நீங்கள் ஒரு காதல் உறவில் இருக்கும்போது முதல் நெருக்கமான உரையாடல், முதல் தொடுதல், அன்பின் உணர்ச்சியின் வெளிப்பாடு இவை உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல உணர வைக்கும். இது வாழ்க்கையில் அழகான தொடக்கமாகும். இருப்பினும் எல்லா தொடக்கத்திற்கும் சில தடைகள் இருக்கும். அதுபோலவே உறவுகளுக்கும் அவற்றின் சொந்த சவால்கள் உள்ளது. இது சில சமயங்களில் கடினமானதாக கூட இருக்கலாம். உறவுகளின் முக்கியமான ஒன்றாக உங்கள் மன ஆரோக்கியம் இருக்க வேண்டும். உங்கள் துணையின் மீது கவனம் செலுத்துவதும், அவர்கள் விருப்பத்திற்கு செவி சாய்ப்பதும் அவசியம் ஆனால் அதற்காக உங்கள் சுய அன்பை குறைத்துக் கொள்ளாதீர்கள்.
ஒரு உறவில் இருக்கும் பொழுது அதை சிறப்பாக்க நாம் நம்மால் முடிந்தவரை அனைத்தையும் செய்கிறோம். நமது நேரம், அன்பு என அனைத்தையும் அதற்காக செலவிடுகிறோம். இங்குதான் நாம் கவனமாக இருக்க வேண்டும். உறவை சிறப்பாக்க நாம் முயற்சிகள் எடுக்கும் நேரத்தில் அவை உங்களின் தனித்துவத்தையும், மகிழ்ச்சியையும் பறிக்கக்கூடாது. ஒரு உறவு உங்கள் சுய அன்பையும், அக்கறையும் குறைக்க கூடாது.
சுய அன்பும் உறவுகளும்:
குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை தியாகம் என்னும் உணர்வு அதிகமாக உள்ளது. பெண்களின் குழந்தை பருவத்திலேயே ஒரு விஷயத்தை சரி செய்ய அனுசரித்து, தியாகங்கள் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஒரு உறவை தக்க வைத்துக்கொள்ள என்னவெல்லாம் முயற்சி எடுக்க முடியுமோ அதை எல்லாம் செய்ய வேண்டி உள்ளது. இது திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி ஒரு உறவை தக்க வைத்துக் கொள்வது பெண்ணின் பொறுப்பு. ஒரு உறவு வேலை செய்யாத போது பெண்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அவள் தான் சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும், அனுசரித்து செல்லாமல் இருப்பதாகவும் அதனால்தான் இந்த உறவில் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்றும் இந்த சமூகம் கூறுகிறது. இந்த அனைத்து பொறுப்புகளாலும் அவள் சுய அன்பையும், மரியாதையும் விட்டுவிட்டு அவளின் துணையின் மீது முழு கவனத்தையும் செலுத்த கட்டாயப்படுத்தப்படுகிறது.
பெண்கள் குறிப்பாக திருமணத்தில் ஈடுபடுபவர்கள், பொதுவாக அவர்களின் அடையாளத்தை இழந்து மற்றவரின் மனைவி என்ற அடையாளத்துடன் வாழ பழகுகிறார்கள். அவர்களின் ஆசை, கனவு, தனித்தன்மை அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பதெல்லாம் தற்சமயம் இருக்கும் உறவில் இருந்து வெளியேறக் கூடாது என்பதுதான்.
நம் நாட்டில் விவாகரத்து விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 2021ல் தேசிய குற்றப்பதிவுப் பணியகம் வழங்கிய தகவலின் படி "2020ல் 22,372 இல்லத்தரசிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்". பெண்கள் பெரும்பாலும் உறவில் ஒரு மூலையில் தள்ளப்படுவார்கள், சரிசெய்தல் மற்றும் தியாகம் என்ற பெயரில், அதில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிவதில்லை.
பெண்கள் ஏன் தங்களை விட உறவுகளை மதிக்க வேண்டும்? பெண்கள் தங்கள் அன்புக்குரியவர்களை கவனித்துக் கொள்ளும்போது தங்களை முழுமையாக இழக்க வேண்டுமா? உறவில் தனக்கான இடத்தையும், நேரத்தையும் கோருவது நியாயமற்றதா?
சுய-அன்பு நம்மீது கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி பெறவும், உறவில் அதிக முதலீடு செய்யத் தயாராகவும் உதவுகிறது. உங்கள் மனதில் எதிர்மறை, சோர்வு மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மையை அகற்றும் ஒரு மந்திரமாக சுய அன்பு இருக்கும்.
சுய கவனிப்பு சுய அன்புடன் ஆழமாக தொடர்புடையது. உங்கள் சொந்த உடல் மீதும், உங்கள் விருப்பங்கள் மற்றும் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் போது, நீங்கள் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் உணருவீர்கள். நினைவில் கொள்ளுங்கள், அன்பு என்பது எப்போதும் மற்றவர்களுக்கு கொடுப்பது அல்ல, அது உங்களுக்கே திருப்பிக் கொடுப்பதும், உங்கள் துணைக்காக நீங்கள் செய்யும் அனைத்திற்கும் உங்களைப் பாராட்டுவதும் ஆகும். முதலில் உங்களுக்காக அதை செய்ய நீங்கள் தயாராக இல்லை என்ற போது வேறு யாராவது உங்கள் மீது அன்பை பொழிவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு.
எனவே பெண்களே, அன்பையும், உறவையும் வளர்ப்பதில் இருந்து சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் மற்றதை விட நீண்ட காலம் நீடிக்கும் உறவு, உங்களோடு நீங்கள் வைத்திருக்கும் உறவாகும் - சில சுய-அன்புடன் அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.