/stp-tamil/media/media_files/XCf2EP3i9zZO7gUMRwtw.png)
இந்த இணைய யுகத்தில் காதல் உறவுகள் பற்றி ஆலோசனை கிடைப்பது கடினமல்ல. ஆனால் அது எவ்வளவு நன்மகத்தன்மை வாய்ந்தது? ஒரு உறவை எப்படி கையாள்வது? புதிய காதல் உறவில் கவனிக்க கூடிய எச்சரிக்கைகளை எப்படி கண்டுபிடிப்பது? என்பதை நாம் நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள நினைப்போம்.
ஆனால், இந்திய குடும்பங்களில் காதல் உறவுகள் பற்றி பேச தயங்குகிறார்கள். அப்படியே பேசினாலும் திருமணம் பற்றி தான் பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் பருவத்தில் ஏற்படும் காதல் உணர்ச்சியை பற்றியும், நச்சு வாய்ந்த உறவில் மாட்டிக் கொண்டால் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்பதை பற்றியும் பேசுவதில்லை?
1. காதல் உறவு எப்பொழுதும் இனிமையாக மட்டுமே இருக்காது:
ஒரு உறவு எப்போதும் அன்பு மற்றும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது. நீங்கள் காதல் உறவுக்கு புதிதாக இருந்தால் அதில் அளவற்ற சந்தோஷமும், அரவணைப்பும் இருக்கும் என நினைத்திருப்பீர்கள். அது எப்பொழுதும் நம் படங்களில் பார்ப்பது போல இனிமையாக இருப்பதில்லை. ஒரு உறவில் நல்லது, கெட்டது என இரண்டுமே இருக்கும் என்பதை நீங்கள் காலப்போக்கில் தான் உணர்வீர்கள். காதல் உங்கள் வாழ்க்கையை இருள்மயமாக கூட ஆக்கலாம். எனவே, காதல் கொள்வதற்கு முன் அதில் ஏற்படும் பின் விளைவுகளையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். காதல் உறவில் கிடைக்கும் மகிழ்ச்சி உங்களுக்கு வேண்டும் எனில் அதில் ஏற்படும் சில பிரச்சனைகளையும் நீங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
2. சரியான உறவுகள் அமைவதில்லை, அவை உருவாக்கப்படுகின்றன:
காதல் உணர்ச்சி ஒருவர் மேல் எளிதில் வராது. அப்படியே எளிதில் வந்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்வது எளிதல்ல. சரியான உறவுகள் யாருக்கும் வழங்கப்படுவதில்லை. அவை முயற்சி, அன்பு, அக்கறை மூலமாகவே உருவாக்கப்படுகின்றன. எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் உறவு செயல்படும் என்று நாம் தவறாக புரிந்து கொள்கிறோம். ஆனால், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் காதல் உறவுக்கு மிகவும் அவசியமான ஒன்று. எனவே, நீங்கள் எடுக்கும் முயற்சியும், உங்கள் துணையின் மீது அக்கறை செலுத்துவதும் உறவில் காதலை வளர்க்க உதவியாக இருக்கும்.
3. காதல் நிம்மதியை தர வேண்டும், மன உளைச்சலை தரக்கூடாது:
காதல் என்ற பெயரில் அனைத்தையும் நியாயப்படுத்த முடியாது. அப்படி நியாயப்படுத்தலாம் என்று நினைப்பது சிக்கலாகிவிடும். எந்த ஒரு நபரும் காதல் என்ற பெயரில் வன்முறை, அடக்குமுறை, கட்டாயப்படுத்துவதை நியாயப்படுத்த கூடாது. பலர் காதல் என்ற பெயரில் அல்லது அவர்களின் துணை இல்லாமல் வாழ முடியாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருப்பார்கள். ஒருவர் காதல் உறவில் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது இரண்டுமே பாதிக்கப்படுகிறது என்றால் அது ஆரோக்கியமான உறவு அல்ல. உங்கள் துணை உங்களை சரியாக மதிக்காத நிலையில் அந்த உறவில் இருப்பது உண்மையான காதல் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
4. மற்றவர்கள் மீது ஏற்படும் எல்லா அன்பும், ஈர்ப்பும் காதல் அல்ல:
ஒருவர் மீது ஈடுபாடுடன் இருப்பது, காதல் உறவில் இருப்பது, ஒருவர் மீது அன்பு வைப்பது, டேட்டிங் இவை அனைத்தையும் மக்கள் ஒன்று என நினைக்கின்றனர். ஆனால், இவை அனைத்திற்கும் வெவ்வேறு பொருள் உண்டு. நாம் இளம் வயதில் நம் கவனத்தை ஈர்ப்பவர்கள் மீது அன்பு கொள்கிறோம். சில சமயம் அந்த ஈர்ப்பை நம் காதலாக கருதி குழப்பிக் கொள்கிறோம். சில சமயங்களில் ஒரு சாதாரண உறவு ஏதோ தீவிரமான விஷயத்தை நோக்கி செல்வது போல் தோன்றலாம். ஆனால், உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் நமக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள நினைப்பது தவறில்லை.
5. அவசரப்பட வேண்டாம், உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்:
நாம் முதல்முறையாக காதலிக்கும் போது நாம் அடிக்கடி சில விஷயங்களை அவசரப்படுத்தலாம். ஆனால், அவசரப்படுத்துவது அனைத்தையும் அழித்துவிடும். உறவில் ஈடுபட நினைக்கும் ஒருவர் பல காரணங்களால் அவசரப்பட நினைக்கலாம். அதற்கு காரணம் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாக கூட இருக்கலாம். உதாரணமாக "என் நண்பர்கள் காதல் உறவில் இருக்கிறார்கள், நான் இன்னும் தனியாக இருக்கிறேன். அவர்கள் என்னை பற்றி கேலி செய்வார்கள்" என்று நினைத்தும் கூட சில விஷயங்களில் நீங்கள் அவசரப்படலாம். ஆனால், அப்படி அவசரப்படுவது புத்திசாலித்தனம் அல்ல. உங்கள் துணையை புரிந்து கொள்வதற்கும், அவர்களின் இயல்பு, விருப்பு, வெறுப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கும் சிறிது காலம் ஆகும். இப்படி நிதானமாக உருவாகும் உறவே நீண்டகால காதல் உறவுக்கு அடித்தளமாக இருக்கும்.
பெரும்பாலும் நம் படங்களில் பார்ப்பதை வைத்து காதல் உறவு என்றால் இப்படித்தான் இருக்கும் என சில கற்பனைகள் செய்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அது முற்றிலும் வேறாக இருக்கலாம். நீங்கள் ஒரு காதல் உறவுக்கு ஒப்புக் கொள்வதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்.