நஞ்சு வாய்ந்த உறவுகள்(toxic relationship) பற்றி பேசும்பொழுது பலர் "அவள் ஏன் இப்படி இருக்கிறாள், நானா இருந்தனா அதை விட்டு உடனே வெளியே வந்து இருப்பேன்" என்று கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் ஒரு நஞ்சு வாய்ந்த உறவில் இருந்து வெளிவருவது சுலபமான விஷயம் அல்ல.
நாம் நஞ்சு வாய்ந்த உறவுகளில் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்வதற்கே பல நாட்கள் ஆகிறது. அப்படியே அதை நாம் அறிந்து கொண்டாலும் பல விஷயங்கள் அந்த உறவை விட்டு நம்மை வெளிவராமல் இருக்க வைக்கிறது. பெண்கள் எந்த காரணங்களினால் நஞ்சு வாய்ந்த உறவுகளில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதை இதில் பார்ப்போம்.
1. ஆணாதிக்கம்:
நாம் வாழும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு வீட்டு வேலை, பராமரிப்பது, பொறுத்துக் கொள்வது, அமைதியாக இருப்பது, விட்டுக் கொடுப்பது மற்றும் அனுசரித்து செல்வதை இது போன்ற விஷயங்களை கற்றுத் தருகிறார்கள். திருமணம் தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை லட்சியமாக பார்க்கப்படுகிறது. திருமணம் ஆகாமல் அல்லது ஆணின் துணை இல்லாமல் ஒரு பெண் வாழ்ந்தால் அவள் விமர்சனங்களுக்கு ஆளாகிறாள். பெண்கள் சிறுவயதில் இருந்தே ஒரு நல்ல மனைவியாக, தாயாக, மருமகளாக இருக்கவே கற்றுக் கொள்கின்றனர்.
2. கொடுமைகள் இயல்பாக்கப்படுகின்றன:
பல குடும்பங்களில் கொடுமைகளும், நஞ்சுத் தன்மையும் அன்றாட வாழ்வில் கலந்து இருக்கிறது. பெற்றோர்கள் அவர்களுக்கிடையே நஞ்சு வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் அல்லது குழந்தைகளிடம் கண்டிப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுகின்றனர். இந்த மாதிரியான குடும்ப சூழலில் வளரும் குழந்தைகள் இப்படிப்பட்ட வாழ்க்கை முறை இயல்பான ஒன்றுதான் என நம்ப தொடங்கி விடுகின்றனர்.
3. திரைப்படங்கள் நஞ்சு வாய்ந்த உறவுகளை போற்றுகிறது:
பல திரைப்படங்கள் நஞ்சு வாய்ந்த காதல் உறவை உண்மையான காதல் என்றால் அப்படித்தான் இருக்கும் என இயல்பு படுத்தியுள்ளது. அன்று முதல் இன்று வரை கதாநாயகனும் கதாநாயகியும் நஞ்சு வாய்ந்த உறவில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், வன்கொடுமைகள் நடந்தாலும், அதனை கடந்து கடைசியில் ஒன்று சேர்வது போல திரைப்படங்களில் காட்சிப்படுத்தி இருப்பர்கள். அதிலும் பெண்கள் தான் அனுசரித்து, விட்டுக் கொடுத்து, தியாகங்கள் செய்வது போலவும் காட்சி படுத்தி இருப்பர். இதை பார்த்து வளரும் குழந்தைகள் காதல் உறவு என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றனர்.
4. பண சார்பு:
NFHS ரிப்போர்ட்டின் படி 32% திருமணமான பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கின்றனர். இது அதிகபட்சமான பெண்களின் எண்ணிக்கை பணத்திற்காக கணவனை சார்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. பணத்தால் ஒருவரை மதிப்பிடும் சமூகத்தில் வாழும் பெண்கள், நஞ்சு வாய்ந்த உறவுகளில் இருந்து வெளிவர தயங்குகின்றனர்.
