புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கான குறிப்புகள்

Devayani
01 Dec 2022
புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கான குறிப்புகள்

Image is used for representation purpose only

பெரும்பாலும் பலருக்கு புத்தகம் படிக்கும் பழகமே கிடையாது. ஆனால், எப்போதாவது புத்தகம் படிக்க பழகிக்கொள்ள வேண்டும் என சிலர் நினைப்பர். இந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும் சிலர் முயற்சிகள் எடுத்திருப்பார்கள். ஆனால், பெரும்பாலான முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கும். எனவே, மீண்டும் நீங்கள் புத்தகம் படிக்க நினைத்து அதற்காக எடுக்கும் முயற்சிகள் வீணாகாமல் இருக்க கீழே உள்ள விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேலை உங்களுக்கு இதுவரை புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை என்றால் இந்த விஷயங்களை பின்பற்றுவது மூலம் அந்த பழக்கத்தை உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.  

1. உங்களுக்கு ஆர்வமுள்ள விஷயத்தைப் பற்றிய புத்தகங்களை வாங்குங்கள்:
புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் பொழுது உங்களுக்கு ஆர்வமுள்ள விஷயத்தை பற்றி உள்ள புத்தகங்களாக தேர்ந்தெடுக்கும் வாங்குங்கள். சிலர் மற்றவர்கள் வைத்திருக்கும் புத்தகத்தை பார்த்து அதை வாங்கி விடுகின்றனர். ஆனால், அது உங்களுக்கு படிக்க ஆர்வத்தை தராது. எனவே, உங்களுக்கு எதைப் பற்றி தெரிந்து கொள்ள பிடிக்குமோ, எதன் மீது உங்களுக்கு ஆர்வம் உள்ளதோ அதைப்பற்றிய புத்தகங்களை வாங்குங்கள். இன்று இருக்கும் காலகட்டத்தில் எல்லா தலைப்பிலும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு புத்தகம் இருக்கும். எனவே, உங்களுக்கு எதைப் பற்றி படிக்க பிடிக்கும் என தெரிந்து கொண்டு அதன்படி புத்தகத்தை வாங்கவும். 

2. குறைந்த பக்கங்கள் உள்ள புத்தகத்தை வாங்குங்கள்:
நீங்கள் படிக்க ஆரம்பிக்க தொடங்கும் பொழுதே 500 பக்கங்கள் அல்லது 1000 பக்கங்கள் கொண்ட புத்தகங்களை வாங்கினால், அதனை படித்து முடிப்பதற்குள் புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் கைவிட நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, நீங்கள் புத்தகம் படிக்க இப்பொழுது தான் தொடங்க போகிறீர்கள் என்றால் 150 அல்லது 200 பக்கங்கள் கொண்ட புத்தகங்களில் இருந்து நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம். அப்பொழுதுதான் ஒரு புத்தகத்தை முடித்தவுடன் உங்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகமாகும். 

3. தினமும் எத்தனை பக்கங்கள் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்:
முதல் முறையாக புத்தகம் வாங்கும் ஒருவர் விரைவில் அந்த புத்தகத்தை படித்து முடித்து விட வேண்டும் என்று எண்ணுவர். ஆனால், நீங்கள் முதலில் படிக்க ஆரம்பிக்கும் பொழுது உங்களுக்கு ஒரு புத்தகத்தை படித்து முடிக்க சில நாட்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். இதற்கு நீங்கள்‌ தினமும் இத்தனை பக்கங்கள் படிக்க வேண்டும் என்று உறுதி எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் பத்து பக்கங்கள் தினமும் படிக்க முடிவெடுத்தால், அதற்காக நீங்கள் அரை மணி நேரம் ஒதுக்க வேண்டும். இப்படி தினமும் 10 பக்கம் படித்தால், 20 நாளில் 200 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை நீங்கள் படித்து முடித்து விடுவீர்கள். அப்படி பார்த்தால் உங்களால் ஒரு வருடத்தில் பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்து முடிக்க முடியும். ஒரு நாளில் படிக்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கை சிறிதாக வைத்திருந்தாலும் அதனை தொடர்ந்து பின்பற்றுங்கள். 

4. படிப்பதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்:
புத்தகம் படிக்காமல் இருப்பதற்கு நிறைய பேர் அவர்களுக்கு நேரமில்லை என்று கூறுவர். ஆனால் நம் வாழ்க்கையில் வீணாக செலவிடும் நேரத்தில் இருந்து ஒரு அரை மணி நேரம் படிப்பதற்காக ஒதுக்கினால் நம்மால் நிச்சயமாக இந்த பழக்கத்தை பழகிக்கொள்ள முடியும். நீங்கள் படிப்பதற்காக ஒதுக்கும் நேரத்தில் படிப்பதை தவிர வேறு எதையும் செய்யாதீர்கள். முக்கியமாக உங்கள் கைப்பேசி மற்றும் உங்கள் சிந்தனையை மாற்ற நினைக்கும் விஷயத்தில் இருந்து விலகி இருக்க பாருங்கள். 

புத்தகம் படிப்பதன் மூலம் நீங்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். வாழ்க்கையில் பெரிய அளவில் சாதித்தவர்கள் அவர்களின் இந்த வளர்ச்சிக்கு புத்தகங்கள் தான் காரணம் என்று கூறி நீங்கள் கேட்டிருப்பீர்கள். பலர் புத்தகம் படிப்பது மூலம் மன அழுத்தம் போன்ற விஷயத்தில் இருந்து வெளிவந்ததையும் மற்றும் பல நல்ல விஷயங்கள் புத்தகம் படிப்பதிலிருந்து கிடைத்ததாக கூறுகின்றனர். உடம்புக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதேபோல் மூளைக்கான பயிற்சி தான் புத்தகம் படிப்பது என்பர். எனவே, தினமும் ஒரு அரை மணி நேரம் புத்தகம் படிப்பதற்காக நீங்கள் ஒதுக்கினால் உங்களால் நிச்சயமாக இந்த பழக்கத்தை பழகிக்கொள்ள முடியும்.

Read The Next Article