போகி பண்டிகை என்றால் வீட்டை சுத்தம் செய்து பழையதை எல்லாம் மாற்றி புதிதாக பொருட்கள் வாங்கி கொண்டாடுவது என்று மக்கள் நினைக்கின்றார்கள். இப்படியே காலம் காலமாக போகியை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் போகி பண்டிகை அதற்காக மட்டுமல்ல. நம் மனதில் உள்ள கெட்ட விஷயங்களை அகற்றி நல்ல விஷயங்களால் சூழ்ந்து இருக்க வேண்டும் என்பதுதான். எனவே, இந்த போகி அன்று நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
1. உங்களை தாழ்வாக நினைக்காதீர்கள்:
இப்பொழுது நம் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை தாழ்வு மனப்பான்மை. பலர் இந்த தாழ்வு மனப்பான்மையினால் மட்டுமே அவர்கள் திறமைகளை வெளியே காட்டாமல் இருக்கின்றனர். தாழ்வு மனப்பான்மையோடு மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்று பயமும் சேர்ந்து கொள்கிறது. இது ஒருவரின் திறமையை வெளியே காட்ட விடாமல் தடுக்கிறது.
ஆனால், சாதித்தவர்கள் எல்லாம் இதை கடந்து தான் வந்திருப்பார்கள். எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கி தான் ஆக வேண்டும். எனவே, உங்களின் தாழ்வு மனப்பான்மையை விட்டு விட்டு, உங்கள் இலக்கை நோக்கி முதல் படியை எடுத்து வையுங்கள். எப்பொழுதுமே முதல் படி எடுத்து வைப்பது தான் சிறிது கடினமாக இருக்கும். அதன் பிறகு நீங்கள் நினைத்ததை விட ஓரளவுக்கு நன்றாகவே உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் உழைப்பீர்கள்.
2. மற்றவர்களை கேலி செய்யாதீர்கள்:
ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை இருப்பதற்கு சிறுவயதில் இருந்து பலர் அவர்களை கேலி செய்தும், கிண்டல் செய்தும் அவர்களின் நம்பிக்கையை உடைத்திருப்பர்கள். அதனாலேயே மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு அதிகரித்து இருக்கும். நீங்கள் விளையாட்டுக்கு மற்றவர்களை கிண்டல் செய்வது அவர்களின் தன்னம்பிக்கையை பெரிய அளவில் பாதிக்கும். அதனால் யாரையும் கேலி செய்யாதீர்கள்.
3. அனைவரையும் சமமாக நடத்துங்கள்:
இந்த சமூகத்தில் சமத்துவம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. எப்பொழுதும் மற்றவர்களை உங்களுக்கு தாழ்வாக நினைக்காதீர்கள். அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டு அனைவரையும் சமமாக நடத்துங்கள். ஒருத்தரை தாழ்மையாக நடத்துவது உங்களை எந்த விதத்திலும் உயர்த்த போவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
4. எதிர்மறையான விஷயங்களை யோசிக்காதீர்கள்:
நாம் எப்படி யோசிக்கிறோம் என்பதை பொறுத்து தான் நம் வாழ்க்கை இருக்கும். நீங்கள் எதிர்மறையான விஷயங்களை யோசித்தால் அதுபோன்ற ஆற்றலையே நீங்கள் பெறுவீர்கள். அதனால், நேர்மறையாக சிந்தியுங்கள், நல்ல விஷயங்களை மட்டும் யோசிங்கள். எப்படி இருப்பது மூலம் ஏதாவது தீங்காக நடந்தால் கூட அதில் இருக்கும் நல்ல விஷயங்களை கண்டு உங்களால் முன்னேற முடியும்.
5. நீங்கள் நேசிப்பவர்களிடம் அன்பாக இருங்கள்:
நாம் எப்பொழுதும் நேசிப்பவர்களிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம் நேசிப்பது தெரியவரும். பல படங்களில் இதுபோன்று நேசிப்பவர்களிடம் அன்பை காட்டாமல் இருந்து ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகு பிளாஷ்பேக் என்ற பெயரில் அவர்கள் அன்பாக இருக்கும் பக்கத்தை காட்டுவார்கள் (உதாரணத்திற்கு டான் படத்தில் வரும் சமுத்திரகனி மற்றும் சிவகார்த்திகேயனின் அப்பா மகன் உறவை எடுத்துக் கொள்ளலாம்). நிஜ வாழ்க்கையில் இப்படி எல்லாம் இல்லாமல் நீங்கள் ஒருவர் மீது அக்கறை கொண்டிருந்தால் அவர்களிடம் நேரடியாக காட்டுங்கள்.
6. உங்களிடமும், மற்றவர்களிடமும் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்:
அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் அதை வெளியே காட்டாமல் இருப்பது போல், அவர்களும் அதை வெளியே காட்டாமல் இருப்பார்கள். அதனால் நீங்கள் பேசும்போது பிறரை காயப்படுத்தாமல் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
அதேபோல், உங்களிடமும் கடுமையாக நடந்து கொள்ளாமல் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பல விஷயங்களை கடந்து வந்திருப்பீர்கள். பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். எனவே, நீங்கள் உங்களை புரிந்து கொண்டு முதலில் உங்கள் மேல் அன்போடு இருங்கள்.
போகி என்பது பழைய பொருட்களை வெளியேற்றுவது மட்டுமல்ல, கெட்ட எண்ணங்களையும் வெளியேற்றி சிறப்பாக வாழ்வது. எனவே, உங்களிடம் என்ன மாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுங்கள்.