சம உரிமை பற்றி பேசும்போதெல்லாம் ஆணும் பெண்ணும் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள் அவர்களுக்கு சம உரிமை எவ்வாறு வழங்க முடியும் என்ற விவாதம் தலைதூக்கி நிற்கிறது. பெண்களுக்கான சம உரிமையை இந்த விவாதத்தால் மறுக்க முடியாது. ஏனெனில் சமூகத்தில் சம உரிமை வழங்குவதற்கும் உயிரியல் ரீதியான வேறுபாட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
பெண்ணியம், எப்பொழுதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதற்காக போராடுவது. ஒவ்வொரு மனிதருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் வழங்க வேண்டும். சம உரிமை பற்றி விவாதிக்கும் போது ஆண்களைப் போல் பெண்களால் வலுவான பொருட்களை தூக்க முடியுமா? ஆண்களைப் போல் வீரமாக இருக்க முடியுமா? இது போன்ற கேள்விகளின் மூலம் சம உரிமை அளிப்பதை இந்த சமூகம் மறுக்கிறது. ஆணாதிக்க வாதியும் பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பவர்களுமே இதுபோன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.
ஆணும் பெண்ணும் உயிரியல் ரீதியாக சமமானவர்கள் இல்லை என்ற கருத்தை நம்மால் மறுக்க முடியாது. ஆனால் கல்வி உரிமை, வேலை வாய்ப்பு, பேச்சுரிமை, பாதுகாப்பு, அவர்கள் வாழ்க்கை பற்றி முடிவு எடுக்கும் உரிமை போன்றவற்றிற்கும் உயிரியல் வேறுபாடுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் அனைத்து இந்தியர்களுக்கும் பொருந்தும். ஆக பெண்களுக்கு இந்த உரிமைகளை மறுப்பதால் அவர்கள் மனிதர்கள் இல்லையா? அல்லது இந்தியர்கள் இல்லையா?
பெண்களுக்கு கர்ப்பப்பை இருப்பதால் குழந்தையை பெற்று எடுக்கும் ஒரு கருவியாகவே கருதப்படுகிறாள். மாதவிடாய் வருவதால் புனித மற்றவர்களாய் கருதப்படுகின்றாள். மார்பகம் உள்ளதால் கவர்ச்சிப் பொருட்களாக பார்க்கப்படுகின்றாள். இதுபோன்று பெண்களை நினைப்பவர்கள் அவர்கள் அதே கர்ப்பப்பையில் இருந்து தான் பிறந்தார்கள் என்றும், மாதவிடாய் ரத்தத்தில் தான் உயிர் பெற்றார்கள் என்றும், மார்பகத்தில் தான் சில ஆண்டுகள் பசியாற்றினார்கள் என்றும் புரிந்து கொள்ள தவறுகின்றனர்.
பெண்ணியம் ஆணும், பெண்ணும் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள் என்ற அறிவியல் கருத்தை மறுக்கவில்லை. அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக போராடிவது. பெண்களை சக மனிதர்களாக நடத்தாமல் இருப்பதற்கு உயிரியல் வேறுபாடுகளை காரணம் காட்ட முடியாது. எனவே, உயிரியல் வேறுபாட்டை காரணம் காட்டி சமூக சமத்துவமின்மையை ஆதரிப்பதை நிறுத்துங்கள்.