Advertisment

தொழில் தொடங்க நினைக்கிறீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

author-image
Devayani
New Update
Business

இன்றயிருக்கும் காலகட்டத்தில் டிஜிட்டல் மூலம் ஒரு தொழிலை தொடங்குவது சுலபமாகிவிட்டது. அதனால் அனைவரும் ஏதோ ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், ஒரு தொழிலை தொடங்குவது சுலபமாக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்வதும், சரியான மக்களிடத்தில் அதைக் கொண்டு சேர்ப்பதும் சிறிது சவாலாக இருக்கலாம். எனவே, நீங்கள் தொழில் செய்ய நினைக்கிறீர்கள் என்றால் இந்த ஐந்து விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisment

1. உங்கள் விருப்பத்தை கண்டுபிடிங்கள்:

ஒரு தொழில் தொடங்குவதற்கு முன் உங்களுக்கு எதை செய்ய பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம், பல விஷயங்கள் செய்ய பிடித்திருக்கலாம். ஆனால் அதில் ஏதாவது ஒன்றை தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், ஒன்றின் மீது கவனம் செலுத்தினால் மட்டுமே நம்மால் முழுமையாக அதற்காக உழைக்க முடியும். எனவே, முதலில் உங்களுக்கு எது செய்ய பிடித்திருக்கிறது என்றும் அதை நீங்கள் உற்சாகமாக செய்வீர்கள் என்பதை தீர்மானியுங்கள்.

2. பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குங்கள்:

நீங்கள் தற்போது என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள். ஆனால் மக்கள் அதை வாங்குவதற்கு நீங்கள் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் யோகாவை தேர்வு செய்து இருக்கிறீர்கள் என்றால் யோகாவால் மக்களுக்கு இருக்கும் எந்தெந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும் என்று பாருங்கள். நீங்கள் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தால் மட்டுமே அவர்கள் உங்களின் பொருளை வாங்குவார்கள்.

அல்லது உங்களுக்கு எதன் மீதும் ஆர்வம் இல்லை என்று நினைத்தால், ஆனாலும் ஏதோ ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஏதோ ஒரு பிரச்சனைக்கு தீர்வு வழங்க பாருங்கள்.

Advertisment

Target Audience

3. உங்களின் வாடிக்கையாளர் யார் என்பதை தேர்வு செய்யுங்கள்:

தற்போது உங்களிடம் ஒரு பொருளும், அந்த பொருளினால் என்னென்ன தீர்வு வழங்க முடியும் என்பதை தெரிந்து கொண்டீர்கள். அடுத்தபடியாக உங்களின் வாடிக்கையாளராக யார் இருப்பார்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.

உதாரணத்திற்கு, மறுபடியும் யோகாவையே எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் குழந்தை பெற்ற தாய்களுக்கு யோகாவின் மூலம் உடல் எடையை குறைப்பதை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டால், உங்களின் வாடிக்கையாளராக புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் இருப்பார்கள். எனவே 20 வயதிலிருந்து 40 வயது வரையிலான பெண்களே உங்களின் வாடிக்கையாளராக இருப்பார்கள். இதுபோன்று நீங்கள் தேர்ந்தெடுத்து உள்ள தொழிலுக்கு வாடிக்கையாளராக யார் இருப்பார் என்று தெரிந்து கொண்டால் அதன் மூலம் உங்களால் அவர்களை சென்றடைய சுலபமாக இருக்கும்.

Advertisment

4. டிஜிட்டலை(Digital) பயன்படுத்துவது:

இந்த டிஜிட்டல் உலகில் தற்போது ஆஃப்லைனில் தொழில் செய்பவர்கள் கூட டிஜிட்டல் மூலம் அவர்களின் பிராண்டுகளை(brand) மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர். தற்போது வளர்ந்து வரும் தொழில் முனைவர்கள் டிஜிட்டலை நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பல தொழில்களில் வெறும் சமூக வலைத்தளங்களை வைத்து மட்டுமே லாபத்தை பெறுகின்றனர். 

குறிப்பாக இன்ஸ்டாகிராமில்(Instagram) மட்டும் சிறிய தொழில் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். டிஜிட்டலில் தொழில் தொடங்குவது, மக்களிடம் அதை கொண்டு சேர்ப்பதையும் எளிதாக்கிவிட்டது. மேலும் குறைந்த செலவில் நம்மால் பல மக்களிடையே நம் பொருளை கொண்டு சேர்க்க முடியும்.

money

5. பணத்தை கையாளுதல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

தொழில் தொடங்குவதற்கு முன்பு பணத்தை கையாளுதல் பற்றி நாம் சிறிது தெரிந்து வைத்திருக்க வேண்டும். தொழிலின் ஆரம்ப கட்டத்தில் எல்லாம் சுலபமாக இருக்கும் என்று கூற முடியாது. நீங்கள் பல ஏற்றத்தாழ்வுகளை பார்க்க வேண்டி இருக்கும். உங்களுக்கு ஒரு நஷ்டம் ஏற்பட்டால் அல்லது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் அப்பொழுது எப்படி சமாளிப்பது என்பதையும் நீங்கள் முன்பே தீர்மானித்து வைத்திருந்தீர்கள் என்றால் பிரச்சனை வரும்போது அதனை சுலபமாக சரி செய்து கொள்ள முடியும். எனவே, பணத்தைப் பற்றிய அறிவை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது உங்களிடம் உங்களுக்கு பிடித்த தொழில் இருக்கிறது, மக்களுக்கு எந்த பிரச்சினைக்காக தீர்வு வழங்க போகிறீர்கள் என்பதை தீர்மானித்து விட்டீர்கள், உங்களின் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து விட்டீர்கள், டிஜிட்டலை சரியாக பயன்படுத்த முயலுங்கள் மற்றும் பணத்தைப் பற்றிய அறிவும் உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் ஒரு தொழிலை தொடங்கலாம். 

தொழில் தொடங்கும் போது மற்றவர்கள் செய்வதை நீங்களும் அப்படியே செய்வது உங்களுக்கு வெற்றியை தராமல் போகலாம். எனவே, உங்களுக்கான ஒரு தனித்துவத்தை உருவாக்குங்கள். அந்த தனித்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள், முக்கியமாக அந்த தனித்துவத்தின் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குங்கள். அப்பொழுதுதான் உங்கள் தொழில் வெற்றி அடையும்.

entrepreneur business
Advertisment