பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல மாறாக இது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பண்டிகை. பொங்கல் பண்டிகை தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இந்த பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் நிலத்தில் இருந்து அறுவடை செய்து பொங்கலை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த பொங்கல் பண்டிகை போகி, தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பம்சத்தை பெற்றிருக்கும். பொங்கலின் வரலாறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இது குறிப்பாக விவசாயத்தை முன்வைத்து விவசாயத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் நன்றி கூறும் வகையில் அமைந்துள்ளது.
போகி:
'பழையன கழிதல் புதியன புகுதல்' இந்த பழமொழிக்கு ஏற்ப போகி திருநாள் அன்று மக்கள் பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வாங்குவார்கள். ஆனால், வீட்டில் இருக்க பழையதை மற்றும் மாற்றுவது போகி கிடையாது. நாம் மனதில் இருக்கும் வன்மத்தை, கெட்ட எண்ணங்களை விட்டு நல்ல எண்ணங்களால், நேர்மறை சிந்தனைகளால் நாம் நிறைந்திருக்க வேண்டும் என்பதே போகி பண்டிகை.
முன்பு போகி திருநாள் அன்று காலையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி தேவையில்லாத பொருட்களை வீட்டிற்கு வெளியே எரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். தற்போது மாறி வரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியமாகிறது. அதனால் பலர் எரிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையில்லாத பொருட்களை, பயன்படுத்தாத துணிகளை இல்லாதவர்களுக்கு வழங்குகின்றனர்.
முன்பு கூறியது போல போகி பொருட்களை எரிப்பது அல்ல, நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிப்பது.
பொங்கல் திருநாள்:
பொங்கல் திருநாள் அன்று பொங்கல் வைத்து, மஞ்சள், கரும்பு வைத்து விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இது திகழ்கிறது. குடும்பத்தில் அனைவரும் புத்தாடை உடுத்தி, சூரிய பகவானுக்கு படையல் இட்டு கோலாங்கலமாக கொண்டாடுவர். வீட்டிற்கு முன்பு வண்ண கோலங்கள் இட்டு, வீட்டை அலங்கரித்து, அனைவருக்கும் வாழ்த்து கூறி சிறப்பாக கொண்டாடுவர்.
மாட்டுப் பொங்கல்:
மாட்டுப் பொங்கல், விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் மாடுகளை வழிபடும் ஒரு திருநாள். எந்த நாளன்று மாடுகளை குளிப்பாட்டி, அவரவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொட்டு வைத்து, கழுத்தில் மணி கட்டி, படையல் வைத்து வழிபடுவர். கிராமங்களில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும். மாடுகள் மட்டும் இன்றி பிற கால்நடைகளையும் இதுபோன்று இந்த நாளில் நன்றி கூறி வணங்குவது உண்டு.
காணும் பொங்கல்:
காணும் பொங்கல் என்பது அதன் பெயருக்கு ஏற்ப உறவினர்களை, நண்பர்களை காண்பதற்கான ஒரு நாளாகும். முன்பு அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். அதனால் வீட்டிலேயே படையல் வைத்து சகோதர, சகோதரிகளின் நலத்திற்காக வேண்டிக் கொள்வார்கள். தற்போது, அனைவரும் உறவினர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பரிமாறி கொண்டு வருவது வழக்கமாக மாறிவிட்டது.
பொங்கலுக்கு மற்றொரு சிறப்பு விஷயமாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். அதில் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொள்வர். கல்லூரிகளில், வேலை செய்யும் இடங்களில் பொங்கலை முன்னிட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதேபோல் கோல போட்டிகளும் நடைபெறுவது பொங்கல் திருநாளின் ஒரு வழக்கமாகும்.
இந்த வருடம் நடைபெற உள்ள ஒரு புதிய நிகழ்வு:
ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல்லூர், அவனிப்புரம் போன்ற இடங்கள்தான் ஞாபகத்திற்கு வரும். பெரும்பாலும் கிராமங்களில் தான் ஜல்லிக்கட்டு நடைபெறும். நகர்புறங்களில் இருக்கும் மக்கள் ஜல்லிக்கட்டை பார்க்க ஏங்குவதும் உண்டு. இந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில் மார்ச் 2023 சென்னையில் ஜல்லிகட்டு நடக்கும் என அறிவிப்பு வந்துள்ளது. சென்னையில் நடக்கும் ஜல்லிக்கட்டில் 500 மாடுப்பிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு, வரலாற்றில் பல தடைகளை கடந்து நடைபெறும் ஒரு போட்டியாகவே இருக்கிறது. ஜல்லிக்கட்டின் தடையை எதிர்த்து நடந்த போராட்டங்களில் சென்னை மெரினாவில் நடந்த போராட்டம் மறக்க முடியாத ஒன்று. அப்படி இருக்க சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடக்கப் போகிறது என்ற அறிவிப்பு அனைவரையும் உற்சாகப்படுத்துகிறது.