/stp-tamil/media/media_files/dOIDY6v87cIQcbzp5GH6.png)
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி தெரிவதில்லை. குறிப்பாக எண்டோமெட்ரியோசிஸ் (இடமகல் கருப்பை அகப்படலம்) பற்றிய விழிப்புணர்வு இல்லை. எண்டோமெட்ரியோசிஸ் பரவலாக உள்ளது ஆனாலும் பெண்கள் மருத்துவரை அணுகுவதற்கு பதிலாக அதை சகித்துக் கொள்கின்றனர்.
பெண்கள் அவர்களுக்கு மாதவிடாய் தள்ளி போனால் மருத்துவரிடம் உடனடியாக செல்கின்றனர். ஆனால், மாதவிடாய் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், வலி அதிகமாக இருந்தால், ஏழு நாட்களுக்கு மேல் மாதவிடாய் நீடித்தால் அதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்கின்றனர். மாதவிடாய் காலத்தில் வலி வருவதை எதார்த்தமாக கருதுகின்றனர். அதனால் அதைப்பற்றி பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மாதவிடாய் காலத்தில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டால் அதை கவனிக்காமல் இருக்கும் பொழுது அது எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறியாக இருக்கலாம்.
எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன?
எண்டோமெட்ரியோசிஸ் பெண்களின் கருப்பையில் ஏற்படும் ஒருவிதமான பிரச்சனை. கருப்பையின் உட்புறத்தில் உள்ள திசு (எண்டோமெட்ரியோல் திசு) கருப்பைக்கு வெளியே பெல்விக்ஸ் (pelvis) மற்றும் ஃபாலோபியன் குழாய்கள்(fallopian tube) போன்ற பகுதிகளில் வளர்வது. இப்படி அது வளரும் காரணமாக கடுமையான வலியும், அதிக இரத்தப்போக்கும் ஏற்படுகிறது.
தெற்கு ஆசிய நாடுகளில் எண்டோமெட்ரியோசிஸ்:
மாதவிடாய் காலங்களில் மிகக் கடுமையான வலி இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து இருந்தால் அது எண்டோமெட்ரியோசிஸாக கூட இருக்கலாம். தெற்கு ஆசியா மக்களிடையே எண்டோமெட்ரியோசிஸ் அதிக அளவில் உள்ளதாக ஆய்வுகள் மூலம் ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
உலகளவில் 247 மில்லியன் பெண்கள் எண்டோமெட்ரியோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 42 மில்லியன் பெண்கள் இந்தியாவில் இருப்பதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, எண்டோமெட்ரியோசிஸ் காய்ச்சல் போன்று பொதுவானது, இது பெண்களிடையே மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட பிரச்சினையாகும்.
பெண் சனத்தொகை 11.20 மில்லியனாக இருக்கும் இலங்கையில் 10 பெண்களில் ஒருவர் எண்டோமெட்ரியோசிஸால் (இடமகல் கருப்பை அகப்படலம்) பாதிக்கப்பட்டுள்ளார். காகசியர்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை விட ஆசியப் பெண்களுக்கு எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.
எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பை பற்றி நிறைய சான்றுகள் வழங்கினாலும், அதனுடைய பின் விளைவுகளை விளக்கினாலும் பெண்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. தற்போது பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகும் இன்னும் எண்டோமெட்ரியோசிஸ்க்கு நிரந்தர தீர்வை கண்டுபிடிக்கவில்லை. அதனால், ஆரம்ப காலத்திலேயே அதற்கு சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது.
எண்டோமெட்ரியோசிஸ் விளைவுகள்:
எண்டோமெட்ரியோசிஸ்க்கு சிகிச்சை அளிக்காமல் விட்டால் அது மோசமான உடல் பிரச்சனையாக மாறும். உதாரணமாக, இடுப்பு வலி, குழந்தையின்மை, டிஸ்மெனோரியா(அதிக வலியுடன் மாதவிடாய்), டிஸ்பேரூனியா(உடலுறவின் போது அதிகமான வலி) மற்றும் நடக்கும்போது, உடற்பயிற்சி செய்யும் போது கூட வலி ஏற்படலாம். இதனை கண்டுக்காமல் விட்டால் பெரிய அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும்.
எண்டோமெட்ரியோசிஸ் நோயாளிகளின் சமூக மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இது ஒரு பெண்ணின் அன்றாட நடவடிக்கையை பாதிப்பது மட்டுமின்றி மனநிலை மாற்றத்தையும் ஏற்படுத்தும்.
மேலும், இது எண்டோமெட்ரியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பொது இடங்களுக்கு செல்வது கூட சிரமமான ஒன்றாக மாறிவிடலாம். வேலையும் பாதிக்கப்படலாம், அவள் அடிக்கடி விடுப்பு எடுக்க விண்ணப்பிக்க வேண்டியிருக்கும், இது அவளுடைய தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கலாம்.
இந்திய குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு எண்டோமெட்ரியோசிஸ் பற்றி தெரிவதில்லை. அதற்கான காரணம் அதிகப்படியான இரத்தப்போக்கு ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. ஆனால் இந்த தவறான எண்ணம் மாற வேண்டும். நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், இதனால் பெண்களுக்கு ஆரோக்கியமான மாதவிடாய் இருக்கும், மேலும் மாதவிடாய் வலியை இயல்பாக்குவதற்கு பதிலாக, அவர்கள் என்ன மாற்றங்களைச் சந்திக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.