பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தை செய்து கொள்வதுதான் பாரம்பரியம் என நம் சமூகத்தால் கருதப்படுகிறது. மக்கள் அதையே பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அதாவது நாம் பெற்றோர் இளமை காலத்தில் காதல் திருமணம் அரிதாகவே நடந்திருக்கும். அப்பொழுது அவர்கள் காலத்தில் யாரும் காதல் செய்யவில்லையா?
நிச்சயம் பருவத்தில் இருக்கும்போது காதல் போன்ற உணர்ச்சிகள் அவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கும். ஆனால் அந்த காலத்தில் அவர்கள் அந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கோ, அவர்கள் விரும்பியவர்களை தொடர்பு கொள்வதற்கோ வழிகள் எதுவும் இருந்திருக்காது. அதனால் அவர்களின் காதலை வெளிப்படுத்தாமல் கூட இருந்திருக்கலாம்.
அதேபோல் அவர்கள் வீட்டில் இதுபோன்று ஒருவரை காதலிக்கிறேன் என்று சொல்வதற்கு பயமாக கூட இருந்திருக்கலாம். அப்படி அவர்கள் கூறி அதற்கு அவர்களின் பெற்றோர்கள் சம்மதிக்காமல் இருந்திருக்கலாம்.
அந்த காலத்தில் காதல் இல்லாமல் இல்லை. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள் மற்றும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமே கவுரவம் என்ற எண்ணம் பெரும்பாலும் எல்லோருக்கும் இருந்தது.
அப்படி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நல்ல வாழ்க்கை துணையை தந்தால் பரவாயில்லை, ஆனால் அது எதிர்மறையாக முடிந்தால்?
திருமணத்திற்கு முன்பு எந்த ஒரு பழக்கமும் இல்லாத ஒரு நபருடன் திடீரென்று வாழ்க்கை முழுவதும் அவர்களுடன் வாழ வேண்டும் என்று கூறுகின்றனர். திருமணத்திற்கு பிறகு காதல் செய்த திருமண கதைகள் நிறைய இருந்தாலும், எல்லோருக்கும் அது போன்று நல்ல வாழ்க்கை அமைந்தது என்று சொல்ல முடியாது.
காதல் திருமணம்:
அதற்கு அப்படியே மாறாக இன்று காதல் திருமணங்கள் முன்பை விட நிறைய நடப்பதை நாம் பார்த்திருப்போம். அதற்கு பெற்றோரிடம் சம்பந்தம் வாங்குவது ஒரு போராட்டமாக தான் இருக்கிறது.
ஆனால் திருமணத்திற்கு முன்பு ஒருவரைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு அவர்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கை அழகாக இருக்கும் என பலர் நினைக்கின்றனர். அதற்கு ஏற்றது போல இன்று ஒருவர் மீது காதல் வந்தால் அவர்களை சமூக வலைத்தளங்கள் போன்ற விஷயங்களால் முன்பை விட எளிமையாக தொடர்பு கொள்ள முடிகிறது.
ஆனால் காதல் திருமணம் செய்து கொண்டால் எந்த பிரச்சனையும் வராது என்று நினைக்கக் கூடாது. காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் பிரிவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்ள தவறுவதால் ஏற்படும் பிரச்சனைகள் இவை.
பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணமோ அல்லது காதல் திருமணமோ இவை இரண்டிலுமே நாம் சந்தோஷமாக இருப்பவர்களையும் பார்த்திருப்போம், எதிர்மறையான விஷயங்கள் நடப்பதையும் கேள்விப்பட்டிருப்போம்.
திருமணம் ஒரு புதிய தொடக்கம்:
திருமணம் ஒரு அழகான வாழ்க்கை தொடக்கம். அந்த புதிய வாழ்க்கை தொடக்கத்துடன் நிறைய பொறுப்புகளும் வரும். நீங்கள் எப்போதும் அந்த பொறுப்புகளை ஏற்க தயாராக இருக்கிறீர்களோ, அப்பொழுது அந்த தொடக்கம் அழகானதாக இருக்கும்.
அதேபோல் அந்த காலத்தில் திருமணங்கள் நிறைய ஆண்டுகள் நிலைத்தது என்றும் இந்த காலத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகளை எடுக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. அந்த காலத்தில் திருமணங்கள் நிலைத்திருந்ததற்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்கள் பிரிவதற்கு இந்த சமூகமும், குடும்பமும் சம்மதிக்காமல் கட்டாயப்படுத்தி அவர்களை அதில் இருக்க வைத்தது.
திருமணம் செய்யும்போது அதில் உள்ள நல்ல விஷயங்களை நினைத்து, நம்பிக்கை உடன் அனைவரும் வாழ்க்கையை வாழ நினைக்கிறோம். அது சில காரணங்களால் முடியாமல் போகலாம். ஆனால் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதி தானே தவிர அது மட்டுமே வாழ்க்கையாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமோ அல்லது காதல் திருமணமோ உங்கள் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்து கொள்ளுங்கள். திருமணத்திற்கு பிறகு நிறைய விஷயங்கள் மாறும். எனவே, அந்த மாற்றத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக நீங்கள் இப்பொழுது இருப்பது போலவே திருமணத்திற்கு பிறகும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. திருமணத்திற்கு பிறகு உங்களுக்கென சில கடமைகளும், பொறுப்புகளும் வரும். அதற்காக முன்கூட்டியே தயாராகுங்கள். நீங்கள் இந்த பொறுப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதால் அதை சந்திக்கவும் மனரீதியாக தயாராக இருப்பீர்கள். அப்படி நீங்கள் எப்பொழுது முழுமையாக தயாராக இருக்கிறீர்கள் என்று உணருகிறீர்களோ அப்பொழுது திருமணம் செய்து கொள்ளுங்கள்.