இன்றும் பல இந்திய குடும்பங்களில் குடும்ப வன்முறை, உடலுறவு, விவாகரத்து போன்றவற் பற்றி பேசுவதற்கு நிறைய தடைகள் உள்ளன. குடும்பங்கள் இதைப்பற்றி பேசுவதை விரும்புவதில்லை, காரணம் அவை கலாச்சார சீர்கேடாக பார்க்கப்படுகிறது. இளம் பெண்கள் விவாகரத்தை பற்றி பேசுவதை குடும்பங்கள் காது கொடுத்து கேட்க மறுக்கிறது. ஏனெனில், அவ்வாறு கேட்டால் அவர்கள் அதற்கு சம்மதிப்பதாக கருதி பயம் கொள்கின்றனர்.
இந்திய குடும்பங்களில் விவாகரத்து அல்லது பிரிவு பற்றி பேசினால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அப்படியே கேட்டாலும் பெண்தான் சகித்துக் கொண்டு வாழ வேண்டும், ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்ற கூற்றை முன்வைத்து விவாதத்தை முடித்துக் கொள்வார்கள். நம் சமூகத்தில் திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கும் பந்தமாக மட்டும் பார்க்காமல் ஏழு ஜென்மத்திற்கும் தொடரும் பந்தமாக பார்க்கப்படுகிறது. எனவே விவாகரத்து பற்றிய எதையும் அவர்கள் யோசித்துப் பார்க்கக்கூட தயாராக இல்லை. டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் என்று கூறப்படும் உறவுகளில் பல பெண்கள் மாட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்த சமூகத்தின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்கும், கலாச்சாரத்தை முன் காட்டியும் அவர்கள் விவாகரத்து பற்றி யோசிக்காமல் இந்த நஞ்சு வாய்ந்த உறவுகளிலேயே வாழ்கின்றனர். விவாகரத்து கலாச்சார சீர்கேடு என்று சிறு வயதில் இருந்து அவர்கள் மனதில் பதிந்து இருப்பதால் அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் திணறுகின்றனர்.
உரையாடலின் போது கூட எப்போதும் ஆண்கள் விரும்புவதையே குடும்பத்தில், பொது இடத்தில், நண்பர்கள் மத்தியில் பேசுகிறார்கள். பெண்கள் பேசுவதை பெரும்பாலும் அவள் உலறுகிறாள், அவள் தேவைக்காக மட்டும் பேசுகிறாள் என்று கூறி வாயை அடைத்து விடுகின்றனர். அதைப்போல் பாலியல் சம்பந்தமான அர்த்தமற்ற நகைச்சுவையை சொல்லி பெண்களை தாழ்த்தி நகைக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் மனைவியை விட கணவர் பெரியவராக இருப்பதால் அவருக்கு நிறைய அனுபவங்கள் இருக்கும் மற்றும் அடிக்கடி வெளியே செல்வதால் நாட்டு நடப்பு தெரிந்திருக்கும் என்ற எண்ணம் இந்த சமூகத்தில் இருக்கிறது. இளம் பெண்கள் சில முக்கியமான சமூக கருத்துக்களை புரிந்து கொள்வதில்லை என்று கூறி அவர்களின் பேச்சை மறுத்து விடுகிறது இந்த சமூகம். எந்த குடும்பம் அவர்கள் குழந்தைகளுடன் விவாகரத்து மற்றும் பிரிவுகள் பற்றி பேச மறுக்கிறதோ, அவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் கவனம் தேவைப்படுகிறது, அவர்கள் விவாகரத்து, பாலியல் பற்றி பேச வரும்போது எல்லாம் அவர்களை தட்டிக் கழித்தால், அது உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள உறவுக்கு ஒரு தடையாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றை கண்டுக்காமல் போவதால் இந்த சமூகத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை. விவாகரத்து மற்றும் பிரிவுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை கண்டறிய மற்றும் அதிலிருந்து வெளியே வருவதற்கான வழிகளை கற்றுக் கொடுக்க வேண்டும். இது இந்த சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் மற்றும் அவர்களுக்கும் ஒரு நிம்மதியான வாழ்க்கையை அமைத்து கொள்ள உதவும். இளம் பெண்களுக்கு திருமணம் பற்றிய கற்பனை கதைகளை சொல்லி வளர்ப்பதற்கு பதிலாக உண்மை நிகழ்வுகளை சொல்லி அதை எப்படி கையாள்வது என்று கற்றுக் கொடுங்கள், அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.