ஆணாதிக்கம் நம் சமூகத்தில் பரவியுள்ளதற்கு காரணம் ஆண்கள் மட்டுமா? அணாதிக்கம் அதிகம் உருவாக பெண்களும் பெரும் அளவில் பங்கு அளிக்கின்றனர் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை. நிறைய நேரங்களில் ஆண்களை விட பெண்களே பெண்களை ஆதரிக்காமல் போகின்றனர்.
உதாரணத்திற்கு மாமியார் மருமகளை எடுத்துக் கொள்ளலாம். மாமியார், மருமகள் என்றால் எப்பொழுதும் சண்டை சச்சரவு உடன் இருக்கும் ஒரு உறவாகவே பெரும்பாலான வீடுகளில் இருந்து வருகிறது. மாமியார் மருமகளுக்கு எதிராக சதி செய்வது, மருமகள் மாமியாருக்கு எதிராக சதி செய்வது, கருத்து வேறுபாடுகள் இதுபோன்ற பிரச்சனைகளால் ஒரு பெண் இன்னொரு பெண்ணை கீழே தள்ள நினைக்கின்றனர்.
இன்னொரு உதாரணமாக இளம் பெண்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு பெண் அவளுக்கு வசதியாக இருக்கும் ஒரு உடையை அணிந்து இருந்தால், அதாவது சுடிதார்கள் அணிந்திருக்கும் சில பெண்கள் மத்தியில் ஒரு மேற்கத்திய ஆடை அணிந்து இருந்தால் அந்தப் பெண்ணை தாழ்த்தி, அவள் ஆண்களை கவர்வதற்காக தான் இந்த மாதிரியாக உடை அணிகிறாள் என்று அவளைப் பற்றி இழிவான கருத்துக்களை வெளியிடுவர்.
இன்னொரு உதாரணம் நம் வீட்டிலேயே பார்க்க முடியும். அம்மாக்கள் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவளிக்காமல் "அவன் ஆம்பள புள்ள அப்படித்தான் இருப்பான், நீ தான் பொம்பள புள்ளையா அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்" என்று கூறுவது முதல், அவன் சாப்பிட்ட தட்டையும் நீ தான் எடுக்கணும் என்று சிறு வேலையையும் அந்த ஆணை விடாமல் பெண் பிள்ளைகளையே வேலை வாங்குவர்.
இந்த உதாரணங்களை எடுத்து அதை பெண்களுக்கு பெண்கள் ஆதரவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். மாமியாரும், மருமகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தால் அந்த வீடு எவ்வளவு அன்பு நிறைந்ததாக இருக்கும். இருவருக்கும் கனவுகள் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தால் எவ்வளவு நிம்மதியான வாழ்க்கையாக இருக்கும்.
பெண்கள் போடும் உடைகளை வைத்து அவர்களைப் பற்றி அவதூறான கருத்துக்களை பரப்புவதற்கு பதிலாக "அவளுக்கு பிடித்திருக்கு அவள் போடுகிறாள்", "அவளுக்கு வசதியா இருக்கிற உடையை அவள் அணிந்து கொள்கிறாள்" என்ற எண்ணம் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக, அவளை இழிவு படுத்தாமல் பேசினால் இந்த சமூகத்தில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படும்.
வீடுகளில் அம்மா பாலியல் பாகுபாடு இல்லாமல் குழந்தைகளை வளர்த்தால் அந்த பெண் குழந்தை தன்னை தாழ்த்தி எண்ணாமல் இருக்கும், அந்த ஆண் குழந்தையும் கர்வம் கொள்ளாமல் வளருவான்.
இங்கு பெண்கள் பெண்களை மதித்தால், ஆதரித்தால் ஆணாதிக்கத்தையும், சமூக விதிகளையும் சுலபமாக முறியடிக்க முடியும். ஒரு பெண் இன்னொரு பெண்ணை சகோதரியாக நினைத்தால், அவளுக்கு ஆதரவு அளிக்க முடியாவிட்டாலும் அவளை தாழ்த்தி பேசாமல் இருந்தால் ஒரு மிகப்பெரிய மாற்றம் இந்த சமூகத்தில் ஏற்படும்.