கோயம்புத்தூரை சேர்ந்த 23 வயது பெண் ராதிகா, செய்தித்தாள் பொம்மைகள் செய்து விற்று வருகிறார். இவர் செய்யும் பொம்மைகளுக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு உள்ளது. Queen Bee Dolls என்ற பெயரின் மூலம் செய்தித்தாள்களை வைத்து வகை, வகையாக பொம்மைகளை செய்து வருகிறார்.
ராதிகா சிறுவயதில் இருக்கும் போது அவர் எலும்புகளில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அவரின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருப்பதால் அவருக்கு நிறைய சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. சில ஆண்டுகள் அவருக்கு சர்ஜரி செய்தே போய்விட்டது. அதனால் அவர் பள்ளிகளுக்கு சென்று கல்வியை தொடர முடியாமல் போயிற்று.
சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருப்பதால் வீட்டிற்கு ஆசிரியரை அழைத்து வந்து பாடம் நடத்துவதும் கடினமாக இருந்தது. இவருக்கு சிகிச்சைகள் முடிந்த பிறகு வீட்டில் இருக்கும் நேரத்தில் இணையத்தை பார்த்து கைவினைப் பொருட்களை செய்ய தொடங்கியுள்ளார். இவரின் அண்ணனும் இவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.
வீட்டுக்கு வருபவர்கள் இவர் செய்யும் பொருட்களை பார்த்து அதனை வாங்க தொடங்கினர். மேலும் அக்கம் பக்கத்தினரும் இவரை ஊக்கவிக்கும் வகையில் இவர் செய்யும் பொருட்களை வாங்க தொடங்கினர். இப்படி தொடங்கி தற்போது 2000-க்கும் மேற்பட்ட செய்தித்தாள் பொம்மைகளை விற்றிருக்கிறார். 25 மாநிலங்களுக்கும், 8 நாடுகளுக்கும் இவரின் பொருட்கள் சென்றடைந்துள்ளது.
இவர் செய்யும் பொம்மைகளின் தனித்துவம்:
சிறு வயதிலிருந்தே நாம் வெள்ளை நிற தோல்தான் அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த வேற்றுமையை உடைக்கும் வகையில் தனது பொம்மைகளின் தோல் நிறத்திற்கு கருப்பு நிறத்தை உபயோகிக்கிறார். இது பார்ப்பதற்கு அழகாகவும், தனித்துவமாகவும் இருக்கிறது. அதேபோல் கருப்பு நிறத்தில் பொம்மைகள் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று. அதனால் மக்களிடம் இவர் செய்யும் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
சுற்றுச்சூழல் நலம் கருதி:
ஒரு நேர்காணலில் இவர் எதற்காக செய்தித்தாள் வைத்து இதை செய்கிறார் என்பதை விளக்கும் பொழுது, மக்கள் இதை வேண்டாம் என்று தூக்கி எறிந்தால் கூட இது மக்கிவிடும். ஆனால் பிளாஸ்டிக்கில் செய்தால் அது சுற்றுச்சூழலுக்கு கேடானது. நிறைய பொம்மைகளை நாம் பிளாஸ்டிக்கில் தான் பார்த்திருப்போம். அதனால் அவரது பொம்மைகள் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் அவர் செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் வாய் வழியாக வாடிக்கையாளர்களைப் பெற்ற ராதிகா சமூக வலைத்தளங்களில் அவரின் பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக பக்கங்களை தொடங்கி தற்போது அதன் மூலமாக ஆர்டர்களை பெற்று வருகிறார்.
அவர் ஜோஷ் டாக்கில் பேசிய போது, "செய்தித்தாள் தானே இதிலிருந்து என்ன செய்ய முடியும் என்று நான் யோசித்து இருந்தால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. இருக்கும் இடத்தில் இருக்கும் பொருட்களை வைத்து செய்ய ஆரம்பித்தது தான் தற்போது இவ்வளவு தூரம் என்னை அழைத்து வந்திருக்கிறது. அதனால் உங்க கிட்ட என்ன இருக்கிறதோ அதை கரெக்டாக பயன்படுத்தினால் போதும், அது உங்களுக்கு அடையாளத்தையும், உங்களுக்கான வாழ்க்கையையும் அது அமைத்து தரும்" என்று கூறினார்.
இவரின் சிறு வயது பெரும்பாலும் சிகிச்சையிலேயே சென்று விட்டதால், இவர் வெளி உலகத்தை கூட அடிக்கடி பார்க்க முடியாத அளவிற்கு வீட்டிலேயே முடங்கி இருந்தார். வருடத்திற்கு மூன்று முறை மட்டும் வெளியே சென்ற நாட்களும் இவருக்கு இருந்திருக்கிறது. அதுவும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றதாகத் தான் இருக்கும். இப்படி வீட்டுக்குள்ளே முடங்கி இருந்த ஒரு பெண், இருக்கும் இடத்தில் இருக்கும் பொருட்களை வைத்து செய்ய ஆரம்பித்த ஒரு விஷயம் தற்போது கடல் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருப்பது.
இவர் பல விருதுகளையும், பல மேடைகளில் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார். பல மக்களுக்கு இவர் ஒரு ஊக்கமாக திகழ்ந்து வருகிறார். ஒரு மனிதன் ஆர்வத்தோடு ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்தால் அது நிச்சயமாக வெற்றி பெறும் என்று ராதிகாவின் வாழ்க்கை பயணம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.