எண்பதாவது கோல்டன் குளோப்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு விழாவுடன் தொடங்கியது. எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப்ஸ் பெஸ்ட் ஒரிஜினல் சாங் என்ற விருதை வென்றுள்ளது. RRR திரைப்படம் சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழி படத்திற்காக நாமினேஷனும் செய்யப்பட்டது.
இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் NTR சுதந்திரப் போராட்ட வீரர்களாக நடித்துள்ளனர். ஹாலிவுட்டில் மிகவும் மதிப்பு மிக்க விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப்ஸ் விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் இதுவாகும். இந்தப் புகழ்பெற்ற நாட்டு நாட்டு பாடல் எம்.எம். கீரவாணியால் இயற்றப்பட்டது. இந்த வெற்றியானது RRR மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தருணம் ஆகும்.
கோல்டன் குளோப்ஸ் 2023 விருது பெற்று சரித்திரம் படைத்த நாட்டு நாட்டு பாடல் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இந்தப் பாடலின் நடனம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்களை ஈர்த்துள்ளது. இந்த பாடல் இசைக்கு மட்டுமல்லாமல் ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR ஆகியோரின் அபாரமான நடனத்திற்கும் கிடைத்த விருதாகும்.
RRR இயக்குனர் SS ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் NTR, மற்றும் ராம் சரண், இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி மற்றும் அவர்களது மனைவியுடன் அடங்கிய குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கோல்டன் குளோப்ஸில் கலந்து கொண்டனர். நாட்டு நாட்டு பாடல் இந்த விருதை வென்றது இந்திய திரை உலகத்திற்கு பெருமையான தருணம். ஷாருக்கான், ஏ ஆர் ரகுமான், ராம் கோபால் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் வரலாற்று சாதனை படைத்த RRR அணிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
RRR திரைப்படம் மார்ச் 2022 வெளியானது மற்றும் ஜூன் மாதம் நெட்ஃபிக்ஸில் வெளியானது. இப்படம் ஏற்கனவே இந்திய பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் OTTயில் வெளியான பிறகு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற உதவியது. ஆக்சன் ஹிட் திரைப்படமான RRR நெட்ஃபிக்ஸில் சர்வதேச திரைப்படங்கள் பிரிவில் கிட்டத்தட்ட பத்து வாரங்கள் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
1920களில் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, இந்திய சுதந்திர வீரர்களை பற்றிய திரைப்படம் இது. நெட்ஃபிக்ஸ் மற்றும் பிற OTT தளங்களில் வெளியான போதும் 34 மாநிலங்களில், 175 திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 14 மில்லியன் டாலர் வசூலித்தது.
உலக அளவில் வெற்றியடைந்த இந்த திரைப்படத்தை பற்றி நியூயார்க் டைம்ஸ் எழுதியது. நியூயார்க் டைம்ஸ் தேர்வு பிரிவில் இந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. மேலும் ஹாலிவுட் ஃபிலிம் டைரக்டர் ஆன ஜே.ஜே. ஆப்ராம்ஸ் இந்த படத்தை பார்த்துவிட்டு ராஜமௌலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அது மட்டும் இன்றி பல ஹாலிவுட் நடிகர்களால் இந்த படம் பாராட்டப்பட்டது.
நாட்டு நாட்டு பாடல் YouTubeயில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது மற்றும் பிரபலமான இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர்களும் இந்த பாடலின் நடனத்தை ஆடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். ஜப்பானிய பிரபல YouTuber இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. அதுமட்டுமின்றி ஒரு பிரெஞ்சு ஜோடி இந்த பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய பிறகு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் இன்னும் பாடலுக்கான நடனத்தை உருவாக்கி மக்கள் தங்கள் நடன திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிறந்த ஒரிஜினல் பாடல் மற்றும் சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழி திரைப்படம் என இரண்டு பிரிவுகளில் RRR பரிந்துரைக்கப்பட்டது. அதில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற விருதை பெற்றது. இந்த நாட்டு நாட்டு பாடலுக்கு பிரேம் ரக்ஷித் நடனத்தை வடிவமைத்தார்.
இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி ஒட்டுமொத்த குழுவின் சார்பாக விருதை பெற்றார். மேடையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கீரவாணி "இந்த மதிப்புள்ள விருதுக்கு மிக்க நன்றி. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த தருணத்தை அங்கே அமர்ந்திருக்கும் என் மனைவியுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார்.