ஹேமா என்ற பெண்மணி ஸ்ரீ தங்கம்மன் ஸ்டில்(steel) என்ற பெயரின் மூலமாக ஸ்டீல் தொழிலை நடத்தி வருகிறார். பெரும்பாலும் ஸ்டீல் தொழிலில் ஆண்கள் தான் ஈடுபட்டு இருப்பார்கள், அதனால் அது ஆண்களுக்கான தொழிலாகவே கருதப்படுகிறது. சமூகத்தில் பாலின பாகுபாடு எல்லாம் மாறி வரும் நிலையில் ஹேமா ஸ்டீல் தொழிலை நடத்துவது சாதிக்க நினைக்கும் மற்ற பெண்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கிறது.
ஹேமா MBA படித்துவிட்டு ஒரு ஸ்டீல் சம்பந்தமான தொழிலில் HR ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் தந்தை ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்தார். ஒருநாள் ஸ்டீல் தொழில் ஆரம்பிக்கலாம் என்று அவர் தந்தை முடிவெடுத்தார். அப்பொழுது ஹேமாவும் அதே துறையில் இருப்பதால் நீ அதை எடுத்து நடத்துகிறாயா? என்று கேட்டுள்ளார். அப்பொழுது ஹேமா ஏன் அதை முயற்சித்து பார்க்க கூடாது என்று எண்ணி தனது விருப்பத்தை அவரின் தந்தையிடம் கூறினார்.
அதன் பிறகு பேங்கில் லோன் எடுத்து ஸ்ரீ தங்கம்மன் ஸ்டீல் என்ற பெயரின் மூலம் தொழிலை ஆரம்பித்தனர். எதிர்பாராத விதமாக தொழில் ஆரம்பித்த ஆறு மாதத்திற்கு பிறகு ஊரடங்கு போடப்பட்டது. அதனால் இவர்களிடம் வேலை செய்யும் வடமாநில ஊழியர்கள் அப்பொழுது தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அதனால் வேலை செய்யும் ஆட்களும் குறைந்துவிட்டது. புதிதாக ஆரம்பித்த ஒரு தொழில் வேலை செய்வதற்கு நிறைய ஆட்கள் இல்லாமல் ஆரம்பத்தில் சிறிது கஷ்டமாக இருந்தது. அப்பொழுது ஹேமாவே முன்வந்து பெரும்பாலான வேலைகளை செய்ய ஆரம்பித்தார். அதனுடன் அவரின் தந்தையும், சகோதரரும் சேர்ந்து உதவி செய்தனர்.
ஊரடங்கு கால கட்டத்தில் கூட தொழில் நஷ்டத்தில் போகாமல் ஹேமா பார்த்துக் கொண்டார். வாடிக்கையாளர்களும் குறைந்த நேரத்தில் அவர்களுக்கான பொருள் வேண்டும் என்று கேட்டதால் அதற்கு ஏற்றது போல விலையும் உயர்ந்து அந்த தொழில் நல்ல லாபத்தை பார்த்தது.
ஹேமா அந்த தொழில் ஆரம்பிக்கும் பொழுது அவரின் தந்தையின் நண்பர்கள் அவரிடம் பெண்ணை ஏன் இந்த வேலை பார்க்க சொல்கிறாய், அவளுக்கு ஃபேஷன், பொட்டிக்(boutique) போன்ற தொழிலை ஆரம்பித்து கொடுத்திருக்க கூடாதா? பெண்ணால் எப்படி ஸ்டீல் தொழிலை நடத்த முடியும்? என்று கேட்டனர். ஏனென்றால், பெண்களால் இதை சமாளிக்க முடியாது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். இது ராக்கெட் சயின்ஸ் அளவிற்கு ஒன்னும் கஷ்டமான வேலை இல்லை என்று நினைத்தும், ஏன் பெண்கள் இதை செய்யக்கூடாது என்று நினைத்தும் அந்தத் தொழிலை அவர் செய்ய ஆரம்பித்தார்.
பெரும்பாலும் dealers மீட்டிங்குளுக்கு செல்லும்பொழுது அங்கு ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். இவர் மட்டும் தான் அந்த மீட்டிங்கில் பெண்ணாக இருப்பார். ஆரம்பத்தில் இவருக்கு சில தயக்கங்கள் இருந்தது. ஆனால், அவரின் சேல்ஸ் மேனேஜர் ஆண்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் ஒரே பெண்ணாக இருப்பதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும். நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று கூறிய போது அவர் தயக்கங்களை விட்டு செயல்பட ஆரம்பித்தார்.
ஒரு முறை கல்லூரியில் அவரின் ஆசிரியர் யாரெல்லாம் வேலைக்கு போக மாட்டீர்கள் என்று வித்தியாசமான ஒரு கேள்வியை கேட்டபோது ஹேமா கை தூக்கி உள்ளார். அப்பொழுது அவர் ஏன் என்று கேட்ட பொழுது தனக்கு வீட்டில் இருக்கத்தான் பிடிக்கும் என்றும் அதனால் திருமணம் செய்து கொண்டு வீட்டில் இருக்கப் போவதாகவும் அவர் கூறினார். கல்லூரியில் இப்படி கூறிய ஒரு பெண் தற்போது ஆண்கள் நிறைந்த ஒரு தொழிலில் தனது பயணத்தை வெற்றிகரமாக நிலைநாட்டுவது அனைவருக்கும் ஒரு ஊக்கமாக இருந்து வருகிறது. அவரின் உறவினர்களும் இந்த தொழிலை ஒரு பெண்ணா பார்த்துக் கொள்ளப் போகிறாள்? என்று சந்தேகப்பட்டனர். ஆனால் எவ்வளவு தடைகள் வந்தாலும் ஒரு விஷயத்தில் முன்வைத்த காலை ஹேமா பின் வைக்காமல் எவ்வளவு சவால்கள் வந்தாலும் அதை சந்தித்து முன்னேறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
திருமணமான பெண்களுக்கென இந்த சமூகம் நிறைய கடமைகளையும், விதிகளையும் விதித்திருக்கிறது. ஹேமா தனது தொழிலையும், வீட்டையும் பார்த்துக் கொள்வதற்காக அவரின் அனைத்து வேலைகளையும் முன்பே பிளான்(plan) செய்து அதன்படி நடந்து வருகிறார். மேலும் பெண்களுக்காக ஆலோசனை கூறும்போது பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், எல்லா கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை கேட்கும் போது தான் நீங்கள் தோற்றுப் போகிறீர்கள். அதனால் don't say yes when you want to say no, don't say no when you want to say yes என்று பெண்களுக்காக அவர் ஆலோசனை கூறுகிறார்.