புத்தாண்டு என்றாலே பலரும் புதிதாக ஒரு வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதனால் புத்தாண்டு தொடங்கும் சில நாட்களுக்கு முன் இருந்தே என்ன மாதிரியான பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும், எந்த மாதிரியான புதிய விஷயங்களை செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கின்றனர். ஆனால், பெரும்பாலோரின் புத்தாண்டு ரெசல்யூஷன் (resolution) புத்தாண்டு ஆரம்பித்த சில நாட்களிலேயே கைவிடப்படுகிறது. புத்தாண்டு ரெசல்யூஷன்ஸ் எப்படி எடுப்பது என்றும், அதை எப்படி கைவிடாமல் தொடர்ந்து பின்பற்றுவது என்றும் விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
முக்கியமான சில விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்:
புத்தாண்டு ரெசல்யூஷனில் நாம் செய்யும் முதல் தவறு நிறைய விஷயங்களை மாற்றிக்கொள்ள நினைப்பது. அதாவது எடையை குறைக்க வேண்டும், நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும், செல்போன்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது, இரவு நேரமாக தூங்க வேண்டும், காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும், டிராவல் செய்ய வேண்டும் இந்த மாதிரி நிறைய விஷயங்களை புத்தாண்டு ரெசல்யூஷன் என்ற பெயரில் திணிக்க கூடாது. நீங்கள் ஒன்று அல்லது மூன்று இலக்குகள் தான் வைத்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உங்களுக்கு முக்கியமாக எந்த விஷயங்கள் எல்லாம் தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு, அதையே உங்கள் புத்தாண்டு ரெசல்யூஷனாக வைக்க வேண்டும்.
சிறிய இலக்குகளை முடிவு செய்யுங்கள்:
இப்பொழுது உங்களிடம் ஒரு பெரிய இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை ஒரே நாளில் அல்லது ஒரு சில நாட்களில் அடைந்து விட வேண்டும் என்று நினைக்க கூடாது. அப்படி நினைப்பது உங்களுக்கு மன அழுத்தத்தை தரலாம். உங்கள் இலக்குக்கு ஏற்றவாறு நீங்கள் அதற்கான நேரத்தை உங்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த பெரிய இலக்கை அடைவதற்கு தினமும் ஒரு சிறிய இலக்கை தீர்மானித்து அதை செய்து முடிக்க வேண்டும். இப்படி சிறிது சிறிதாக நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி சென்றால் மட்டுமே உங்களால் அதை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை உணர முடியும். அது உங்களை ஊக்கவிக்கும்.
எப்பொழுதும் இறுதி தீர்வில் மட்டுமே கவனம் செலுத்தாதீர்கள்:
பெரும்பாலும் பலர் தீர்வை தான் எதிர்பார்க்கிறார்களே தவிர அதற்கான பயணத்தை பார்ப்பதில்லை. நீங்கள் தற்போது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரே நாளில் அல்லது 15 நாளில் 20 கிலோ எடையை குறைக்க நினைப்பது தவறு. அந்த 20 கிலோ எடையை குறைப்பதை விட அதை நோக்கி நீங்கள் பயணிக்கும் பாதை உங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தரும். எனவே, இறுதி தீர்வை விட அதற்கான பயண அனுபவங்கள் மிகவும் முக்கியமானது. உங்கள் இலக்குகளை நோக்கிய சிறு சிறு விஷயங்களை நீங்கள் செய்து முடிக்கும் பொழுது, தினமும் அந்த இலக்கை நோக்கி நகர்வீர்கள். இது நிச்சயமாக அந்த இலக்கை அடைய உங்களுக்கு உதவும்.
உங்கள் இலக்குக்காக நீங்கள் தினமும் எடுக்கும் முயற்சிகளை கண்காணிக்கவும்:
தினமும் உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் செய்யும் விஷயங்களை ஜர்னலிங் மூலம் கணக்கெடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்வது மூலம் சில நாட்கள் கழித்து நீங்கள் அதை பார்க்கும் பொழுது நீங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள், இன்னும் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது அதில் தெளிவாக இருக்கும். ஒருவேளை நடுவில் அந்த இலக்கை கைவிட வேண்டும் என்று நினைத்தாலும், நீங்கள் இவ்வளவு தூரம் வந்ததை திரும்பிப் பார்த்து மீண்டும் விடாமுயற்சியுடன் அந்த இலக்கை அடைய முடியும்.
முக்கியமாக உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் விஷயங்களையும் உங்களால் செய்து முடிக்க முடியும் என்று நீங்கள் நம்பும் விஷயங்களையும் இலக்காக வைக்க வேண்டும். நடக்காத ஒரு விஷயத்தை அல்லது அது நடப்பதற்கு பல ஆண்டு முயற்சிகள் தேவைப்படும் ஒரு விஷயத்தை ஒரு சில நாட்களில் அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுவது தவறு. பெரும்பாலானோர் இந்த நினைப்பால்தான் புத்தாண்டு ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே அதை கைவிட்டு விடுகின்றனர்.
எனவே, இந்த புத்தாண்டில் நீங்கள் ரெசல்யூஷன் எடுக்கும் முன் நீங்கள் கவனிக்க வேண்டியது ஒரு பெரிய இலக்கை வைத்திருக்க வேண்டும், அந்த பெரிய இலக்கை அடைய தினமும் சிறு சிறு வேலைகளை செய்து முடிக்க வேண்டும். நீங்கள் என்ன வேலையை செய்து முடித்து இருக்கிறீர்கள், என்ன செய்ய வேண்டும் என்பதை ஜர்னலிங் மூலம் அல்லது ஒரு நோட்டில் தினமும் எழுதி வைக்க வேண்டும். உங்கள் இலக்கை முடிவு செய்யும் முன் அந்த இலக்கை எதற்காக நீங்கள் அடைய வேண்டும் என்பதையும் எழுதி வைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் அதை பார்த்தீர்கள் என்றால் நீங்கள் அதற்காக எந்த காரணமும் சொல்லாமல் உழைக்க ஆரம்பிப்பீர்கள்.
எனவே, இந்த முறை உங்கள் புத்தாண்டு ரெசல்யூஷன் மேல் சொன்ன குறிப்புகள் படி எடுத்து பாருங்கள். பொறுமையாக தினமும் அதற்கான நேரத்தை செலவு செய்து அதற்காக உழையுங்கள். உங்கள் இறுதி தீர்வில் கவனத்தை செலுத்தாமல் அதை நோக்கி செல்லும் பயணத்தில் கவனத்தை செலுத்தினால் இலக்கை அடைந்து விடலாம்.