இல்லத்தரசிகள் மத்தியில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

Devayani
10 Nov 2022
இல்லத்தரசிகள் மத்தியில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

மன அழுத்தம் பற்றி பேசும்போதெல்லாம் நாம் இல்லத்தரசிகளை புறக்கணிக்கிறோம். குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு அரிதாகவே அங்கீகரிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே அவர்களின் மனநல பிரச்சனையை குடும்பத்தினர் சாதாரண ஒன்றாக எடுத்துக் கொள்கிறார்கள். இல்லத்தரசிகளும் அவர்களின் உடல் நலனை முதன்மை படுத்தாமல் வலியை தாங்கிக் கொள்கின்றனர். இந்தியாவில் மனநல பிரச்சனைகள் வளர்ந்து வருவதாகவும் மற்றும் அவர்களும் இல்லத்தரசிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இல்லத்தரசிகளின் மத்தியில் தற்கொலை அதிகரித்துள்ளது:

கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையை முடிக்க முடிவு செய்த பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இல்லத்தரசிகள் என்று தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (NCRB) அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 2021ல் தற்கொலை செய்து கொண்ட 1.6 லட்சம் பேரில் 45,036 பேர் பெண்கள். அதில் 23,178 பேர் இல்லத்தரசிகள். 2020இல் 50.3% ஆக இருந்த இல்லத்தரசிகளின் தற்கொலை எண்ணிக்கை 2021 இல் 51.5%ஆக அதிகரித்துள்ளது. 2018இல், 22,937 இல்லத்தரசிகள் தற்கொலைகளால் இறந்துள்ளனர்.  2017 (21,453) உடன் ஒப்பிடுகையில் 6.9% அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் உலகில் பெண்களால் மூன்றில் ஒரு பங்கு (36.6%) தற்கொலைகள் இந்தியாவில் நடந்தன, இது 1990இல் 25.3% ஆக இருந்தது.

இவை பதிவு செய்யப்பட்ட எண்கள் எனில், பதிவு செய்யப்படாத எண்கள் பற்றி யோசித்துப் பாருங்கள். இதற்கு இன்னும் சரியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இல்லத்தரசிகள் மத்தியில் தற்கொலை அதிகமாக இருப்பது ஏன் வெளிப்படையாகவும், போதுமானதாகவும் விவாதிக்கப்படவில்லை? அல்லது அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு மட்டும் மனநல பிரச்சனைகள் வருமா?  இதைப் பற்றி பேசுவதை விட பெண்கள் ஏன் பொறுமையாக இருக்கிறார்கள்?  பெரும்பாலும் " நீங்கள் எல்லா நேரத்திலும் வீட்டில் இருக்கிறீர்கள், உங்களுக்கு எப்படி பிரச்சினைகள் இருக்க முடியும்" என கூறியே இல்லத்தரசிகளின் பிரச்சினைகளை நிராகரிக்கிறார்கள். இப்போது, ​​யார் மன உளைச்சலுக்கு ஆளாகலாம் என்பதை வேலை செய்யும் இடம் தீர்மானிக்குமா? ஒரு இல்லத்தரசி தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள காரணமாக இருப்பது எது? 

இல்லத்தரசிகளின் பிரச்சினை:

பெண்கள் மத்தியில் குறிப்பாக இந்தியாவில் இல்லத்தரசிகள் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் உள்ளனர். பல சமயங்களில் ஒரு இல்லத்தரசி அவள் குடும்பக் கடமைகளில் மாட்டிக் கொள்கிறாள். அவளை முன்னுரிமைப்படுத்திக் கொள்ள மறந்து விடுகிறாள். ஒரு இல்லத்தரசிக்கு 365 நாட்களும் ஒரே மாதிரி தான் இருக்கும். அவர்களுக்கு எந்த ஒரு விடுமுறையும் கிடைப்பதில்லை. அதுவே, அவர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலாக இருக்கும். ஆனால் அவர்கள் உணர்வுகளை வெளிக்காட்டாமல் சகித்துக் கொள்கின்றனர். இந்த உணர்வுகள் அதிகமான பிறகு மனசோர்வு மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கிறது.