5. குடும்பத்தின் ஆதரவின்மை:
இந்தியாவில் விவாகரத்து பெற்ற மகள்களை விட இறந்த மகளே சிறந்தது என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. பல குடும்பங்கள் பெண்களை ஆதரிக்க மறுக்கின்றனர். மேலும் அந்த உறவை சரிப்படுத்துவது பெண்ணின் வேலை என்று நினைக்கின்றனர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை என்றால் அவள் நஞ்சு வாய்ந்த உறவில் இருந்து எப்படி வெளிவர நினைப்பாள்?
6. குடும்ப கடமைகள்:
பல பெண்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு தந்தை அவசியமான ஒருவர் என நினைக்கின்றனர். அதனால் ஒரு பெண் தாயான பிறகு இந்த கொடுமைகளையும், வன்முறைகளையும் முன்பை விட பொறுத்துக் கொள்ள தொடங்கி விடுகின்றனர். அனைத்தையும் அனுசரித்துக் கொண்டு குழந்தைகளுக்காக அந்த நஞ்சு வாய்ந்த உறவில் இருக்க முடிவு செய்கின்றனர்.
7. சமூக இழிவு:
நம் சமூகத்தில் விவாகரத்து பெற்ற பெண்ணாகவோ அல்லது தனியான ஒரு தாயாகவோ இருப்பது எளிதல்ல. அவர்கள் அவர்களின் குடும்பத்தினரால் மட்டுமல்லாமல் வேலை செய்யும் இடத்தில், குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில், அக்கம் பக்கத்தினர் என அனைவராலும் இழிவுபடுத்தப்பட்டு தாழ்மையாக பேசப்படுகின்றனர்.
8. நல்லவர்களாக திகழ்வது:
கொடுமைகள் செய்பவர் வெளி உலகத்திற்கு நல்லவர்கள் போல அவரை காண்பித்து கொள்கின்றனர். அது மற்றவர்களை இது போன்ற நல்ல கணவன் வேண்டும் எனவும் தோன்ற வைக்கிறது. அவர்களின் கொடூர குணத்தை சமூகத்தில் இருந்து அழகாக மறைத்து வைத்து இருக்கின்றனர். அதனால் பெண்கள் அவர்களின் செயல்களை வெளியே சொன்னாலும் அதை மற்றவர்கள் நம்ப மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு ஆதரவு கிடைக்காது என்றும் நினைத்து கொடுமைகளை மறைக்கின்றனர்.
9. பழகிக்கொள்கின்றனர்:
காலம் போக போக அவர்களுடன் வாழப்பழகி கொள்கின்றனர். சிலர் உண்மையான காதலில் இது எல்லாம் சாதாரண ஒன்றுதான் என்று நினைக்கின்றனர். பெண்கள் பொறுமையாக இருப்பது மூலமும் அனுசரித்து செல்வது மூலமும் கணவர்களை மாற்ற முடியும் என நம்புகின்றனர். அதேபோல் இந்த நிலைமைக்கு அவர்கள் தான் காரணம் என்று பழியை தங்கள் மேலயே போட்டுக்கொண்டு, கணவனின் குணம் மாறிவிடும் என நம்பிக்கையில் அவர்களுடன் வாழ பழகிக் கொள்கின்றனர்.
பெண்கள் எவ்வளவு தான் முன்னேறினாலும், சுதந்திரமாக இருந்தாலும் கணவன் இல்லாத பெண் வாழ்க்கையில் தோல்வி உற்றவாளாக தான் இந்த சமூகம் பார்க்கிறது. ஒரு பெண் நஞ்சு உறவில் இருந்து வெளியே வந்தபின் சாதாரணமான அல்லது இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ விடாமல் இந்த சமூகம் இருக்கையில் அவர்கள் எப்படி நஞ்சு வாய்ந்த உறவுகளிலிருந்து வெளிவர நினைப்பார்கள்?