மாதவிடாய்(periods) அனுபவங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசமாக இருக்கும். ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அனுபவம் மற்ற பெண்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம், ஏற்படாமலும் இருக்கலாம். சிலர் முதல் மாதவிடாய் வந்த போது மயங்கி இருக்கலாம், சிலருக்கு குமட்டல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டு இருக்கலாம், சிலருக்கு உடம்பில் வலி ஏற்பட்டு இருக்கலாம், சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் மாதவிடாய் வந்திருக்கலாம்.
பருவமடைந்த ஒவ்வொரு பெண்ணும் மேல் கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றை அனுபவித்து இருப்பார்கள் அல்லது ஒன்றுக்கும் மேல் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். மாதவிடாய் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை/மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த இயற்கையான உடல் செயல்பாடு அனைவருக்கும் வித்தியாசமான அனுபவத்தை அளிப்பது ஆச்சரியமாக இருக்கலாம். இருப்பினும், நாம் மாதவிடாய் பற்றிய பேச்சுகளை பள்ளிகளில், நண்பர்களிடையே, குடும்பங்களுக்குள் மற்றும் பணியிடங்களில் பேச தயங்குவது சரியா?
எல்லாருடைய மாதவிடாயும் வித்தியாசமானது என்பதால் நாம் நம் மாதவிடாயை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது. சில பெண்கள் அவர்களின் இரத்தப்போக்கு விதம், வலியின் அளவை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு தங்களை வெறுக்கிறார்கள். ஏனென்றால், சிலருக்கு ஏழு நாள் வரை இரத்தப்போக்கு இருக்கும், ஐந்து நாள் வரை இருக்கும் அல்லது மூன்று நாளாக கூட இருக்கும், அதே போல் வலியின் அளவும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு வலி அதிகமாக இருக்கலாம், சிலருக்கு வலி இல்லாமலும் இருக்கலாம். அனைத்து பெண்களும் இந்த சமயத்தில் அக்கறை மற்றும் பாசத்தை தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்த சமூகம் மாதவிடாயை ஒரு காரணமாக காட்டி பெண்களை ஒதுக்கி வைக்கிறது.
ஐந்தில் மூன்று பெண்கள் தைரியமாக உணர்வதில்லை, குறிப்பாக மாதவிடாய் சமயங்களில் பெண்கள் தைரியமாகவும், வலிமையாகவும் உணர்வதில்லை. அவர்கள் இப்படி உணர்வதற்கு மாதவிடாயின் போது அவர்கள் அசுத்தமாக இருக்கிறார்கள் என்று இந்த சமூகம் ஒதுக்கி வைப்பது ஒரு முக்கிய காரணமாகும். இந்தியாவில் பல மில்லியன் பெண் பிள்ளைகள் பருவமடைந்த உடன் பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இப்படி இருக்கும் சமூகத்தில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வும், உரையாடல்களும் அவசியமானதாக இருக்கிறது.
மாதவிடாய் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமான ஒன்று என்பதை ஆண்களும், பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் பற்றிய உரையாடல்களை பள்ளிகளிலேயே இயல்பாக கற்றுத் தர வேண்டும். அவ்வாறு அனைவரும் மாதவிடாய் பற்றி அறியும் பொழுது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம், குடும்பத்தினரிடம், கல்லூரியில், பள்ளியில் நண்பர்களிடையில் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
மாதவிடாய் ஆரோக்கியம்:
அதேபோல் அவர்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் பற்றியும் கற்றுக் கொடுக்க வேண்டும். சமூகத்தில் மாதவிடாய் பற்றி பேச தயங்குவதால் பல பெண்களுக்கு அதைப் பற்றின விழிப்புணர்வு கிடையாது. வழக்கத்துக்கு மாறாக இரத்தப்போக்கு இருந்தால், மாதவிடாயின் போது வலி தாங்க முடியாத அளவிற்கு இருந்தால், வேறு வேலை எதுவும் செய்ய முடியாமல் அசதியாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டால் அல்லது மாதவிடாய் வராமல் தள்ளிப் போனால் மருத்துவரை அணுகி அதனை உடனே சரி செய்ய வேண்டும்.
எனவே, பள்ளி பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக மாதவிடாய் கல்வியை தொடங்க வேண்டும். பருவமடையும் வயதில் இருக்கும் ஆண்களும், பெண்களும் மாதவிடாய் என்றால் என்ன, அது பெண்களின் வாழ்வை எவ்வாறு மாற்றுகிறது, எப்படி ஒவ்வொருவருக்கும் அது மாறுபடுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதை அனைவரும் புரிந்து கொண்டால் இந்த சமூகத்தில் பாலின பாகுபாடு இன்றி சமமாக வாழ முடியும், பெண்களின் வாழ்க்கையும் மேம்படும்.