ஏன் இளம் பெண்கள் நச்சு வாய்ந்த உறவுகளில் மாட்டிக் கொள்கின்றனர்?

Devayani
22 Oct 2022
ஏன் இளம் பெண்கள் நச்சு வாய்ந்த உறவுகளில் மாட்டிக் கொள்கின்றனர்?

இந்த சமூகம், சிறு வயதில் இருந்து ஒரு பெண்ணின் அனைத்து நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கிறது. எனவே, பெண்களுக்கு சிறு வயதில் இருந்தே சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், அந்த மறுபக்க வாழ்க்கை அவர்கள் நினைப்பது போல் இனிப்பான ஒன்றாக பெரும்பாலும் அமைவதில்லை. சுதந்திரத்தை தேடிச் செல்லும் பெண்கள் சில வெளி வர முடியாத சூழ்நிலைகளில் சிக்கி கொள்கின்றனர். 

சில இளம் பெண்கள், அவர்கள் வெளிவர நினைத்தாலும் வெளியே வர முடியாத நச்சுத்தன்மை வாய்ந்த காதல் உறவுகளில் மாட்டி தவிக்கின்றனர். உதாரணத்திற்கு, காலையில் கல்லூரி சென்று மாலை நேரடியாக வீட்டுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பெண், தன் குடும்பத்திடம் அவள் காதலன் அவளுக்கு பிரச்சனை தருகிறான் என்று எப்படி சொல்ல முடியும். அப்படி அவள் கூறினாலும், அவள் காதல் கொண்டுள்ளதால் அவள் வீட்டில் தற்போது இருக்கும் பிரச்சனையை விட ஒரு பெரிய பூகம்பம் வெடிக்கும். இப்போது, அவளுக்கு அந்த உறவில் இருந்து எப்படி வெளிவருவது என்றும் தெரியாமல், வீட்டில் உதவியும் கேட்க முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகிறாள். இந்த ஒரு ஆபத்தான நிலையில் இருந்து வெளிவர வேண்டும் எனில் அவள் குடும்பத்திலும், சமூகத்திலும் அவளுக்கு உள்ள நல்ல பெயரை கெடுக்க துணிய வேண்டும்.

நஞ்சு வாய்ந்த உறவுகளில் இருப்பதை யாரும் எதிர்பார்ப்பதும் இல்லை, விரும்புவதும் இல்லை. அது ஒரு உறவில் ஆரம்ப கட்டத்தில் உள்ள சில எச்சரிக்கையான விஷயத்தை கவனிக்காமல் போனதால் ஏற்படக்கூடிய ஒரு நிலைமையாகும். இந்த ஆபத்தான எச்சரிக்கைகளை முதல் முறை காதல் கொள்பவர்களால் சுலபமாக புரிந்து கொள்ள முடியாது. அதை புரிந்து கொள்ளும் திறனும் அவர்களுக்கு இருப்பதில்லை. 

காரணம் படங்களில், டிவிகளில் பார்ப்பதை வைத்து காதல் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். நம் வீட்டிலும் குழந்தைகளிடம் காதல் பற்றி எல்லாம் பேசுவதில்லை என்பதால் அவர்களை எச்சரிப்பதற்கு யாரும் இல்லாமல் போகிறது. 

காலம் காலமாக நம் இந்திய குடும்பங்களில் பிள்ளைகளுக்கு அவர்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்குவதில்லை. இன்றைக்கும் கூட வீட்டில் அளவுக்கு மீறிய கண்டிப்பு கிளர்ச்சியை மட்டுமே தரும் என்பதையும், காதல் உறவுகள் இயல்பான ஒன்று என்பதையும் புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றனர். 

கண்டிப்பாக இருப்பது தான் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கும் பெற்றோர், பெண் குழந்தைகளிடம் நாட்டு நடப்புகளை பேசி, அவர்களுக்காக எப்போதும் பெற்றோர்கள் பக்கபலமாய் இருப்போம் என்று சொல்வதுதான் உண்மையான பாதுகாப்பு என்பதை உணர தவறுகின்றனர். அவளுக்கு துணையாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்று உணரும் போது தான் அவளால் நஞ்சுத்தன்மை வாய்ந்த உறவுகளிலிருந்து வெளியே வர முடியும். 

பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைப்பதால் அவர்கள் வெளிவர முடியாத ஆபத்தான உறவுகளில் சுலபமாக மாட்டிக் கொள்கின்றனர். பெற்றோர்கள் இப்படி ஒரு சங்கடமான நிலையை தடுப்பதற்கு, பெண் குழந்தைகளிடம் எப்பொழுதும் அவர்கள் துணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை தர வேண்டும். அது அவர்களுக்கு நஞ்சு வாய்ந்த காதல் உறவுகளில் இருந்து வெளிவர மிக உதவியாக இருக்கும்.

Read The Next Article