சில கதைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும், ஒருவர் வாழ்க்கையில் பல சவால்களை கடந்து வருவது மட்டுமல்லாமல், வாழ்க்கை செயல்படும் மர்மமான வழிகளை கண்டு வியப்பாக இருக்கும். ஒரு சிலரின் வாழ்க்கை இதையும் தாண்டியதாக உள்ளது.
தியா பிறந்தவுடன் அவரின் பெற்றோரால் கைவிடப்பட்டு பஞ்சாபில் ஒரு ஆசிரமத்தில் வாழ்ந்தார். பின்பும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நிலையில் அந்த நகரத்தை விட்டு டெல்லியில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்தார். அப்பொழுதுதான் அவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. டொராண்டோவில் இருந்து வந்த அரவிந்தர் பாட்டியா மற்றும் நவ்தீப் பாட்டியா அவரை தத்தெடுத்துக் கொண்டார்.
அரவிந்தர் பாட்டியா மற்றும் நவ்தீப் பாட்டியா திருமணம் ஆகி கனடாவிற்கு சென்றபோது ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்று நினைத்தனர். அப்பொழுதுதான் இந்த அஷ்ரமத்துடன் தொடர்பு கொண்டனர். இது அவர்கள் குடும்பத்தில் எடுத்த ஒரு நல்ல முடிவு என கூறுகின்றனர். இன்று தீயா பாட்டியா தனது 17 வயதில் ஒரு தனது இலக்குக்காக உழைக்கிறார்.
Shethepeopleயிடம் அவர் அளித்த நேர்காணலில் அவர் தத்து எடுக்கப்பட்ட கதை பற்றியும், அவர் பெற்றோர் அவருக்கு ஊக்கம் அளிக்கும் விதம் மற்றும் ஒரு நடிகராக அவர் எப்படி வளர்ந்து வந்தார் என்பதை பகிர்ந்து கொள்கிறார்.
தியா பாட்டியா நேர்காணல்:
ஆதரவில்லாமல் குறைந்த ஊட்டச்சத்து உடைய குழந்தையாக இருந்து தற்போது ஒரு அழகிய குடும்பத்தில் இருப்பது ஒரு அழகான கதை. இதிலிருந்து தெரிகிறது அவரை பெற்றவர்கள் அவரை ஒழுங்காக பார்த்துக் கொள்ளவில்லை. அவர் டெல்லிக்கு வந்த பிறகு அவரின் வாழ்க்கை மாறிவிட்டது.
அவரின் கதையை அவர் நினைவு கூறும்போது "நான் தான் ஆஸ்ரமத்தில் இருந்து அவர்கள் வெளியே கூட்டி வந்த முதல் குழந்தை, என்னை பார்த்த உடனே அவர்கள் என்னை தத்து எடுத்துக் கொள்ள முடிவு செய்தனர். என் தாய் என்னை பார்ப்பதற்கு முன்பே அவருக்கு மனதில் நான் தான் சரியானவள் என்று தோன்றியது. எதுவுமே இல்லாமல் இருந்த நான், தற்போது ஒரு பெரிய பஞ்சாபி குடும்பத்தில் மகளாக இருக்கிறேன்" என்று கூறினார்.
இந்த குழந்தை ஒரு வீட்டை தனக்காக கண்டு கொண்ட பிறகு மீண்டும் ஒரு பெரிய தடையாக மருத்துவர்கள் அவள் இதயத்தில் ஒரு ஓட்டை இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர்.
"எனது குடும்பம் இந்தியாவில் சிறிது நாட்கள் தங்க முடிவெடுத்தார்கள். ஏனென்றால், அப்பொழுது கனடாவின் சட்டம் படி ஆரோக்கியமான குழந்தைகளுக்கு மட்டுமே விசா அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் எனது இதயத்தில் ஓட்டை இருப்பதை கண்டுபிடித்தவுடன் எனது பெற்றோர் ஆசிரமத்தில் அதைப் பற்றி சொன்னார்கள். அதற்கு அவர்கள் நீங்கள் குழந்தையை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். எனது தந்தை அதைக் கேட்டவுடன் அவள் ஒரு குழந்தை, மாற்றுவதற்கு அவள் பொருள் அல்ல, நான் அவளை பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டார்.
சிகிச்சை முடிந்தவுடன் குடும்பத்துடன் டொரன்டோவிற்கு சென்றனர். அவரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது மற்றும் அவர் பெற்றோர்கள் அவளை ஏற்றுக் கொண்டது மட்டும் இல்லாமல் அந்த குடும்பமே அவளை ஏற்றுக் கொண்டது அன்பு என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள உதவியது என்று அவர் கூறுகிறார்.
அவர் ஆறு வயது இருக்கும் போது அவர் தாய் அவளிடம் தத்தெடுத்த கதையைப் பற்றி அனைத்தையும் கூறினார். "நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் என் தாய் பொறுமையாக பதில் கூறினார். மேலும், அது என்னை நன்றியுடன் இருக்க செய்தது" என்று கூறுகிறார்.
தியா சிறுவயதில் இருக்கும் பொழுது பலரால் கேலி செய்யப்பட்டார். அப்பொழுதெல்லாம் அவரின் பெற்றோர்கள் என்ன கூறினார்கள் என்றால் "எனது பெற்றோர் இதை கடந்து வர உதவி செய்து, என்னை முன்னேறுவதற்கு உதவினர். என்னை அவர்கள் பரிதாபப்பட்டு தத்தெடுக்கவில்லை மாறாக தேர்ந்தெடுத்தனர் என்று கூறும்போது என்னை அது இன்னும் நன்றியுடன் இருக்க செய்கிறது".
நடிகராக உருவான கதை:
அமெரிக்காவில் உள்ள ஒரு அறியப்பட்ட ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்பு முறைகளை பற்றி பயிற்சி பெற்றார். அவர் சமூக வலைத்தளங்களில் கன்டென்ட் கிரியேட்டராகவும், அவரது நடன வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.
தீபா மேத்தா மற்றும் டாக்டர் கேபி ஆகியோரின் அனாட்டமி ஆப் வைலன்ஸ் படத்தில் ஒரு பகுதியாக இருந்த இவர், தனது பெற்றோர்களிடமிருந்து உத்வேகம் பெற்று ஒரு கலைஞராக முன்னேறி வருவதாக கூறுகிறார். "என் அப்பாவின் மன உறுதியும், அம்மாவின் ஆன்மீகமும் எனக்கு தினமும் புதிய விஷயங்களை கற்று தருகின்றன. அவர்கள் என்னை சரியான மதிப்புகளுடன் வளர்த்து, எனது பாதையையும் செதுக்க உதவினார்கள். நான் இன்று ஒரு கலைஞராக இருப்பதற்கும், நான் செய்யும் அனைத்தும் என் பெற்றோர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட தன்னம்பிக்கையிலிருந்து உருவானது.
ஒரு கலைஞனாக நிராகரிப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு "இந்த துறையில் பல கதவுகள் மூடி இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள தவறுகின்றனர். நான் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளேன். ஆனால் ஒவ்வொரு நிராகரிப்பும் எனக்கு ஒரு பாடத்தை கற்று தந்தது. எனவே, இதன் மூலம் நான் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன். எவ்வளவு நேரம் எடுத்தாலும் முயற்சிப்பதை நிறுத்தக்கூடாது. நிராகரிப்பு என்பது என் வாழ்க்கையில் நேர்மறையான வளர்ச்சியை தந்திருக்கின்றது".