கோயம்புத்தூரில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா தற்போது இணையதளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறார். ஷர்மிளாவுக்கு மக்கள் பாராட்டுகளையும், ஆதரவுகளையும் அளித்து வருகின்றனர். ஷர்மிளாவின் கனவும் பேருந்து ஓட்டுனராக வேண்டும் என்பதாகவே இருந்தது. மருந்தாளுனர் படிப்பில் டிப்ளமோ முடித்த ஒரு பெண் தனது கனவான பேருந்து ஓட்டுனராக வேண்டும் என்பதை நிறைவேற்றி இருக்கிறார்.
கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஷர்மிளாவின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். அவர் அவ்வப்போது சிலிண்டர் எடுத்துச் செல்லும் வண்டிகளையும் ஓட்டியுள்ளார். சிறு வயதிலிருந்து தனது தந்தை காக்கி சட்டை அணிந்து கொண்டு வண்டி ஓட்டுவது ஷர்மிளாவை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. அதனாலேயே அவருக்கு அந்த காக்கி சட்டையின் மேல் ஒரு ஆசையும் வந்தது.
தனது தந்தை ஆட்டோ ஓட்டுனர் என்பதால் அவர்கள் எங்கு சென்றாலும் பெரும்பாலும் ஆட்டோ அல்லது டாக்ஸிகளிலேயே சென்றனர். அதனால் ஷர்மிளாவுக்கு சிறு வயதிலிருந்து பேருந்து மீது ஒரு ஏக்கம் இருந்தது. ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து அவர் வண்டிகளை ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார். அவ்வப்போது தந்தைக்கும் உதவியாக இருந்தார்.
/stp-tamil/media/media_files/c6LlP6uiX4AQkn8j6GrU.png)
கொரோனா காலத்தில் ஆட்டோ ஒட்டி மக்களுக்கும் சேவை செய்துள்ளார். இவர் இதையெல்லாம் செய்வதற்கு ஆரம்பத்தில் பெற்றோர்கள் அவ்வளவாக ஊக்கவிக்கவில்லை என்றும் அதன் பிறகு ஷர்மிளாவின் கனவு இதுவென்று புரிந்து கொண்டு பெற்றோர்கள் அவரை முழு மனதோடு ஆதரித்து வருகின்றனர் என்றும் அவரின் தம்பி சபரி கூறுகிறார்.
ஷர்மிளாவுக்கு கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவது அவ்வளவு சுலபமாக இல்லை. முதல் இரண்டு முறை கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான இவர் தேர்ச்சி பெறவில்லை. அதன் பிறகு விடாமுயற்சியாக மூன்றாவது முறை முயற்சித்துப் பார்க்கும் பொழுது தான் இவர் அந்த ஓட்டுனர் உரிமத்தை பெற்றார். உரிமம் வாங்கிய ஆறு மாதத்திற்கு பிறகு ஒரு தனியார் ஏஜென்சியில் ஓட்டுநர் வேலைக்காக பதிவிட்டிருந்தார். அதில் தேர்வு பெற்று மார்ச் 31, 2023 அன்று அவர் முதல் முதலாக பேருந்தை ஓட்டினார்.
பெண்கள் எது செய்தாலும் பல முயற்சிகளுக்குப் பிறகு தான் அதை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இப்படி ஆரம்பத்தில் இவர் பெண்ணாக இருப்பதினால் மட்டுமே பலர் இவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளனர். ஆனால் இந்த ஏஜென்சி இவரின் திறமையை பார்த்து இவரை வேலைக்கு எடுத்துள்ளது.
/stp-tamil/media/media_files/4eIXHZym2zATWfvPDOok.png)
இவர் பேருந்து ஓட்ட ஆரம்பித்ததில் இருந்து மக்களிடமிருந்தும், பயணிகளிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். மேலும் மற்ற டிரைவர்கள் இவரை அவர்களின் சகோதரியாக மற்றும் மகளாக பார்த்து நன்கு கவனித்துக் கொள்கின்றனர். அன்று இவரை பார்த்து ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இன்று ஆச்சரியப்படும் அளவிற்கு கோயம்புத்தூரில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக சாதித்துள்ளார்.
பேருந்து ஓட்டுவதிலும் நிறைய கஷ்டங்கள் இருக்கிறது. காலையில் 5:30 மணி அளவில் வேலைக்கு சென்றால் இரவு வீட்டுக்கு வந்து உறங்க 11 மணிக்கு மேல் ஆகிவிடும். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, எந்த வேலையாக இருந்தாலும் அதில் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். கஷ்டங்கள் இல்லாத வேலை என்று எதுவும் இல்லை. ஆனால் நாம் செய்யும் வேலை நமக்கு பிடித்திருந்தால் அந்த கஷ்டங்களை எல்லாம் பெரிய விஷயங்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்.
மேலும் இந்த சமூகம் பெண்கள் ஒரு விஷயம் செய்யும் பொழுது நிறைய தவறாகவே பேசும். ஆனால் நாம் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் பேசுவதை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்றும் பெண்களுக்கு அறிவுரை கூறுகிறார்.