பல நூற்றாண்டுகளாக பெண்களுக்கு சகித்துக் கொள்ள கற்றுத் தரப்படுகிறது. இந்த ஆணாதிக்க சமூகம் இதேபோன்று அனுசரித்து செல்லும் பெண்களை போற்றி, பெண் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண்களுக்கான வரையறையை நிர்ணயிக்கிறது. இன்னும் நாம் எத்தனை காலங்களுக்கு இதுபோன்ற நடந்து கொள்ள போகிறோம்? இன்னும் எத்தனை விஷயங்களை நாம் மற்றவர்களுக்காக அனுசரித்து தியாகம் செய்யப் போகிறோம்?
நமது சந்தோஷத்தையும், நிம்மதியையும் நோக்கி நாம் செல்ல வேண்டும். இது அனைத்து மனிதனின் உரிமையாகும். எனவே, இந்த பெண்கள் தினம் முதல் இந்த ஐந்து விஷயங்களை தியாகம் செய்யாதீர்கள்.
1. பணரீதியான சுதந்திரம்:
பல பெண்கள் தற்போது வேலைக்கு செல்கின்றனர். இருப்பினும் அவர்கள் பணரீதியாக சுதந்திரமாக இருக்கிறார்களா? என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. உண்மையான பண ரீதியான சுதந்திரம் என்பது வேலைக்கு செல்வது மட்டுமல்ல. நாம் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை முடிவெடுப்பது தான் சுதந்திரமாகும்.
இன்வெஸ்ட்மென்ட் செய்ய மற்றவர்களிடம் உதவி கேட்பது வேறு, அதேபோல் குடும்பத்தினர்களை உங்களின் வங்கி கணக்கினை, சேமிப்பினை மற்றும் இன்வெஸ்ட்மென்ட்களை பார்த்துக் கொள்ள சொல்வது முற்றிலும் வேறானது. அது நம்மை மறுபடியும் மற்றவர்களை சார்ந்து இருப்பது போல ஆகிவிடும். பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி அதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
2. வேலை:
இன்று பல பெண்கள் படித்திருக்கின்றனர். இருப்பினும் அவர்களால் ஒரு வேலையை வெற்றிகரமாக தொடர முடிகிறதா? அனைவருக்கும் கனவுகள், ஆசைகள் மற்றும் வேலைக்கான இலக்குகள் இருக்கும். அதை மிகவும் முக்கியமாக கருதுவோம். ஆனால் ஒரு ஆராய்ச்சியின் படி வேலை செய்யும் பெண்கள் 2021இன் படி 19 சதவீதம் குறைந்துள்ளது.
இதற்கான முக்கிய காரணமாக திருமணம் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் கணவன் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் குழந்தைகளை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிறைய விதிமுறைகள் இருக்கிறது. இதனால் வேலையில் வெற்றிகரமாக இருக்கும் பெண்களும் வேலையை விட்டு இந்த அணாதிக்க விதிமுறைகளை பின்பற்ற தொடங்கி விடுகின்றனர். இன்னும் எத்தனை காலங்களுக்கு நாம் நமது கனவுகளையும், வேலைகளையும் இழக்க போகிறோம்.
3. உறவுகள்:
உறவுகள் நிறைய விஷயங்களால் நிறைந்தது. அன்பு, புரிதல், நம்பிக்கை, மரியாதை, நேர்மை மற்றும் அனுசரிப்புகள். ஆனால் இருவரும் அனுசரித்து செல்ல வேண்டும். அதை ஒருவர் மட்டும் செய்து கொண்டிருக்கக் கூடாது. பாரம்பரியமாக பெண்கள் உறவுகளில் அனுசரித்து செல்ல கற்றுக் கொடுக்கப்படுகின்றனர்.
நாம் மகிழ்ச்சியாக இல்லாத ஒரு உறவில் நாம் இருக்கக் கூடாது. எப்பொழுதாவது சுயமரியாதை, சமத்துவம், நேர்மை, வேலை, குழந்தை, குடும்பம், நண்பர்கள், மதம் இவற்றை அந்த உறவுக்காக விட்டுப் கொடுக்க வேண்டும் எனில் அந்த உறவில் இருந்து விடைபெறும் நேரம் அது.
4. ஆரோக்கியம்:
பெண்கள் அவர்களின் உடல் நலத்தை பெரிதாக கருதவில்லை என்பதை நாம் நம் வீட்டில் இருக்கும் தாய்மார்களிடையே பார்த்திருப்போம். பெண்கள் எப்போழுதும் மற்றவர்களின் தேவைகளை முன்னிறுத்த வேண்டும் என்று கூறிய வளர்க்கப்படுகின்றனர். அது வேலையிலும் சரி வீட்டிலும் சரி. பல பெண்கள் வேலையையும் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். அது மட்டும் இன்றி குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும், அதேபோல் கணவனையும் குழந்தை போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். இப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஓய்வு எடுக்க நேரம் இன்றி வேலை செய்தால் அதே உடல் நலத்தை பெரிய அளவில் பாதிக்கும். எனவே, பெண்கள் அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொண்டு, அவர்களின் உடல் நலத்தின் மேல் அக்கறை செலுத்த வேண்டும்.
5. நண்பர்கள், குடும்பம் மற்றும் உங்களுக்கான நேரம்:
வேலை, பொறுப்புகள் என பல இருந்தாலும் நமக்கான நேரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நீங்கள் தனியாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களோடு நேரத்தை செலவிட்டாலும் சரி. எனவே, உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். தினமும் 30 நிமிஷம் உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.