உருவ கேலிகளை நாம் பிறந்ததிலிருந்து ஒருமுறையாவது கேட்டிருப்போம். சொல்லப்போனால் பெரும்பாலான உரையாடல்கள் உருவ கேலிகளில் தான் தொடங்குகிறது. உருவ கேலி செய்பவர்கள் அதனை ஒரு விளையாட்டாக நினைத்து கூறுகின்றனர். ஆனால், உருவ கேலியை அனுபவிக்கும் ஒருவரை அது எந்த அளவில் பாதிக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள தவறுகின்றன. இதை கடந்த காலத்தில் பெரும்பாலானவர்கள் அவர்கள் படும் கஷ்டங்களை எல்லாம் வெளியே சொல்லாமல் இருந்தாலும், தற்பொழுது மக்கள் அதை வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
உருவ கேலி ஒரு சாதாரண நகைச்சுவை போல தோன்றலாம். ஆனால், உண்மையில் அது ஒரு நபரை மன அளவில் பாதிக்கிறது. உருவ கேலி உடல் பருமனாக இருப்பவர்கள் சந்திக்கும் அளவிற்கு, மெல்லிய உடல் கொண்டவர்களும் சந்திக்கின்றனர். அதாவது எப்படி இருந்தாலும் இந்த சமூகம் ஒருவரின் உருவத்தை வைத்து அவர்களை கேலி செய்கிறது.
உருவ கேலியை நகைச்சுவையாகயோ அல்லது அக்கறையின் வெளிப்பாடாகவோ எடுத்துக் கொள்ள முடியாது:
பெரும்பாலான மக்கள் உருவ கேலி காரணமாகவே மற்றவர்களுடன் பழகுவதை குறைத்து விடுகின்றனர். சிலர் உருவ கேலி செய்த பிறகு “உன்னோட நல்லதுக்கு தான சொல்றோம்”, “உன் உடல் ஆரோக்கியத்திற்காக தான் சொல்கிறேன்” என்று கூறுவர். ஆனால் அக்கறையாக கூறும்பொழுது உருவ கேலி செய்து தான் அதை சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. அக்கறையாக சொல்வதற்கு வேறு நிறைய வழிகளும் இருக்கிறது. உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதை விட அதிகமாக உருவ கேலி செய்வதை நிறுத்துவதும் அவசியம். ஏனென்றால், ஒரு மனிதரை அது மன அளவில் பாதிக்கிறது.
சொல்லப்போனால் சில சமயங்களில் நம்மை பார்த்தவுடன் நல்லா இருக்கியா? என்று கேட்பதைவிட என்ன குண்டாயிட்ட? என்ன ஒல்லி ஆகிட்ட? என்றுதான் கேட்பார்கள். சிலர் உருவத்தை வைத்து நக்கல் அடித்து சிரிப்பதும் உண்டு. இப்படி செய்வது எந்த விதத்திலும் யாருக்கும் நன்மை அளிக்க போவதில்லை. அவை சுய வெறுப்பையும், மன அழுத்தத்தையும் தான் அதிகரிக்கிறது.
திரைப்படங்களும், உருவ கேள்விகளும்:
இந்த சமூகத்தில் பெரும்பாலான நகைச்சுவைகள் உருவ கேலிகளாகத் தான் இருக்கிறது. அது திரைப்படத்திலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி. திரைப்படங்களும், நிஜ வாழ்க்கையும் ஒன்று கொண்டு இணைக்கப்பட்டவை. திரைப்படங்களில் சமூகத்தில் நடப்பதை சித்தரிக்கப்படுகிறது. அதைப்போல் நிஜ வாழ்க்கையில் சினிமாவை பார்த்து தான் மக்கள் நடந்து கொள்கின்றனர். திரைப்படங்களில் பெரும்பாலான நகைச்சுவை நடிகர்களை அவர்கள் திறமைக்காக நகைச்சுவை கதாபாத்திரத்தில் போடாமல் அவர்களை உருவ கேலி செய்வதற்காக மட்டுமே திரைப்படங்களில் பயன்படுத்துகின்றனர். மக்களும் அதைப் பார்த்து உருவ கேலி நகைச்சுவையான ஒன்று என்று கருதுகின்றனர்.
உருவ கேலி ஒருவரை மனதளவில் பாதிக்கிறது:
சிறுவயதில் இருந்து ஒருவரை உருவ கேலி செய்வதன் மூலம் அவர்கள் சுய வெறுப்பை பெறுகின்றனர். இந்த சுய வெறுப்பு அவர்களை பல விதங்களில் தாழ்மையாக கருத வைக்கிறது. குறிப்பாக அவர்கள் ஏதேனும் ஒரு திறமையை வெளிக்காட்ட நினைத்தால் இந்த தாழ்வு மனப்பான்மை அவர்களை எந்த ஒரு முயற்சியும் எடுக்க விடாமல் தடுக்கிறது. அப்படியே அதை மீறி அவர்கள் வெளிவந்து அவர்கள் திறமையை காட்டினாலும், "பரவாலையே குண்டா இருந்துட்டு இதெல்லாம் ஈசியா பண்றியே" அல்லது “பாக்குறதுக்கு ஒல்லியா இருக்க ஆனா பரவால்ல இதெல்லாம் உன்னால பண்ண முடியுது” என்று மறுபடியும் அவர்கள் உருவத்தை வைத்து மனிதர்களை எடை போடுகிறார்கள்.
முன்பு கூறியது போலவே உருவ கேலி எந்த விதத்திலும் யாருக்கும் எந்த ஒரு பயனும் அளிக்கப் போவதில்லை. உருவ கேலி நகைச்சுவை இல்லை. உருவ கேலி நலம் விசாரிப்பதற்கு அல்லது ஆரோக்கியமாக இருங்கள் என்று கூறுவதற்கும் ஒரு வழி அல்ல. உருவ கேலி எந்த ஒரு நன்மையும் அளிக்காமல் ஒரு மனிதரின் மனதளவில் சுய வெறுப்பை அதிகரிக்கிறது. பிறரை பாதிக்கும் ஒரு விஷயத்தை இனி நாம் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு மற்றவர்கள் பயன்படுத்துவதை நாம் கண்டாலும் அமைதியாக இல்லாமல் அவர்களுக்கு இதைப் பற்றி எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.