்கு இந்த விளையாட்டில் உதவி இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.