ரிஹானா ரியா பள்ளி முடித்துவிட்டு கார் ஓட்ட கற்றுக் கொண்டார். அதன் பிறகு அவருக்கு பைக் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது நண்பர்களிடம் பைக் வாங்கி அவ்வப்போது அதனை ஓட்டி பார்ப்பார். அப்படியே இவருக்கு இது ஒரு பேஷனாக மாறியது. தனது படிப்பு முக்கியமா அல்லது இந்த பேஷன் முக்கியமா என்று முடிவெடுக்க முடியாமல் இருந்தார். ஆனால் தனது கனவுகள் மீதும், இலக்குகள் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஒரு நாள் பெண்களுக்காக ரேசிங் ட்ரைனிங் ப்ரோக்ராம் போஸ்டரை பார்த்துள்ளார். அப்பொழுது அதில் கலந்து கொள்ளலாம் என கலந்து கொண்டார். இவருக்கு ரேசிங் முற்றிலும் புதிதானது. இந்த புரோகிராமில் கலந்து கொண்ட பிறகு நிறைய விஷயங்களை அவர் கற்றுக் கொண்டார். நாம் சாதாரணமாக ரோட்டில் வண்டி ஓட்டுவதற்கும், களத்தில் இறங்கி ரேஸ் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்ததை புரிந்துக்கொண்டார்.
அதை கற்றுக் கொள்ளும் போது அவருக்கு ஒரு தைரியமும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த பயிற்ச்சியில் அவருக்கான தேவையான உடல் கவசங்களை வழங்கி ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் கற்றுத் தந்தனர். அங்கு அவர் நிறைய மனிதர்களை சந்தித்தார். இவர் மற்றவர்களை விட அதில் நன்கு செயல்பட்டார். அதனால் இவருடைய மென்டர் இவரை அழைத்து "உனக்கு இதில் நல்ல திறமை உள்ளது. உன்னை போல் ஆர்வத்துடன் இதை செய்பவர்கள் மிகவும் குறைவு" என்று கூறியுள்ளார்.
அதற்கு ரிஹானா ரியா இதை என்னால் தொடர முடியுமா என்று தெரியவில்லை, ஏனென்றால் இது மிகவும் எக்ஸ்பென்சிவ் ஸ்போர்ட்ஸ்(expensive sports) என்று கூறியுள்ளார். இருப்பினும் அவர் நன்கு பெர்ஃபார்ம் செய்து டாப் மூன்று இடங்களில் ஒருவராக இருந்தார்.
அவர் களத்தில் தவறி கீழே விழுந்த போது ஹெல்பிங் டீம் வந்து அவரை உடனடியாக அந்த டிராக்டில் இருந்து வெளியேற்றி காயங்களுக்கு மருந்து அளித்தார்கள். அவர் கீழே விழுந்த போதும் டாப் மூன்று இடங்களில் ஒருவராக இருந்தார். அதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை இதை நாம் முயற்சித்து பார்க்க வேண்டும் என்று எண்ணி அடுத்த நாள் ஒரு ரேசில் கலந்து கொண்டார். அதில் முதல் பரிசையும் வென்றார்.
சிறுவயதில் இருந்து எது செய்தாலும் அதில் தன்னுடைய 100 சதவீதத்தை கொடுக்க வேண்டும் என்று யோசிப்பார். இந்த முதல் வெற்றி அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியை தந்தது. அதன் பிறகு தொடர்ந்து ரேசில் பங்கு பெற தொடங்கினார். ஆனால் ஆரம்பத்தில் வீட்டிற்கு தெரியாமல் இதை செய்து கொண்டிருந்தார். பிறகு ஒரு நாள் வீட்டில் அவர் வாங்கிய பரிசுகளை காட்டி தன்னுடைய ஆசையை பற்றி கூறினார்.
வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தாலும் பயத்துடனே இருந்தனர். இது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம், கீழே விழுந்து எலும்பு முறிந்தால் என்ன செய்வாய் போன்ற சந்தேகங்கள் பெற்றோருக்கு இருந்தது. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோர்களுக்கு இதைப்பற்றி எடுத்துக் கூறி அவர்களை டிராக்குக்கு அழைத்து சென்று பாதுகாப்பு எல்லாம் அங்கு எப்படி இருக்கிறது என்று கூறி பெற்றோர்களின் சம்மதத்தை பெற்றார். பிறகு தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கு பெற்று ஒரு லீடிங் ரேசராக தற்போது இருக்கிறார்.
இந்தப் பயணம் அவருக்கு சாதாரணமானதாக இல்லை. உறவினர்களிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும், நண்பர்களிடமிருந்தும் நிறைய பிரச்சனைகளை அவர் சந்தித்தார். முக்கியமாக பணரீதியான பிரச்சனைகள் இவருக்கு அதிகமாகவே இருந்தது. வேறொரு போட்டியில் பங்கு பெற வேண்டும் என்றால் அதற்கு முன்பு உள்ள போட்டியில் வென்று பணம் பெற்றால் மட்டுமே அடுத்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று எண்ணி தன்னால் முடிந்த வரை எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.
2017, 2018, 2019இல் தொடர்ந்து நேஷனல் சாம்பியன் ஆக வெற்றி பெற்றார். இதனைப் பார்த்த ஃபெடரேஷன் ஆப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இவரை ஆசியன் கேம்ஸில்(Asian Games) பங்கு பெறுவதற்காக தேர்ந்தெடுத்தனர். அந்த அனுபவம் முற்றிலும் வேறாக இருந்தது. வெளிநாட்டுப் போட்டி களத்தில் நிறைய ஆண்கள் இருந்தனர்.
சிறுவயதில் இருந்து பெண்ணுக்கு எதுக்கு இதெல்லாம், பொண்ணா வீட்டிலேயே இரு இது போன்ற வார்த்தைகளை கேட்டு வளர்ந்த ஒரு பெண் திடீரென ஆண்களுக்கு மத்தியில் போட்டியில் பங்கு பெறுவதற்கு தயங்கினார். பிறகு பெண்கள் அவர்கள் நினைப்பதை விட தைரியமானவர்கள் என்று தன்னை தேற்றிக்கொண்டு அந்த போட்டியில் பங்கு பெற்றார். அதில் டாப் டென்னில் ஒருவராக இருந்தார்.
இது ஒரு எக்ஸ்பன்சஸ் ஸ்போர்ட்ஸ்(expensive sports) என்பதால் பெற்றோர்கள் முன்பே இதில் பணரீதியாக உதவிகள் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். உங்கள் சம்மதம் மட்டும் இருந்தால் போதும் என்று கூறி பண செலவுகளை அவரே பார்த்துக் கொண்டார். சொந்தமாக உழைத்து அந்த பணத்தின் மூலம் அவருக்குத் தேவையானதை செய்து கொண்டார்.
இவர் ஸ்பான்சர்ஷிப் கேட்டு சென்ற இடங்களிலும் பெண்ணாக இருப்பதால் பலர் இவருக்கு ஸ்பான்சர் செய்ய தயங்கினர். இருப்பினும் இந்த தடைகளை எல்லாம் தாண்டி எவ்வளவு தூரம் வந்திருக்கிறார் ரிஹானா.
ரிஹானாவின் ஆலோசனை:
நாம் முதலில் நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும் மற்றும் அதற்காக உழைக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை மட்டுமே கொண்டு பொறுமையாக காத்திருக்க வேண்டும். ஏனென்றால் வெற்றி உடனே கிடைத்து விடாது. பெண்கள் தற்போது அனைத்திலும் சாதித்து வருகின்றனர். உங்களிடம் இருப்பதை வைத்து என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். இல்லாததை நினைத்து உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்வதிலிருந்து உங்களை தடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை கூறுகிறார்.