அன்பிற்கும், மகிழ்ச்சிக்கும் நீங்கள் தகுதியானவர் என்று நினைத்தால் இது உங்களுக்கானது. உங்களை எப்படி நேசிப்பது என்று புரியவில்லை என்றால் இது உங்களுக்கானது. நீங்கள் குழப்பமான நிலையில் இருக்கிறீர்கள் என்றால் இது உங்களுக்கானது. இப்படி எல்லாம் யோசிப்பது தவறு இல்லை. ஏனெனில், இக்காலத்தில் பலரும் இதுபோன்ற யோசனைகளில் தான் வாழ்கின்றனர். இந்த தீபாவளி திருநாளில் இருந்து உங்களை நேசிக்க தொடங்குங்கள்.
பலமுறை இந்த சமூக நெறிமுறைகளால் நமக்கு பிடித்ததை நாம் செய்யாமல் இருந்திருப்போம். சமூக பாலின பாகுபாடுகளால் நாம் நமது ஆசைகள், கனவு, விருப்பம் என அனைத்திற்கும் தகுதியானவர் இல்லை என்று நினைத்திருப்போம். இந்த உலகம் உங்களுக்கு பிடித்தது போல உங்களை பறக்க விடுவதில்லை மாறாக உங்கள் சிறகுகளை வெட்டி கூண்டில் அடைத்து சமூக விதிமுறைகளின் படி தான் வாழ வேண்டும் என்று கூறுகிறது. இப்படி இருக்கும் சமூகத்தில் வாழ்பவர் பல விஷயங்களை வெளியே கூற முடியாமல் மனத்திற்குள் அடக்கி வைக்கின்றனர்.
நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும் தகுதியானவர். நம்மில் பலர் சமூகத்தை திருப்தி படுத்த நினைத்து நம்மை நாம் திருப்தியாக, சந்தோஷமாக வைத்துக் கொள்ள தவறி இருப்போம்.
உங்களின் பல முயற்சிகள் வெற்றியடையாமல் இருந்திருக்கலாம். நீங்கள் பிறருக்கு துன்பம் அளிக்கக் கூடாது என்றும், மற்றவர்களிடம் எந்த ஒரு கெட்ட பெயரும் வாங்க கூடாது என்றும், பிறரின் அன்பை பெற வேண்டும் என்றும் உங்களுக்கு பிடித்ததை, உங்கள் விருப்பங்களை விட்டுக் கொடுத்து இருப்பீர்கள். ஏன் சிறு வயதில் இருந்து நாம் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி வாழ்வது எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிக்காது.
இந்த தன்னல உலகில் வாழ நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கான முதல் வழி உங்களை நேசியுங்கள். உங்களின் சுய அன்பு (self love) மட்டுமே இந்த உலகில் நிரந்தரமானது. உங்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள். உங்களை எண்ணி பாருங்கள், உங்கள் விருப்ப, வெறுப்புகளை கண்டறியுங்கள். தேவையில்லாத சிந்தனைகளை, உங்களுக்கு பாரமாக இருக்கும் விஷயங்களை உங்களை விட்டு தள்ளி வையுங்கள். முதலில் இது போன்ற முடிவுகள் எடுக்க பயமாகத்தான் இருக்கும். ஆனால் காலப்போக்கில் இது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
அந்த நன்மைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் உண்மையான குணத்தை, விருப்பத்தை காட்டினால் நிச்சயம் அதற்கு ஏற்றது போல சரியான நபர்கள் மற்றும் நண்பர்கள் உருவாகுவர். இதை செய்ய நீங்கள் தயங்கும் வரை உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்காத நபர்கள் மட்டுமே. உங்களைப்போல எண்ணம் கொண்டு சமூக விதிமுறைகளில் மாட்டிக் கொள்ளும் மக்கள் எண்ணற்றோர் இந்த உலகத்தில் வாழ்கின்றனர். நீங்கள் உங்கள் மீது அன்பு கொண்டு உங்களுக்கு பிடித்ததை செய்யும் பொழுது தான் உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் மற்றும் உங்கள் மீது உண்மையாக அன்பு கொண்டவர்களை நீங்கள் அறிய முடியும்.
"நம்மள மீறி நடக்கிற விஷயத்தை பத்தி ஃபீல் பண்ணி நாம கண்ட்ரோல்ல இருக்க விஷயத்தை கோட்ட விற்ற கூடாது. உன் மனசுக்கு ஒண்ணு சரின்னு படுதா நீ பாட்டுக்கு அதுக்கு செய்ய வேண்டியத கரெக்டா செஞ்சுட்டே தான் இருக்கணும், அது நீ நினைச்ச மாரி முடிஞ்சாலும், முடியாட்டியும் நீ கரெக்டான விஷயத்த தான் செஞ்சேனு ஒரு திருப்தி இருக்கும்ல அது ஒன்னு தான் லைஃப்ல நமக்கு 100% கிடைக்கக்கூடிய ஒரே விஷயம். மத்தது எல்லாம் 50-50 தான்" வாயை மூடி பேசவும் என்னும் ஒரு திரைப்படத்தில் இந்த வசனம் இடம் பெற்று இருக்கும்.
நமக்கு ஒரு விஷயம் பிடித்து இருந்தால் பல சமயம் அதை செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயத்திலேயே அதை நாம் செய்யாமல் இருந்திருப்போம். ஆனால் அந்த ஆசையை ஒருபோதும் மறந்து இருக்க மாட்டோம். நாம் வாழும் காலம் வரை அதை செய்திருக்கலாமோ என்று எண்ணியே வாழ்வோம். இந்த மாதிரியான மன உறுத்தல்களை தவிப்பதற்கு நாம் தயக்கங்களை விட்டு அதை ஒரு முறை முயற்சித்துப் பார்க்க வேண்டும். அது நம் விருப்பத்தின் படி முடிந்தாலும், முடியாவிட்டாலும் நாம் அதற்காக முயன்றோம் என்ற ஒரு சந்தோஷம் நமக்கு கிடைக்கும். அதையே இந்த வசனத்தில் அழகாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த தீபாவளியில் இருந்து உங்களை நேசிக்க ஆரம்பியுங்கள், உங்கள் நலனிலும், விருப்பங்களிலும் அக்கறை கொள்ளுங்கள்.