Advertisment

மன அழுத்தத்தை வெல்ல உதவும் சுய அன்பு

author-image
Devayani
New Update
self love

மனிதனின் செயல்பாடுகளில் காலப்போக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் இந்த டிஜிட்டல் உலகில் மன அழுத்தம் மற்றும் மனநல சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது. நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர வேண்டும் எனில் முதலில் நீங்கள் உங்களை நேசிக்க வேண்டும். நீங்கள் உங்களை நேசித்தாலே பெரும்பாலான பிரச்சனைகளிலிருந்து வெளியே வர முடியும்.

Advertisment



மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர இந்த ஐந்து விஷயங்களும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.



1. உங்கள் தவறுகளை மன்னியுங்கள்:

சுய வெறுப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளை மன்னிக்காமல் இருப்பது. அதற்கான குற்ற உணர்ச்சியில் வாழ்வது. அந்த தவறுகளின் அடிப்படையில் நம்மை வெறுக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் நாம் மனிதர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்வது மனித இயல்பு. நாம் எப்பொழுதும் சரியான முடிவுகளை தான் எடுப்போம் என எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. 

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் உங்கள் குழந்தை நடக்க கற்றுக் கொள்ளும் போது கீழே விழுந்தால் குழந்தையை தூக்கி நீங்கள் உதவுவீர்களா? அல்லது அப்படியே விட்டு விடுவீர்களா? நிச்சயமாக குழந்தையை தூக்கி சமாதானப்படுத்தி திருப்பி நடக்க வைப்பீர்கள். நீங்கள் இவ்வாறு செய்ய காரணம் குழந்தையின் மீது அதிக அன்பு வைத்திருப்பதனால். அதேபோல் நாம் நம் மீது அதிக அன்பு வைத்திருந்தால் நம் கடந்த கால தவறுகளை மன்னித்து அதிலிருந்து கற்றுக் கொண்டதை வைத்து வாழ பழகிக் கொள்ளவோம். 

Advertisment



2. உங்களை தனியாக உணர வைக்காதீர்கள்:

மக்கள் தனிமையில் இருக்க முக்கிய காரணம், ஆதரவின்மை. ஒருவர் தனிமையாக உணர்கிறார் என்றால் அவர் வெளியில் இருந்து அன்பும், ஆதரவும் எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம். சுய அன்பு இல்லாததால் இந்த மக்கள் தங்களின் தனிமை நேரத்தை செலவழிக்க விரும்புவதில்லை. நீங்கள் உங்களை வெறுக்கிறீர்கள் என்றால் தனியாக இருப்பது குற்ற உணர்வை வளர்க்கும். தனிமையின் வலி மக்களை எவ்வளவு மோசமான முடிவுகளை எடுக்க வைக்கும் என நாம் அனைவரும் அறிவோம். 

எனவே, தனியாக இருப்பதைப் பற்றியோ, வெளியில் இருந்து அன்பும், ஆதரவும் கிடைக்கவில்லை என்று நினைத்தோ அதற்காக வருத்தப்பட வேண்டாம். நீங்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் பிறர் காதலுக்காக ஏங்க மாட்டீர்கள். உங்கள் தனிமையான நேரத்தில் உங்களை மகிழ்விற்கும் செயல்களை செய்து உங்களுக்கு நீங்களே ஆதரவாக இருக்கலாம். அது தான் ஒரு நிரந்தரமான அன்பாக உங்களுக்கு இருக்கும்.



3. உங்கள் விருப்ப, வெறுப்புகளை சுய அன்பு மூலமே அறிய முடியும்:

முதலில் நீங்கள் உங்களை நேசித்தால் உங்களுக்கு பிடித்த விஷயங்களை நீங்கள் செய்வீர்கள். அதே சமயம் நீங்கள் எதையேனும் விரும்பவில்லை என்றால் அதிலிருந்து விலகி இருப்பீர்கள். எனவே, உங்களை நேசிப்பது மூலம் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எது உங்கள் வாழ்வில் வேண்டும், வேண்டாம் என நிர்ணயிப்பதற்கு இதுவே முதல் படியாகும்.

Advertisment



4. உங்களுடனும், பிறருடனும் சிறந்த உறவை உருவாக்குங்கள்:

ஒரு நபருக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் உடலையும், எண்ணங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிறருடன் தன்னை எப்பொழுதும் ஒப்பிட்டு பார்த்து தாழ்த்திக் கொள்ளுவர். இவ்வாறு ஒப்பிடும்போது அவர்களுக்கு சுய வெறுப்பு அதிகரிக்கும், மற்றவர்கள் மீதும் வெறுப்பு அதிகரிக்கும். பிறரை போல இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் நடந்து கொள்வது போல நடக்க தொடங்குவர். அதாவது அவர்கள் உண்பது போல உண்பது, அவர்கள் அணிந்து இருக்கும் ஆடைகளை போல அணிவது இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவர்.

இவ்வாறு நடந்து கொள்ளவதன் மூலம் வெறுப்பு இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது. ஏனென்றால், பிறர் செய்யும் செயல் நமக்கும் சரிப்பட்டு வரும் என நினைப்பது தவறு. ஏனெனில், அனைவரும் வேறுபட்டவர்கள், தனித்துவமானவர்கள். அவரவர்களுக்கு  என்ன ஏற்றுக்கொள்ளும் என்பதை நாம் முன்பு பார்த்தது போல சுய அன்பு மூலமாகவே அறிய முடியும். எனவே உங்களுடனும், பிறரிடமும் சிறந்த உறவை கொள்ள வேண்டுமெனில் உங்களை முதலில் நீங்கள் நேசிக்க வேண்டும்.



5. விமர்சனங்களும், ட்ரோல்கள் உங்களை பாதிக்க விடாதீர்கள்:

ஒரு நபர் தன்னை நேசித்தால் விமர்சனங்கள் அவர்களை பாதிக்காது. அப்படி ஆரம்ப காலத்தில் விமர்சனங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிலிருந்து எளிதில் வெளியே வர சுய அன்பு உதவும். சுய அன்பு விமர்சனங்களில் இருக்கும் நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள உதவும். எனவே, விமர்சனங்கள் உங்களை பாதிக்காமல் இருக்க, ட்ரோல்கள் உங்கள் மனதை புண்படுத்தாமல் இருக்க முதலில் உங்களை நீங்களே தாழ்த்தி எண்ணாமல், சந்தேகப்படாமல் இருக்க வேண்டும்.



மேல் கூறப்பட்டுள்ள ஐந்தும் ஒவ்வொரு தனி மனிதரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. இவை ஐந்தையும் பின்பற்றினாலே மன அமைதி உண்டாகும். நீங்கள் உங்களை நேசிக்க ஆரம்பிக்கும் போது பிறர் சொல்லும் கருத்தும், வேறு எதுவும் உங்கள் மனநிலையை பாதிக்காது.

சுய அன்பு மன அழுத்தம் self love
Advertisment