தஞ்சாவூரில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த வளர்ந்தார் சுகிதா சாரங்கராஜ்(இ. அந்தக் காலத்தில் பேருந்து வசதி கூட இல்லாத அந்த கிராமத்தில் அனைவரும் படித்தவர்களாக இருந்தனர். இருப்பினும் வெளியுலகம் பற்றி பெரிதும் அறியாதவர்களாய் சடங்குகளையும், கிராமத்து கலாச்சாரத்தையும் பின்பற்றி கொண்டு இருந்தனர். தொலைக்காட்சி கூட அப்பொழுது பெரிய அளவில் இல்லை. அங்கு வார இதழ்களை தான் அனைவரும் படித்து செய்திகளை அறிந்து கொண்டனர். அப்படித்தான் சுகிதாவிற்கு ஊடகம் என்ற துறை அறிமுகம் ஆனது. அவர் வீட்டில் வாங்கும் இதழ்களை படிப்பது மூலம் அவருக்கு அந்த துறையில் ஆர்வம் ஏற்பட்டு பத்திரிகையாளராக வேண்டும் என்ற ஆசை வந்தது.
ஆனால் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊராளும், பெற்றோர்களாலும் நிராகரிக்கப்பட்ட சுகிதா தனது செய்தியாளராக வேண்டும் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக சென்னை வந்தார். அவர் செய்தித்தாள்கள் படித்தது மூலம் அதில் இருந்து கிடைத்த அறிவை வைத்து சென்னையில் பத்திரிக்கையாளர் ஆகிவிடலாம் என்ற ஆசையோடு வந்தார்.
ஆனால் சென்னையில் யாரையும் தெரியாததால் மற்றும் ஊடகத்துறையில் யாரையும் தெரியாததால் அங்கு வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு தினமலரில் சிறப்பு செய்தியாளராக பணியாற்ற தொடங்கினார். அதன் பிறகு சன் டிவியில் அவர் சிறப்பு செய்தியாளராக பணியாற்றிக் கொண்டு இருந்தபோதுதான் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அந்த தேர்தலுக்காக செய்தி சேகரிப்பு செய்து அதன் மூலம் தனது திறமையை நிரூபித்தார். பிறகு கலைஞர் டிவியில் பணியாற்றினார்.
இந்தத் துறையில் கொஞ்சம் கொஞ்சமாக திறமைகளை வளர்த்துக் கொண்டு பிரைட் டைம் நிகழ்ச்சியில் டிபேட் தொகுப்பாளராக மாறினார். ஆண்களுக்காக மட்டுமே கட்டமைக்கப்பட்ட ஊடக துறையில் பெண்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் பிறந்து வளர்ந்த ஊரில் அனைவரும் படித்திருந்தாலும் ஆண்கள் முன்பு பேசுவதற்கு ஒரு தயக்கம் இருந்தது. இது போன்ற பாலின பாகுபாட்டை பார்த்து வளர்ந்த சுகிதா பாலின சமத்துவம் பற்றி நிறைய பேச ஆரம்பித்தார்.
இவர் எழுதிய கட்டுரைகளும், பேச்சுக்களும் ஆறு முறை தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றது. மேலும் வேலை செய்யும் இடத்தில் பெண்கள் என்றால் இதைப்பற்றி தான் பேச வேண்டும், இதை தான் எழுத வேண்டும் என்று கட்டுப்பாடும் முன்பு இருந்தது. ஒரு பெண் ஆணை விட பெரிய பதவிக்கு சென்றால் “ஒரு பெண் சொல்லி நாம் கேட்க வேண்டுமா” என்ற எண்ணம் கொண்ட ஆண்களும் இருந்தனர். இவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது டிமானிடைசேஷன், ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழ்நாட்டில் இரண்டு பெரிய முதலமைச்சர்களின் இறப்பு போன்ற நிகழ்வுகள் நடந்ததால் இந்த பெரிய நிகழ்வுகளை பற்றி செய்திகளை கவர்ந்து தனக்கு இருக்கும் திறமையை நிரூபித்தார்.
பிறகு ஒரு பிரபலமான சேனலில் டிஜிட்டல் ஹெட் ஆக இவர் நியமிக்கப்பட்டார். தினமும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தொடங்கினார். தற்போது செய்தி வரலாற்றில் முதல் பெண் பொறுப்பாசிரியராக இருக்கிறார்.
இவரது இந்த வாழ்க்கை பயணத்திற்கு இடையில் இவர் யாரை விரும்பி திருமணம் செய்து கொண்டாரோ அவருடன் விவாகரத்தும் நடந்தது. காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு கோர்ட்டுக்கு சென்று விவாகரத்து செயல்முறைகளை செய்துவிட்டு மீண்டும் மாலை நிகழ்ச்சிக்கு வேலைக்கு திரும்பினார். ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இவருக்கு எப்போதும் இருந்தது. வேலை மட்டும் தான் வாழ்க்கையில் அவரை முன்னெடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு தனக்கு பிடித்த துறையில் தனது திறமைகளை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் சுகிதா.
குடும்பத்தை விட்டும் ஊரை விட்டும் ஒதுக்கப்பட்ட இவரை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டு வந்தனர். இவரின் வளர்ச்சிக்கு பிறகு ஊரில் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தனர். அதன்பிறகு சுகிதா மீண்டும் அவர் குடும்பத்தோடு இணைந்தார்.
சுகிதாவின் ஆலோசனை:
நமக்குப் பிடித்த ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதை கற்றுக் கொண்டு, அதில் வரும் சவால்களை எதிர்கொள்ள தைரியம் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்று சுகிதா ஆலோசனை கூறுகிறார்.