சமூக பாலின பாகுபாட்டை உடைத்த ஐந்து பெண் கதாபாத்திரங்கள்

Devayani
21 Nov 2022
சமூக பாலின பாகுபாட்டை உடைத்த ஐந்து பெண் கதாபாத்திரங்கள்

கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பெண்களை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கு முன்பு ஆண்களை மட்டுமே சுற்றி கதைக்களம் இருந்தது. பெண்களை காதல் காட்சியில் அல்லது ஒரு கவர்ச்சி பொருளாகவே பயன்படுத்தி இருப்பர். இப்பொழுது அந்த நிலை மாறி வருகிறது. அப்படி சமூக பாலின பாகுபாட்டை உடைத்த சில பெண் கதாபாத்திரங்களை பற்றி பார்ப்போம்.

1. தரமணி - அல்தியா:
தரமணி என்ற படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமையா, அல்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் அவர் ஒரு IT நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணாகவும், சுதந்திரமாக வாழும் ஒரு பெண்ணாகவும் இருப்பார். அவரது கணவனை பற்றி சில உண்மைகளை அறிந்தவுடன் அவரை விட்டு விலகி ஒரு நல்ல அம்மாவாக தன் மகனை வளர்த்து வருவார். இந்தப் படத்தில் அல்தியா என்ற கதாபாத்திரம் IT நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்றும், இந்த சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும்,  கணவனை பிரிந்து வாழும் பெண்களை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை இந்த கதாபாத்திரத்தின் மூலம் அறிய முடியும்.

2. அறம் - மதிவதனி:
இந்தப் படத்தில் நயன்தாரா ஒரு IAS ஆபீஸராக இருந்திருப்பார். பொதுவாகவே ஒரு கலெக்டர் நல்லவராக இருந்தால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்தப் படத்தில் ஒரு கலெக்டராக அவர் எதிர்கொள்ளும் சவால்களை அவர் எப்படி சமாளிக்கிறார், மேலும் யாருக்கும் பயப்படாமல் மக்களுக்கு எது நல்லதோ, அவருக்கு எது சரி என்று படுகிறதோ அதையே செய்திருப்பார். இதில் தன்னம்பிக்கை கொண்ட விடாமுயற்சியில் ஈடுபடும் ஒரு பெண்ணாக நயன்தாரா மதிவதனியாக நடித்திருப்பார்.

3. சூரரைப் போற்று - பொம்மி:
அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் பெண்கள் அவர்களின் ஆசைகள், கனவுகள் அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த சமூகத்தின் விதிமுறை. ஆனால், இந்த பொம்மி என்ற கதாபாத்திரம் அவருக்கு என்ன வேண்டும் என்பதிலும், மற்றவர்கள் என்ன கூறினாலும் தன் விருப்பத்தில் உறுதியாக இருக்கும் ஒரு பெண்ணாக இருந்திருப்பார். திருமண வாழ்க்கைக்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல் தன்னையும், தன் கனவுகளையும் ஆதரித்து ஏற்றுக் கொள்ளும் ஒரு கணவனை தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி தன் கணவனின் கனவுகளையும் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருப்பார்.

4. கனா - கௌசல்யா முருகேசன்:
இந்த சமூகம் பெண்கள் என்ன செய்ய வேண்டும் ஆண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து உள்ளது. அதன்படி நடந்து கொள்வோரையே இந்த சமூகம் போற்றுகிறது. பெரும்பாலான கிராமங்களில் பெண்களின் ஆசைகளை விடவும் அவர்களின் திருமணத்தில் தான் பெற்றோர்கள் கவனம் செலுத்துவர். அப்படியே அவர்கள் ஆசையை நிறைவேற்ற பெற்றோர்கள் ஆதரவாக இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே வழங்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஒரு பெண் அவளது கனவுக்காக எடுக்கும் முயற்சிகளை பார்க்க முடியும். அதேபோல் கௌசல்யாவின் அம்மா அவளுக்கு ஆதரவு அளித்த பிறகு தான் அவள் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவாள். இதிலிருந்து ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஆதரித்தால் இந்த சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

5. காற்றின் மொழி - விஜயலட்சுமி:
ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படத்தில் திருமணம் ஆகிய ஒரு பெண் அவளுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என நினைப்பாள். இதில் பள்ளி பருவத்தில் தேர்ச்சி பெறாத ஒரு பெண்ணாகவும், அதனால் அவர் குடும்பத்தில் அவளை யாரும் மதிக்காமலும், அவளது ஆசைகளை ஏளனம் செய்து கொண்டும் இருப்பர். அவளது கணவன் அவளுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த சமூகத்தில் ஒரு ஆணுக்கு ஏற்படும் சில எண்ணங்கள் அவள் கணவனுக்கும் ஏற்படும். இந்த தடைகளை அவள்  உடைத்து அவளுக்கான ஒரு அடையாளத்தை அவள் உருவாக்குவதையும், அவள் கணவன் அவளை புரிந்து கொண்டு அவளுக்கு ஆதரவு அளிப்பதையும் இந்த படத்தில் பார்க்க முடியும்.

Read The Next Article