/stp-tamil/media/media_files/s5UGW2zLsvYZ2E88P6tj.png)
நம்மில் பலருக்கு மாதவிடாய் இயல்பாக இருக்கிறதா? இல்லையா? என்று தெரிவதில்லை. அனைவரின் மாதவிடாய் அனுபவமும் வித்தியாசமானது என்பது காரணமாக இருந்தாலும், மாதவிடாய் பற்றி கேள்விகள் கேட்க இந்த சமூகத்தில் தடை உள்ளது. ஆனால் அதிக இரத்தப்போக்கு ஆபத்தாக இருக்கலாம். பல பெண்கள் கடுமையான இரத்தப்போக்கு மூலம் பாதிக்கப்படுகிறார்கள். உங்களுக்கு அசாதாரணமான அதிக இரத்தப்போக்கு, மாதவிடாய் பல நாட்களுக்கு நீடிப்பதாக நீங்கள் உணர்ந்தால் நீங்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அதிக இரத்தப்போக்கு என்றால் என்ன?
பொதுவாக சாதாரணமான மாதவிடாயின் போது நீங்கள் 70 ml முதல் 80ml திரவங்கள் இழக்க நேரிடும். இவற்றில் சுமார் 50% இரத்தமாக இருக்கும். ஆனால் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் 160 ml முதல் 400 ml திரவத்தை இழக்க நேரிடும்.
கடுமையான மாதவிடாய் இரத்த போக்கின் அறிகுறிகள்:
- ஒவ்வொரு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் நாப்கின் மாற்ற வேண்டியதாக இருக்கலாம்.
- ஏழு நாட்களுக்கு மேல் மாதவிடாய் நீடித்தால்.
- சுமார் பத்து ரூபாய் காயின் அளவிற்கு ரத்தம் உறைந்து போய் வந்தால்.
கடுமையான மாதவிடாயின் தாக்கங்கள்:
இது எவ்வளவு பொதுவானது என்றால் இந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கே இப்படி ஒன்று அவர்களுக்கு இருப்பதை உணர்வதில்லை. சிலர் அதிக இரத்தப்போக்கு இயல்பான ஒன்றாக கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானது. ஏனென்றால், இது நார்த்திசுக்கட்டிகள், எண்டோமெட்ரிஸ் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அறிகுறியாக இருக்கலாம்.
அதிக இரத்தப்போக்கு கொண்ட பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு நீண்டகால இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு ஆளாகின்றனர். மாதவிடாயின் போது நம் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் சிவப்பணுக்களை இழக்க நேரிடும். அதுவே இரத்தப்போக்கு நிறைய இருப்பதால் அதிக சிவப்பணுக்களை இழக்க நேரிடுகிறது.
இதனால் இரத்த சோகை உருவாக சிறிது காலம் ஆனாலும், நம் அன்றாட வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல அறிகுறிகளை இது ஏற்படுத்தலாம். இரத்த சோகை உள்ள ஒருவர் வழக்கத்தை விட அதிக சோர்வாக, எரிச்சல், மயக்கம், குழப்பம் மற்றும் மனசோர்வு போன்றவற்றை உணரலாம். அது மட்டும் இன்றி தலைவலி, இதயத்துடிப்பு அதிகரிப்பு மற்றும் எடை இழப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.
கடுமையான மாதவிடாய்:
உங்களுக்கு மாதவிடாய் இரத்தப்போக்கு அதிகமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பேச வேண்டும். நீங்கள் மருத்துவரிடம் சென்றால் உங்கள் உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகலாம். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
மருத்துவரிடம் செல்வதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். அதில் முக்கியமாக மாதவிடாய் வரும் நாள், எத்தனை நாள் நீடிக்கிறது, ஒரு நாளைக்கு எத்தனை முறை நாப்கின் மாற்றுகிறீர்கள் என்பதை கவனமாக கவனிக்க வேண்டும்.
நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது உங்களிடம் இந்த தகவல்கள் இருந்தால் மருத்துவர் அதற்கான தீர்வை கூறுவார். அதுவே நீங்கள் இதை கவனிக்கவில்லை என்றால் மருத்துவர் உங்களை இதை கவனிக்க சொல்லி, பிரச்சினையை கண்டுபிடிப்பதற்கு சில மாதங்களாகும்.
அதிக இரத்தப் போக்கை குறைக்க சில மாத்திரைகளை பரிந்துரை செய்யலாம்.
அதே மாதிரி உங்களுக்கு இரத்த சோகை இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்காகவும் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். முக்கியமாக மாதவிடாய்க்கு முன்பும், பின்பும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள். பதட்டம், இரும்பல், காய்ச்சல் மற்றும் உணவு ஒவ்வாமை இதுபோன்ற அறிகுறிகள் இரும்புச் சத்து குறைபாடு, இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கக்கூடும். எனவே, இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
உங்களுக்கு ரத்த சோகை இருப்பது உறுதி செய்யப்பட்டால் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும். இரும்பு சத்துக்கள் பரிந்துரைக்கப்படலாம், இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ள உணவு பட்டியலை பின்பற்ற சொல்லலாம்.
உதவி பெறுவது ஏன் முக்கியம்
பெரும்பாலான பெண்கள் இதை ஆரம்ப கட்டத்தில் அறிந்தாலும் மருத்துவரை பார்ப்பதற்கு பயந்து கொண்டு பல ஆண்டுகள் அதனை தள்ளிப் போடுகின்றனர். இதன் விளைவாக பிரச்சனை பெரிதாகி வலி தாங்க முடியாத அளவிற்கு ஆன பிறகு மருத்துவரிடம் செல்கின்றனர். எனவே, இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. இல்லையென்றால், இரத்த சோகை அதிகமானவுடன் அது உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.
அதனால்தான் பள்ளிகளில் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி கற்று தர வேண்டும். சமுதாயத்தில் இதை ஒரு தீட்டு தலைப்பாக பார்க்காமல் பேசுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். அப்போது தான் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் பெண்கள் அதை உடனடியாக கண்டறிந்து அதற்கு மருத்துவரை அணுகுவதை சிறந்த முடிவு என்று புரிந்து கொள்வர். எனவே, உங்களுக்கு மாதவிடாயின் போது கடுமையான இரத்தப்போக்கு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.