ஒரு இல்லத்தரசி குழந்தையின்மை, வரதட்சணை, அவமானம், குடும்ப வன்முறை மற்றும் பல பிரச்சனைகளால் பாதிக்கப்படும் போது உதவியற்ற உணர்வு தீவிரமடைகிறது. 2021ஆம் ஆண்டு அறிக்கையில் உள்ள பெண்கள் பெரும்பாலும் வரதட்சணை, துரோகம் மற்றும் குழந்தையின்மை போன்ற திருமண பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. 

சமூக நெறிமுறையின் படி அனைத்திற்கும் பெண்கள் மீதுதான் குற்றம் சாட்டப்படுகிறது. இது பெண்களை மோசமாக பாதிக்கிறது.  இது உடல், உணர்ச்சி மற்றும் பாலியல் வன்முறையை உள்ளடக்கி, மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஒரு மனநல மருத்துவ ஆய்வில், மனச்சோர்வு உள்ள ஆண்களை விட இந்தியப் பெண்கள் மனச்சோர்வு மற்றும் கவலைக் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆணாதிக்க மனப்பான்மையும், இல்லத்தரசிகளின் வாழ்க்கையும்:

ஒரு ஆணாதிக்க மனப்பான்மை ஒரு இல்லத்தரசி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆடை, வீடு, உணவு மற்றும் குடும்பத்தை வழங்கினால் போதும் என்று நம்புகிறது. ஆனால் சமூகம் கூறுவது போல் இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதற்கு அவள் தன் விருப்பங்களை தியாகம் செய்ய வேண்டியுள்ளதை மறந்துவிடுகிறது. திருமணத்திற்குப் பிறகு, ஒரு இல்லத்தரசி தனது வழியில் வரும் பல மாற்றங்களைக் கையாளுகிறார். அதுவும் அவளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தால், போராட்டம் அங்கிருந்து தொடங்குகிறது. குடும்பம் ஆதரவளிக்கவில்லை என்றால், அவளது கனவுகளும், ஆசைகளும் மாயையாக மாறிவிடுகிறது. பெண்கள் தாமாகவே தங்கள் சுயாட்சியை இழந்து தாம்பத்திய உறவுகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அவளுடைய பொருளாதாரச் சார்பு மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விவாகரத்து முடிவை எடுப்பது கடினமாகிறது.  மேலும், தாய்வழி குடும்பங்கள் விவாகரத்துக்கு ஆதரவளிப்பது குறைவு. மகளின் நல்வாழ்வை விட சமூக நெறிகள் தான் முக்கியம் என கருதுகிறார்கள். எல்லாப் பிரச்சனைகளுக்கும், வலிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, இல்லத்தரசிகள் தற்கொலை ஒரு வழி என்று நினைக்கலாம். 

ஆனால் தற்கொலை சரியான முடிவு அல்ல. பெண்கள் இதிலிருந்து வெளியே வர இன்னொரு வழியும் உள்ளது. மனநலம் பற்றி விவாதிப்பதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு இல்லத்தரசிகளின் நிலைமையையும், உரிமையையும் பற்றி பேச வேண்டும். ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்பதை அவள் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு இந்த சமூகம் அவர்களை இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் கடமை அனுசரித்து செல்வதும், தியாகங்கள் செய்வதும் அல்ல. பெண்கள் அவர்களின் வலியை வெளிப்படுத்துவதன் மூலமும், உதவி கேட்பதன் மூலமும் சமூகத்தில் இந்த நிலைமையை மாற்ற முடியும். எனவே, ஒவ்வொரு நாளும் நீங்கள் இதற்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் சமூக மாற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

Read The Next Article