சமூகத்தில் பேச தயங்கும் மாதவிடாயை கையாளும் முதல் தமிழ் தொடர் அயலி. பல குடும்பங்கள் எவ்வளவு மாடனாக இருந்தாலும் சில வகையான மாதவிடாய் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கின்றனர். கல்வி அறிவு பெற்று, பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும் பெண்கள் கூட தூய்மையற்றவர்களாக கருதப்பட்டு தனித்தனி பாத்திரங்கள் பயன்படுத்துவது, தரையில் உறங்குவது, குறிப்பிட்ட அறையில் தங்குவது போன்ற மாதவிடாய் கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த கதை 1990இல் தமிழ்நாட்டின் வீரப்பனை என்ற கிராமத்தில் நடப்பது போல அமைந்துள்ளது. நம்பிக்கையின் பெயரால் மூடநம்பிக்கைகள் மூலம் ஆணாதிக்கம் எவ்வாறு பேணப்படுகிறது என்பதை கூறுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் ஒரு இளம் பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் ஓடிப்போனதாக கூறி, இதனால் கிராம மக்கள் தங்கள் தெய்வமான அயலியின் கோபத்தால் பாதிக்க பட்டனர் என்ற கட்டுக்கதையை அனைவரையும் நம்ப வைத்துள்ளனர். அன்றிலிருந்து பருவம் அடைந்த அனைத்து சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டு, கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எட்டு எபிசோடுகளை கொண்ட இத்தொடர் வீரப்பனை கிராமத்தில் உள்ள பெண்கள் பருவமடைந்த பிறகு அவர்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் எப்படி பறிக்கப்படுகிறது என்பதை உணர்த்தும் அனிமேஷன் உடன் தொடங்குகிறது.
தொடரின் நாயகி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தமிழ். அவளுக்கு டாக்டராக வேண்டும் என்று ஆசை. அவள் தனது பத்தாம் வகுப்பை முடிக்க வேண்டும் என விரும்புகிறாள். அவள் தைரியமானவள், உறுதியானவள், நம்பிக்கை உடையவள். அவள் கிராமத்தில் உள்ள பாலின சமத்துவமின்மை, மூடநம்பிக்கை மற்றும் ஆணாதிக்க நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்குகிறாள். அவளது தோழிகள் ஒருவருக்கு பின் ஒருவராக வயதிற்கு வந்த பிறகு பள்ளியை விட்டு வெளியேறி, திருமணம் ஆகி, துன்பத்திற்கு ஆளாகின்றனர். தன் தோழிகளின் வாழ்வு நரகத்தில் விழுவதை கண்டு தமிழுக்கு பயம் வாட்டி வதைக்கிறது.
ஒரு நாள் அவளும் பருவம் அடைகிறாள். பெரிய கனவுகளுடன் இந்த சிறிய கிராமத்தில் அவள் என்ன செய்யப் போகிறாள்? கிராமத்தின் மூடநம்பிக்கை பழக்கங்களுக்கு அடிபணிய வேண்டாம் என்று அவள் முடிவு செய்து, தான் பருவம் அடைந்து விட்டால் என்ற உண்மையை எல்லோரிடமிருந்து மறைக்கிறாள். பின்னர் அவளது தாயார் உண்மையை கண்டறிந்ததும், தமிழ் அவளை ஆதரிக்கும்படி சமாதானப்படுத்துகிறாள். தமிழுக்கு எதிராக ஒரு முழு கிராமமும், ஒரு பெரிய ரகசியமும் மறைக்கப்படுவதால் தமிழால் தன் கனவை நிறைவேற்ற முடியுமா?
தமிழ் தனது லட்சியத்தில் உறுதியாக இருக்கிறாள். பல தடைகள் வந்தும் அதற்கு தயங்காமல் இருக்கிறாள். அவளது கதாபாத்திரம் மிகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பெண் பருவம் அடைந்தவுடன், அவளுக்கு வாழ்நாள் முழுவதும் தெரிந்தவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதை கண்டு அவளுக்குள் இருக்கும் குழந்தை குழப்பம் அடைகிறது. மாதவிடாய் போன்ற இயற்கையான ஒன்று பெண்களின் வாழ்க்கையின் இத்தகைய கடுமையான மாற்றத்தை கொண்டு வருமா என்று அவளும் அதிர்ச்சி அடைகிறாள்.
ஒரு பெண் பருவமடைந்து விட்டாள் என்பதை சமூகம் அறியும் நிமிடத்தில் அவளை தவிர மற்ற அனைவரும் அவள் வாழ்கையில் கருத்து கூறுகின்றனர்.
- பருவமடைந்த பிறகு பெண்கள் ஏன் தங்கள் வாழ்க்கையில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்?
- பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றத்திற்கு ஏன் பகுத்தறிவற்ற கட்டுப்பாடுகளை திணிக்கின்றனர்?
- ஒரு பெண்ணின் கால்களுக்கு இடையில் நடக்கும் எல்லாவற்றிலும் குடும்பம் மற்றும் சாதியின் மானம் ஏன் வைக்கப்படுகிறது?
- இயற்கையான ஹார்மோன் மாற்றங்களுக்கு பெண்கள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?
- பெண்களின் கனவுகள் ஏன் திருமணத்திற்காக விற்கப்படுகின்றன?
- பெண்கள் வெறும் குழந்தை பெறும் இயந்திரமா?
- அவர்களுக்கு சொந்த கனவுகள் இல்லையா?
- சமூகம் எப்போது பெண்களை சமமாக முடிவு எடுக்க அனுமதிக்க போகிறது?
இது அனைத்தும் பார்வையாளர்களின் சிந்தனையை தூண்டும் சில கேள்விகள்.
அனைத்து நடிகர்களும் அவர்களின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உள்ளனர். மாதவிடாயை சுற்றியுள்ள தடைகளையும், மூடநம்பிக்கைகளையும் ஆராய்வதோடு பெரும்பாலான குடும்பங்களில் ஆணாதிக்கம் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதையும் அயலி காட்டுகிறது.
இந்த விஷயத்தை தேர்ந்தெடுத்த இயக்குனர் முத்துக்குமாரை பாராட்ட வேண்டும். ஆணாதிக்க திட்டத்தை நடத்துவதற்கு பெண்களை பலிகடாக்களாக பயன்படுத்தும் இறுக்கமான சமூகத்தின் நம்பிக்கைகளை பற்றி இது ஒரு உரையாடலை தொடங்கியுள்ளது.
அயலியில் எழுப்பப்படும் கேள்விகள் அந்த காலத்தில் மட்டுமல்ல இப்பொழுதும் அவை பொருத்தமாகவே உள்ளது. தமிழும், மற்ற பெண் கதாபாத்திரங்களும் எழுப்பும் கேள்விகள் அனைத்தும் இன்றும் பெண்களால் அவர்கள் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. இந்த தொடரை ZEE5 இல் நீங்கள் பார்க்கலாம். இந்த தொடர் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று.
Suggested Reading: எச்சரிக்கை பெண்களே: மாதவிடாயின் அதிக இரத்தப்போக்கு ஆபத்தானது
Suggested Reading: 5 வகையான வெள்ளைப்படுதல் மற்றும் அதற்கான அர்த்தம்