13 வயதில் தனது நடிப்பு கரியரில் முழுமையாக கவனம் செலுத்த தொடங்கிய சந்தோஷி தற்போது பல கஷ்டங்களை தாண்டி தனது கடுமையான உழைப்பினால் Plush Boutique and Beauty Loungeயை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் 13 வயதிலேயே நடிப்பில் கவனம் செலுத்தியதால் பள்ளியில் இருந்து TC வாங்கி விட்டார். அதன் பிறகு பிரைவேட்டாக படிப்பு கற்றுக்கொள்ளலாம் என நினைத்தார். ஆனால் அவர் அப்பொழுது நிறைய சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் படிப்பை தொடர முடியவில்லை.
ஒரே நேரத்தில் இவர் ஏழு சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆறு வருடம் வாழ்க்கை இப்படியே சென்ற பிறகு அவர் 18 வயதில் இருக்கும் பொழுது மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட பொழுது தான் அவருக்கு படிப்பின் அருமை தெரியவந்தது. அந்த ட்ரெய்னிங்கில் இவருக்கு ஆங்கிலம் ஒழுங்காக பேச வரவில்லை. அதன் பிறகு அவர் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் VJ ரம்யாவும் அதில் கலந்து கொண்டிருந்தார். VJ ரம்யா சந்தோஷியிடம் "சினிமா மட்டும் உலகம் இல்லை, சினிமாவை தாண்டி நிறைய விஷயம் இருக்கு. நீ திரும்பிப் பார்த்து உன் வாழ்க்கையில் இழந்ததை கண்டுபிடி" என்று கூறியிருக்கிறார்.
அப்பொழுது இவருக்கு படித்தே ஆக வேண்டும் என்ற வெறி வந்தது. அதனால் உடனே பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு உடனடியாக 12 ஆம் வகுப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பிரைவேட்டாக படிக்கும் பொழுது ஒரு வருடம் காத்திருந்து தான் 12 ஆம் வகுப்பு படிக்க வேண்டும் என்பதால் உடனே டிப்ளமோ படிக்கலாம் என முடிவு எடுத்தார். இவர் BBA படித்துக்கொண்டு இருந்தபோதே 12ஆம் வகுப்பையும் படித்துக் கொண்டிருந்தார். ஆனால், BBAவில் கணிதம் இவருக்கு கடினமாக இருந்ததால் அதை விட்டு விலகி டிப்ளமோ பேஷன் டிசைனிங் படித்தார்.
சீரியல்களிலும், மீடியாவிலும் சில காலங்களுக்குப் பிறகு புதிய முகங்களை தேடுவார்கள். அப்படித்தான் சந்தோஷிக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு சீரியலில் புதிய முகங்களை தேடியதனால் அவர் வேறு ஏதாவது சொந்தமாக ஆரம்பிக்கலாம் என்று நினைத்தார். அவருக்கு என்ன பிடிக்கும், என்ன தெரியும் என்பதை ஆராய்ந்து பார்த்தார். மேலும் அவரின் தோழிகள் அவர்கள் திருமணத்திற்காக இவரை மேக்கப் போடுவதற்காக அழைத்தனர்.
அதில் இவருக்கு இருந்த திறமையை புரிந்து கொண்டார். சிறுவயதில் இருந்து இவருக்கு ஒரு கடை வைக்க வேண்டும் என்று ஆசையும் இருந்தது. அதனால் ஒரு கடை வைக்கலாம் என முடிவெடுத்த பொழுது இந்தியாவில் சலூன் மற்றும் பியூட்டி பார்லர் இரண்டும் கலந்த மாதிரி ஒரு இடம் இல்லை என்று தெரிந்து கொண்டார். அப்பொழுது ஒரு மணப்பெண்ணுக்கு என்னென்ன வேண்டும் என்பதை யோசித்தார். அவர்களுக்கு தேவையான ஸ்கின் கேர், மேக்கப், உடைகள், ஜுவல்லரி போன்ற அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பது போல ஒரு கடையை ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தார். ஒரு மணப்பெண் அவர்களிடம் வந்தால் அவர்கள் திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பது போல அவர் Plush என்ற பிராண்டை உருவாக்கினார்.
ஆனால் ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்கு நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளார். Plush என்றால் ஒரு லக்சூரி மெட்டீரியலின் பெயராகும். மேலும் அது பட்டு மெட்டீரியலை குறிக்கும். இந்த பட்டு துணி என்பது Boutiqueஇல் இருக்கும் அதேபோல் மணப்பெண்களும் அதை தான் அணிவார்கள் என்பதால் அந்த பெயரை வைத்தார். இரண்டு பேருடன் ஆரம்பித்து Plush brand தற்போது 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
பெண்களுக்கு சந்தோஷி தரும் ஆலோசனை:
எல்லா பெண்களுக்கும் நான் என்ன சொல்வேன் என்றால் வேலை செய்யுங்கள். எந்த நேரத்தில் எந்த பக்கத்தில் இருந்து பிரச்சனைகள் வரும் என்று தெரியாது. கையில் காசு இருந்தால் கொஞ்சம் தைரியம் இருக்கும். கூட யாரும் இல்லை என்றாலும் கையில் காசு இருக்கு பாத்துக்கலாம் என்ற தைரியம் வரும்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவரின் வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தபோது அவரின் தாயின் உடல்நிலை குறைந்தது. அப்பொழுது அவரிடம் இருந்த பணத்தை வைத்து தான் சிகிச்சை அளிக்க முடிந்தது. அதேபோல் தனது பையனை பள்ளியில் சேர்க்கும் பொழுதும் பணம் பற்றாக்குறை ஏற்பட்டது. இது போன்ற வாழ்க்கை சூழ்நிலைகள் அவருக்கு பணத்தினுடைய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது. இருப்பினும் பணம் மட்டும் வாழ்க்கை கிடையாது. ஆனால் வாழ்வதற்கு பணம் தேவை. பணத்துக்காக ஓடக்கூடாது. நாம் சரியான பாதையில் சென்றால் பணம் பின்னாடி வந்து கொண்டே இருக்கும் என்றும் கூறுகிறார்.