நயன்தாரா திரையுலகுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 20 ஆண்டுகளில் அவர் பல சவால்களை சந்தித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் சந்தித்த சவால்களை கடந்து, தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார்.
பெண்களுக்கு சினிமாவில் முக்கியத்துவம் இல்லாத காலகட்டத்தில் தான் நயன்தாரா திரை உலகிற்கு வந்தார். அப்படி இருக்க இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
திரை உலகில் பெண் கதாநாயகிகளுக்காக ஒரு புதிய பாதையை நயன்தாரா அமைத்து இருக்கிறார். பெண்களை மையமாகக் கொண்டு படத்தை இயக்கினால் படங்கள் வெற்றி அடையாது என்று பல ஆண்டுகளாக திரை உலகம் உருவாக்கிய பிம்பத்தை நயன்தாரா உடைத்திருக்கிறார். இவர் வழிகாட்டிய இந்த பாதையில் பல கதாநாயகிகள் தற்போது பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வருகின்றனர். பல தயாரிப்பாளர்களும் பெண்களை மையமாக கொண்ட கதைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த 20 ஆண்டு பயணத்தில் நிறைய சவால்களை நயன்தாரா சந்தித்துள்ளார். தற்போது அவர் குழந்தை பெற்றதைப் பற்றி நிறைய சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்து கொண்டிருந்தது. திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக அவரின் கனெக்ட் படத்திற்கான ப்ரமோஷனில் கலந்து கொண்ட நயன்தாரா, தொகுப்பாளர் டிடி உடன் நடந்த நேர்காணலில் அவர் திருமணத்தை பற்றி கூறியது அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
நம் சமூகத்தில் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லலாமா? கூடாதா? என்ற விஷயம் ஏன் பெரிய விவாதமாக இருக்கிறது என்று நயன்தாரா கேட்கிறார்.
மேலும், ஆண்கள் திருமணம் முடிந்த அடுத்த நாளில் இருந்தே வேலைக்கு செல்ல தொடங்கி விடுகிறார்கள். அதுவே ஒரு பெண்ணுக்கு கல்யாணம் முடிந்துவிட்டால் அதை ஏன் இடைவேளியாக பார்க்கிறார்கள்? திருமணம் பெண்ணுக்கு இடைவெளியாக இருக்கக் கூடாது. திருமண வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் உள்ளது. திருமணம் ஒருவரை நிறைவாகவும், வாழ்க்கையில் (settled) பாதுகாப்பான ஒரு நிலையை அடைந்ததாகவும் உணர வைக்கிறது(settled என்பது இங்கு பணத்தை குறிக்கவில்லை. ஒருவர் நமக்காக இருக்கிறார், நமக்கு துணையாக எப்போதும் இருப்பார் என்பதையும் குறிக்கிறது). இதுபோன்று நமக்கு ஒருவர் துணையாக இருக்கும் பொழுது அது நம்மை நிறைய சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தரும்.
ஆண்கள் திருமணமான அடுத்த நாளில் இருந்து பொறுப்பான மனிதராக கருதப்படுகிறார்கள். ஆனால், அதுவே பெண்களுக்கு ஒரே இடைவேளியாக பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறார். நயன்தாராவின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றும் அவருடன் இருப்பவர்களும், வேலை செய்பவர்களும் நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைத்து நன்றி கூறுகிறார். திருமணத்திற்கு பிறகு பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமே முதலில் யாருக்கும் வரக்கூடாது.
"எனக்கு வந்து எப்படி இருக்குன்னா எங்கேஜ்மென்ட் ஆனதுக்கு அப்புறம், இப்போ திருமணமானதுக்கு அப்புறம் நான் இன்னும் சிறப்பாக தான் இருக்கேன். இப்படி ஒரு துணை ஆதரவளிக்க இருப்பதால் என்னால் முன்பை விட நன்றாக வேலை செய்ய முடியும் என்றும் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது" என்கிறார்.
எந்த ஒரு விதிகளும் இருக்கக்கூடாது:
திருமணம் ஒரு அழகான விஷயம் இரண்டு இதயம், இரண்டு உயிர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தான் திருமணம். நாம் ஏன் அதை கொண்டாடக்கூடாது? நாம் ஏன் அதை ஒரு தொடக்கமாக பார்க்கக் கூடாது? திருமணத்தை ஒருபோதும் நம் இலக்குகளுக்கு தடையாக பார்க்கக் கூடாது. அதை மீண்டும் ஒரு தொடக்கமாக பார்த்தால் வாழ்க்கை இன்னும் அழகான ஒன்றாக இருக்கும் என நயன்தாரா கூறியிருக்கிறார்.
நயன்தாரா கூறியது போலவே திருமணம் ஒரு பெண்ணிற்கு இடைவேளை ஆகவோ, அவள் கனவுகளுக்கு தடையாகவோ இருக்கக் கூடாது. அது வாழ்க்கையின் மற்றொரு தொடக்கமாக இருக்க வேண்டும். நமக்காக ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் நம்மை மேலும் நிறைய சாதிக்க ஊக்கவிக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் திருமணத்திற்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.