படங்களில் பெண்கள் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு பற்றி பலர் வெளிப்படையாக பேசி நாம் பார்த்திருப்போம். அதேபோல் படங்களில் பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று கூறியும், அந்த நிலை தற்போது மாறியும் வருகிறது. ஆனால், நாடகங்கள் பற்றியும் நாடகத்தில் பெண்களின் சித்தரிப்பு பற்றியும் பெரும்பாலானோர் பேசிய நாம் பார்த்திருக்க முடியாது.
சினிமாவை விட நாடகங்கள் பலதரப்பட்ட மக்கள்களால் பார்க்கப்படுகிறது. சில வீடுகளில் நாடகங்கள் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயமாக கூட கருதுகிறார்கள்.
இப்படி நாடகங்கள் பல மக்களிடம் சென்றடைவதால் அதில் காண்பிக்கும் காட்சிகள் மக்கள் மனதில் ஆழமாக பதிகிறது. எனவே, அதில் கூறப்படும் கருத்துக்களும், காண்பிக்கும் விஷயங்களும் சரியான ஒன்றாக இருக்க வேண்டும்.
சினிமாவில் எப்படி கதாநாயகனுக்கும் மற்ற ஆண்களுக்கும் முக்கியத்துவம் தருகிறார்களோ, அதேபோல நாடகங்கள் பெண்களை சுற்றி தான் அமைகிறது. அப்படிப்பட்ட நாடகங்களில் பெண்களை எப்படி சித்தரிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
நாடகத்தின் கதை:
பெரும்பாலான நாடகங்கள் திருமணத்தை சுற்றி தான் அமைகிறது. பல நாடகங்களில் ஒரே கதையை தான் வெவ்வேறு ஆட்களை கொண்டு எடுக்கிறார்கள். குறிப்பாக பல நாடகங்களில் கதாநாயகன் கதாநாயகியை விரும்புவான். அதே போல் மற்றொரு பெண்ணும் கதாநாயகன் மீது ஈர்ப்பு கொண்டிருப்பாள், அவனை அடைய வேண்டும் என்பதற்காக அவள் பல மோசமான திட்டங்களை தீட்டுவாள். இப்படி இருக்க வில்லியாக வருபவள் மாடர்ன் உடை அணிந்திருப்பவளாகவும், கதாநாயகியாக நல்ல எண்ணம் கொண்டவர்கள் புடவை அணிந்தவர்களாகவும் இருப்பார்கள்.
எந்த ஒரு கல்யாணமும் நாடகங்களில் சந்தோஷமாக இருப்பதாக காண்பிப்பதில்லை. அது பல போராட்டங்களுக்குப் பிறகும் அல்லது பல பிரச்சினைகளுக்கு பிறகு தான் நடப்பது போல காண்பிப்பார்கள்.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் பெண்களின் உடை:
முன்பு கூறியது போலவே நாடகங்களில் வில்லியாக வருபவள் பெரும்பாலும் மாடர்ன் உடைகள் அணிந்திருப்பதாகவும், அவள் நன்கு படித்தவளாகவும் தான் இருப்பாள். அதே போல் நாடகத்தின் கதாநாயகி பெரும்பாலும் இந்திய உடைகளில் இருப்பது போல சித்தரிக்கப்படுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் நன்கு படித்தவர்கள் திமிராக இருப்பதாகவும் , எதிர்மறையான நிகழ்வுகளுக்கு உடந்தையாக இருப்பது போல சித்தரிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் திருமணத்திற்கு முன்பு நல்ல படிப்பு தகுதியை பெற்றிருந்தாலும் திருமணத்திற்கு பிறகு வீட்டை பார்த்துக் கொள்ளும் ஒரு பெண்ணாகவே சித்தரிக்கப்படுகிறார். திருமணமான ஒரு பெண் எப்பொழுதும் புடவையில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அப்படி இருக்கும் பொழுது தான் சிறந்த பெண்களாக இருக்கிறார்கள் என்றும் நாடகங்கள் சித்தரித்துள்ளது.
திருமணங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி தானே தவிர அது மட்டுமே முழுமையான வாழ்க்கை கிடையாது. திருமணத்தை தாண்டி ஒருவரின் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் உள்ளது. பெண்கள் வேலைக்கு செல்வதும், பண சுதந்திரத்தை பெறுவதும் இந்த காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
பெண் சுதந்திரத்தையும், சமுதாயத்தில் சமத்துவத்தை உருவாக்குவதற்காகவும் பல பெண்கள் தினம் தோறும் சமூக விதிகளுடன் போராடி வருகின்றனர். அப்படி இருக்க இது போன்ற நாடகங்கள் மக்கள் மனநிலையில் நிறைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கிராமங்களில் இருக்கும் குடும்பங்கள் நாடகத்தை பார்ப்பது மூலம் அவர்கள் எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது என்றும் இப்படிதான் வாழ்க்கை இருக்கும் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள்.
இது சமூக சமத்துவத்திற்காக போராடும் பெண்களின் முயற்சிகளை ஒன்றும் இல்லாதது போல ஆக்கி விடுகிறது. நாடகங்களை மக்கள் தினந்தோறும் பார்ப்பதால் அவர்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் கொண்டு அதில் முழுமையாக கலந்து விடுகின்றனர். எனவே, நாடகங்களில் பெண்களின் சித்தரிப்பு பல நல்ல விதங்களில் மாறுவது சமூக சமத்துவத்தை உருவாக்க பெரிய பங்களிப்பை அளிக்கக்கூடும்.