பெண்கள் வாழ்க்கையில் திருமணம் என்ற ஒரு விஷயம் நிறைய மாற்றங்களை கொண்டு வருகிறது. பலர் திருமணம் தான் ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்று நினைக்கின்றனர். அதனாலேயே சிறுவயதில் இருந்து அனுசரித்து செல்லவும், மற்றவர்களை உபசரிக்கவும் கற்றுத் தருகின்றனர். ஒரு பெண் மற்றவர்களின் தேவையை அவள் தேவைக்கு முன் வைத்தால் மட்டுமே அவளை சிறந்த பெண்ணாக இந்த சமூகம் கருதுகிறது. சாதாரணமாகவே பெண்களுக்கு இந்த சமூகத்தில் நிறைய விதிமுறைகள் இருக்கும். அதுவும் திருமணமான பெண் என்றால் இந்த விதிமுறைகள் அதிகமாகவே இருக்கும்.
அப்படித்தான் ஒரு பெண் தாயான பிறகு அவளின் பொறுப்புகள் அதிகரிக்கிறது. அதற்காக இந்த சமூகத்தில் இருந்து உடல் ரீதியாக, மனரீதியாக பல விமர்சனங்களை அவள் பெறக்கூடும். கீழுள்ள ஐந்து விஷயங்களை பெண்கள் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும்.
1. கணவன் வரும் வரை உண்ணாமல் இருப்பதை நிறுத்துங்கள்:
காலம் காலமாக தாய்மார்கள் இதை பின்பற்றி வருகின்றனர். பல தாய்மார்கள் பசியாக இருந்தாலும் கணவன் வந்து உண்ணும் வரை காத்திருந்து அதன் பிறகு தான் உண்ணுவார்கள். இது தான் கணவருக்கு தரும் மரியாதை என்றும் கருதுகின்றனர். இனியாவது உங்களுக்கு பசித்தால் நீங்கள் உண்ணுங்கள். உங்கள் கணவரின் மீது பாசத்தை காட்ட வேண்டும் என்றால் அவர் சாப்பிடும் போது அவருடன் அமர்ந்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருங்கள்.
2. கடைசி துண்டு உணவுகளை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்காதீர்கள்:
நாம் அனைவருக்கும் தெரியும் நம் தாய் நம் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று. அந்த அன்பை கடைசி துண்டு உணவுகளை நமக்கு அளித்து தான் நிரூபிக்க வேண்டும் என்று இல்லை. இது சாக்லேட், கேக்குகளுக்கு மட்டுமல்ல அனைத்திலும் அனுசரித்துச் செல்வது உங்களின் சிறு, சிறு சந்தோஷங்களையும் அனுபவிக்க விடாமல் பாதிக்கிறது.
3. மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்று கவலைப்பட வேண்டாம்:
நாம் என்ன செய்தாலும் மற்றவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே, மற்றவர்களுக்காக உங்களின் வாழ்க்கையை உங்கள் விருப்பத்தின்படி வாழாமல் இருக்காதீர்கள். உங்களுக்கு புதிதாக ஒரு ஹேர் ஸ்டைல் செய்து கொள்ள வேண்டும் என்றாலும் நல்ல பளிச்சிடும் உடையை அணிய வேண்டும் என்றாலும் அல்லது எதுவாக இருந்தாலும் நீங்கள் அதை செய்து கொள்ளலாம். மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்று நினைத்து உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல் இருப்பது உங்களுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி அளிக்க போவதில்லை.
4. அனைத்து வேலைகளையும் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள்:
பலமுறை பெண்கள் வேலையையும், வீட்டையும் தனி ஆளாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். எனவே, உங்களுக்கு உதவி வேண்டுமென்றால் அதை வீட்டில் இருப்பவர்களிடம் கேட்பதில் எந்த தவறும் இல்லை. அதற்காக நீங்கள் கூச்சமும் படத் தேவையில்லை.
5. குழந்தையை ஒய்வு எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள்:
குழந்தைகளை பார்த்துக் கொள்வது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். எனவே தனியாளாக நீங்கள் உங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கணவனிடம் இருந்தும், வீட்டில் இருப்பவர்களிடமும் உதவி பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கான ஓய்வை மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
6. அனைத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்:
தாய்மார்கள் பெரும்பாலும் வேலை, குழந்தை வளர்ப்பது, கணவனை பார்த்துக் கொள்வது என அனைத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்காக அவர்களை வருத்திக் கொண்டு கடுமையாக உழைக்கவும் செய்கின்றனர். சில சமயம் நீங்கள் மற்றவர்கள் சிறப்பு என்று கூறும் வரையறைக்குள் பொருந்த வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் சிறப்பாக இருந்தால் போதும். எனவே, உங்களை வருத்திக்கொண்டு அனைத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது மன அழுத்தத்தை தான் அதிகரிக்கும்.