நாம் எவ்வளவுதான் பெண்ணியம் பேசினாலும், பெண்களுக்காக குரல் எழுப்பினாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு முன் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. சொல்லப்போனால் வீட்டில் இருப்பவர்கள் தான் பல சமயங்களில் பெண்களுக்கு எதிரியாக மாறி விடுகின்றனர்.
பெண்கள் வெளியே சென்றால் ஆபத்து என்று கூறி வீட்டிலேயே அடங்கி இருக்குமாறு கூறும் குடும்பத்தினரே பெண்களுக்கு எமனாக மாறி விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தன்று சில புள்ளி விவரங்கள் வெளியானது அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளின் புள்ளி விவரங்கள்:
1. ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் name கூறுகையில் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண் அல்லது சிறுமி குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்கள்.
2. உலக அளவில் 30 சதவீத பெண்கள் உடல் மற்றும் பாலியல் வன்முறையை அனுபவிக்கின்றனர்.
3. நெருங்கிய உறவில் இருக்கும் 15 முதல் 19 வயதுடைய இளம் பெண்களில் 24 சதவீத பேர் அவர்கள் துணைவிடமிருந்து உடல் மற்றும் பாலியல் வன்முறையை அனுபவிக்கின்றனர்.
4. ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத்தினர்களால் கொல்லப்படுகிறார்கள்.
5. 2021இல் உலக அளவில் கொலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் 56 சதவீதமாக உள்ளது. இவர்கள் அவர்களின் கணவர்கள், துணை மற்றும் குடும்பத்தினராகவே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
6. ஆசியாவில் சுமார் 17,800 பெண்கள் தங்கள் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.
7. இதற்கு நேர் மாறாக 2021ல் அனைத்து ஆண் கொலை வழக்குகளில் 11 சதவீதம் மட்டுமே தங்களின் துணையால் அல்லது உறவினர்களால் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு குடும்பத்திற்கு வெளியே யாரோ ஒருவரால் கொல்லப்படும் அபாயம் அதிகம்.
8. இந்தியாவில் 2021இல் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு நாளும் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
9.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு மணி நேரத்திற்கு 49 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றது.
10. 2020 ஆம் ஆண்டை விட 2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் 15.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
11. அதேபோல் 2021 ஆம் ஆண்டில் 659 பெண்கள் வரதட்சனை கொடுமையினால் உயிரிழந்தனர் என்று பதிவாகியுள்ளது. இது 2020 விட 3.85 சதவீதம் குறைந்துள்ளது என்றும் NCRB தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளி விவரங்கள் அனைத்துமே பதிவிடப்பட்டுள்ளது இன்னும் பதிவிடப்படாமல் பல வழக்குகள் இது போன்று இருக்கின்றனர். முன்பு கூறியது போலவே பெண்களுக்கு எதிரிகள் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. இந்த சமூக விதிகள் பெண்களின் பாதுகாப்பிற்காக என்று கூறுகின்றனர். ஆனால், இதே சமூக விதிகளால் குடும்பத்தினர்களாலே பெண்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்தப் புள்ளி விவரங்கள் மூலம் ஆண்களை விட பெண்களுக்கு தான் குடும்பத்தினர்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிய வருகிறது. பெண்கள் வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது தான் பாதுகாப்பு என்று சமூகம் கூறுகிறது. ஆனால், பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லை என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
இந்த சமூகம் பெண்களை எப்பொழுது சமமாக கருதி மதிக்க தொடங்குகிறதோ அப்பொழுதே இது போன்ற குற்றங்கள் குறையும். எனவே, பெண்களும், சிறுமிகளும் ஏதாவது ஒரு தற்காப்பு கலை கற்றுக் கொள்வது அவசியமாகிறது. அது குடும்பத்தினர்களிடமிருந்தும், மற்றவர்களிடம் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும்.