இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து விஷயங்கள் உங்கள் வாழ்வில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, அனைத்தையும் பொறுமையாக படியுங்கள் குறிப்பாக உங்கள் இலக்குகளை அடைவதற்கு ஐந்தாவது குறிப்பு உதவியாக இருக்கும்.
1. புத்தகம் படிப்பது:
புத்தகம் படிப்பது என்றாலே பலர் புத்தகபுழுவாக இருக்க வேண்டும், அதற்கான நேரம் இல்லை, புத்தகம் படிப்பது கடினமான வேலை என்ற எண்ணங்களால் புத்தகம் படிப்பதை விரும்புவதில்லை. ஆனால், புத்தகம் படிப்பது நமக்கு பல நன்மைகளை தரக்கூடும். நீங்கள் நினைக்கும் அளவிற்கு புத்தகம் படிப்பது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல. தினமும் நம் வாழ்க்கையில் இருந்து 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே சில நாட்களுக்குள் ஒரு புத்தகத்தை படித்து விடலாம். உதாரணத்திற்கு, தினமும் 10 பக்கங்கள் படிக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதை தினமும் செய்து வந்தாலே 20 நாட்களில் 200 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை உங்களால் படித்து முடிக்க முடியும். நீங்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை தொடங்க விரும்பினால் இதை படியுங்கள்: புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கான குறிப்புகள்.
2. உடல்பயிற்சி/யோகா:
இது பல பேர் பலமுறை தங்கள் புத்தாண்டு ரெசொல்யூஷனாக எடுத்து இருப்பார்கள். ஆனால் அதை பாதியிலேயே நிறுத்திருப்பார்கள். இப்படி அதை பாதையில் நிறுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளது. குறிப்பாக ஒரு சில நாட்களிலேயே நிறைய எடைகளை குறைக்க நினைக்கிறார்கள். அதனால் புத்தாண்டு முதல் நாள் அன்று கடுமையான உடற்பயிற்சி செய்து, அடுத்த நாளில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் அதை அப்படியே கைவிட்டு விடுகின்றனர்.
முதலில் எந்த ஒரு பழக்கமும் பழகிக் கொள்வதற்கு ஒரு சில நாட்கள் ஆகும். ஒரே நாளில் நாம் அந்த பழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் சிறிது சிறிதாக நாம் அதற்கு பழகிக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய விருப்பமில்லை என்பவர்கள் யோகா செய்யலாம். இந்த உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நமக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
3. நல்லதை மட்டுமே நினையுங்கள்:
எண்ணம் போல் வாழ்க்கை என்று பலர் கூறி நீங்கள் கேட்டிருப்பீர்கள். நமது எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ அந்த ஆற்றல்களையே நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள் மற்றும் நல்ல மனிதர்களால் நாம் சூழ்ந்து இருக்கும் பொழுது நமக்கு நன்மையே நடக்கும். அப்படியே ஒரு சில எதிர்மறையான விஷயங்கள் நடந்தாலும் நம்மால் அதிலிருந்து சுலபமாக மீண்டு வர முடியும். நேர்மறையான சிந்தனைகள் நம்மை சுற்றி நல்ல ஆற்றலை மட்டுமே வைத்திருக்கும். நாம் நல்ல மனிதர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது போல மற்றவர்களும் நினைப்பார்கள். அதனால் நீங்கள் நல்ல எண்ணத்துடன் இருக்க வேண்டும். பிறருக்கு நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும். எனவே, நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும்.
4. ஜர்னலிங்:
ஜர்னலிங்/ டைரி எழுதுவது நம் மூளையில் இருக்கும் சிந்தனைகளை வெளிப்படுத்த உதவுகிறது. நாம் எப்பொழுதும் எதோ ஒன்றை நினைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். சில சமயம் நாம் நிறைய விஷயங்களை யோசிக்கும் பொழுது மன அழுத்தம் ஏற்படலாம். எனவே, நாம் யோசிக்கும் விஷயங்களை எழுதுவதும், நாம் செய்ய வேண்டிய விஷயங்களை முன்கூட்டியே தீர்மானித்து வைப்பதும் நமக்கு பல நன்மைகளை அளிக்கும். ஜர்னலிங் மூலம் நீங்கள் செய்ய நினைக்கும் விஷயத்தை ஒழுங்காக செய்கிறீர்களா என்பதை பார்க்க முடியும். பிறருடன் மனம் விட்டு பேசுவது மன அழுத்தத்தை குறைக்கும் ஆனால், நம்மால் எல்லா விஷயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. அதனால் நமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் எழுதுவது மூலம் நமது மனம் இலகுவாகும். அது மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றும்.
5. உங்கள் பெரிய இலக்கை அடைவதற்கு சிறிய இலக்கை தீர்மானியங்கள்:
முன்பு கூறியது போலவே ஒரே நாளில் அனைத்தையும் மாற்றி விட முடியாது. அதேபோல் ஒரே நாளில் வெற்றி அடையவும் முடியாது. நமக்கு ஒரு விஷயம் வேண்டும் எனில் அதற்காக பல முயற்சிகள் எடுக்க வேண்டும். நாம் ஒரு விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் எனில் அதன் இலக்கை பற்றி யோசிக்காமல் அதற்காக எடுக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்தினாலே பாதி வெற்றியை அடைந்து விடலாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் எனில் அந்த பழக்கத்திற்காக தினமும் சிறிய சிறிய முயற்சிகள் எடுக்க வேண்டும். அதாவது முதலில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆரோக்கியமான உணவை ஒரே நாளில் அனைத்தையும் சாப்பிட நினைக்காமல் விதவிதமாக ஒவ்வொரு நாளும் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிரித்து வைக்க வேண்டும். இப்படி நீங்கள் பழகி வருவது மூலம் ஒரு மாதத்திற்கு பிறகு நீங்கள் தானாகவே ஆரோக்கியமான உணவை உண்ண தொடங்கி விடுவீர்கள். இதை போல் ஒரு பெரிய இலக்கை அடைவதற்கு அதை நோக்கி சிறிய இலக்குகளை முடிவு செய்ய வேண்டும்.