Advertisment

காதல் உறவில் உள்ள ஐந்து அபாயங்கள்

author-image
Devayani
New Update
relationship

காதல் அனைவரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கம். ஆனால் அது எல்லோருக்கும் இனிமையாக ஒன்றாக அமைகிறதா? என்று கேட்டால், அப்படி அமைவதில்லை. நாம் பெரும்பாலும் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் (toxic relationship) என்ற வார்த்தையை கேட்டிருப்போம். புதிதாக காதல் கொள்வோரால் நச்சுத்தன்மை வாய்ந்த உறவுகளை கண்டுபிடிக்க இயலாது. ஏன் காதலில் அனுபவம் உள்ளவர்களும் நச்சுத்தன்மை வாய்ந்த காதல் உறவுகளை கண்டறிவது கடினம். ஆரம்பத்தில் நன்றாக இருக்கும் உறவுகள் சில ஆண்டுகள் கடந்த பின்னும் அவ்வாறே இருக்கும் என உறுதி அளிக்க முடியாது. 

Advertisment

உங்களுக்கு உங்கள் காதல் உறவை பற்றி சந்தேகமிருந்தால், இந்த செய்தியை முழுமையாக படியுங்கள். இதில் உள்ள ஐந்து விஷயங்களில் ஏதேனும் ஒன்று உங்கள் காதல் உறவில் இருந்தாலும் அவற்றை சிவப்பு கொடியாக எடுத்துக் கொண்டு அந்த உறவில் இருந்து விலகுவதே நல்லது.



1. சந்தேகப்படுவது:

ஒரு காதல் உறவில் இருக்கும் பொழுது நம் காதலன் மீதோ, காதலி  மீதோ அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருப்போம். பல சூழ்நிலைகளில் தங்கள் துணை வேறு ஒரு எதிர் பாலினத்தவரிடம் பேசினால் பொசசிவ்னஸ் (possessiveness) என்ற பெயரில் அவர்களிடம் சண்டை போடும் நிலமை வந்திருக்கும். ஆரம்பத்தில் இது மகிழ்வான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஓவர் பொசசிவ்னஸ் (over possessiveness) என்ற பெயரில் உங்களை தொடர்ந்து சந்தேகப்பட்டால், உங்களை மற்றவர்களோடு இணைத்து சந்தேகப்பட்டால் அந்த உறவில் இருந்து விலக ஒரு எச்சரிக்கையாக நீங்கள் அதை பார்க்க வேண்டும்.

⁠⁠⁠⁠⁠⁠⁠

2. வன்முறை:

குடும்ப வன்முறை நம் நாடு எங்கும் பரவியுள்ளது. இளம் பெண்களும் இது போன்ற உறவுகளில் மாட்டிக் கொள்கின்றனர். நம் சமூகம் சிறுவயதிலிருந்து “பெண் தான் சகித்து வாழ வேண்டும்” என்று கூறியே பல பெண்கள் இதுபோன்ற வன்முறைகளை வெளியே சொல்வதில்லை. காதல் உறவில் இருக்கும் பொழுது இது போன்ற அபாயங்கள் நிகழ்ந்தால் அதிலிருந்து விலகுவதே நல்லது. வாழ்நாள் முழுவதும் ஒருவரை சகித்துக் கொண்டே, அவர்கள் அடிப்பதை வாங்கிகொண்டு வாழ முடியாது. அவ்வாறு வாழ்வது சரியும் அல்ல. வன்முறை என்பது அடிப்பது மட்டுமல்ல கடுமையான, அவதூரமான சொற்களைக் கொண்டு மனம் நோக செய்வதும் இதில் அடங்கும்.

Advertisment



3. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து உங்களை விலக்கி வைப்பது:

ஒருவரை சுற்றி மட்டும் நாம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது. நாம் நம் நண்பர்களுடன், குடும்பத்தினர்களுடன் பேசும் பொழுது தான் பல சிந்தனைகளை விட்டு மகிழ்வுடன் இருப்போம். ஆனால், உங்கள் துணை உங்கள் நண்பர்களிடமும் மற்றும் குடும்பத்தினரிடமும் இருந்து உங்களை விலக்கி வைக்க நினைத்தால் அதற்கான காரணத்தை நீங்கள் அறிய வேண்டும். அவர்களுடன் மட்டும் பேச வேண்டும், பழக வேண்டும் என நினைத்தால், உங்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைத்தால் அதை ஒரு அபாய எச்சரிக்கையாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.



4. உங்கள் மன நலனில் அக்கறை இல்லாமல் இருப்பது:

இந்த காலத்தில் பெரும்பாலும் அனைவரும் ஸ்ட்ரெஸான (stress) வாழ்க்கையை தான் வாழ்கின்றனர். வேலை அழுத்தம், குடும்ப பிரச்சினை இது போன்ற நிகழ்வுகளால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. உங்கள் காதல் வாழ்க்கை உங்களுக்கு மன நிம்மதியை தரவில்லை என்றால், உங்கள் மன அழுத்தத்தை அதிகரிப்பதாக இருந்தால், அது அந்த உறவில் இருந்து வெளியே வர உங்களுக்கு ஒரு எச்சரிக்கை அளிக்கிறது. உங்கள் துணை உங்கள் மன நலனில் அக்கறை கொள்ளாமல் இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி மகிழ்ச்சியளிக்கும்? எனவே இதை ஒரு அபாய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்



5. உங்கள் விருப்பத்தை மதிக்க தவறினால்:

நீங்கள் ஒருவருடன் காதல் உறவில் இருப்பதால் அவர்களால் உங்கள் மீது முழு உரிமை எடுத்துக் கொள்ள முடியாது. அதேபோல், நீங்கள் அவர்களை காதலிப்பதால் முழு உரிமையையும் அவர்களுக்கு விட்டு தர வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. காதல் உறவுகளில், வீடு மற்றும் படுக்கை அறையை துணையுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால், அவர்கள் உங்களை முழு உடமையாக கருதி உங்கள் விருப்பம் இல்லாமல், உங்கள் அனுமதி இல்லாமல் உங்களிடம் நடந்து கொள்ள முடியாது.  உடலுறவுவின் போதும் அதற்கு முன்பும், பின்பும் உங்கள் விருப்பத்தையும், அனுமதியையும் கேட்க வேண்டும். உங்கள் விருப்பங்களை புறக்கணித்தால் அதை சிவப்பு கொடியாக கருதுங்கள். அது ஆபத்தானது.

மேல் கூறப்பட்டுள்ள ஐந்து சிவப்புக் கொடிகளில் ஏதேனும் ஒன்று  உங்கள் காதல் உறவில் இருந்தாலும் அதை விட்டு உடனடியாக விலகுவது தான் உங்களுக்கு நல்லது. காதல் உறவிலிருந்து பிரியும் பொழுது கடினமாக தான் இருக்கும் ஆனால் அதை சகித்துக் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இன்னும் கடினமானதாய் இருக்கும். இது அனைத்தும் ஆண், பெண்ணென இருவருக்குமே பொருந்தும்.

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் toxic relationship
Advertisment